பிறை 22
ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி)
நீண்டு மெல்லிய உருவினராக இருந்த இவர்கள் துவக்கத்தில்நாற்தாயிரம் திர்ஹங்களைப்பெற்றிருந்த பெரிய வணிகராய் விளங்கினர். இவர்கள்மக்காவில் வாணிபம் செய்த இடம் இன்னும் மக்காவில் இருக்கிறது. மக்காவில் வாழ்ந்த வீடு இன்று ஒரு பள்ளி வாயிலாகஉள்ளது.
எளிய, இனிய இயல்பு வாய்க்கப் பெற்றவர்கள். வம்சாவளியைப் பற்றியும், கனவுகளுக்குப் பொருள் விரிப்பது பற்றியும் இவர்கள் சிறந்த அறிவுபெற்றிருந்தார்கள்.குறைஷிகளிடையே ஏற்படும் பிணக்குகளைத்தீர்த்து வைப்பார்கள். வாணிபம் பற்றியும், சமூக விசயங்கள் பற்றியும் இவர்களுடன் ஆலோசனை கலப்பதற்காக மக்கள் இவர்களின் இல்லத்திற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருப்பர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா(ரலி) அவர்களை மண முடித்த பின் கதீஜா (ரலி) அவர்களின் இல்லத்தருகே இவர்களின் கடை இருந்ததால் பெருமானாரிடம் நட்பேற்பட ஏதுவாயிற்று.
சித்தீக் நாயகம் அவர்கள் தங்களின் வாணாளில் ஒருநாளேனும் உருவத்தைத் தொழுததில்லை. அரபி களுக்கு வழிகாட்ட ஒரு நபியை இறைவன் அனுப்பமாட்டானா என்று துவக்கத்தில்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து ஏங்கினார்கள்.இதைப்பற்றி அணணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிற்காலத்தில் குறிப்பிடும் பொழுது, “நானும், அபூபக்ரும் பந்தயத்தில்விடப்பட்ட இரு குதிரைகள் போன்றிருந்தோம். நான்அவரை முந்திவிட்டேன். எனவே அவர் என்னைப் பின்தொடர்ந்தார்.அவர் முந்தியிருப்பாராயின் நான் அவரைப் பின் தொடர்ந்திருப்பேன்” என்று கூறினர்.
இவர்களின் பணிவைப் பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும்பொழுது, “நடமாடும் பிரேதத்தை எவரும் காண விரும்பின் அவர்கள் அபூபக்ரைப் பார்க்கட்டும் ”என்று கூறினர். ஒரு முறை அபூதர்தாஉ (ரலி) அவர்கள்அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன் நடந்து செல்வதைக் கண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், “உமக்கு மேலானவருக்கு முன்பா நடந்து செல்கிறீர்? இறைத் தூதர்களுக்கு அடுத்தபடியாக அபூபக்ரைவிட மேலானவருக்குப் பொழுது புலரவுமில்லை; படவுமில்லை என்று கூறினர்.
வயதுவந்த ஆடவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இவர்களே. “நான் மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்தபொழுது எவ்விதத்தயக்கமுமின்றி அதனை ஏற்றுக்கொண்டவர் அபூ குஹாஃபாவின் மகனேயன்றி வேறெவருமில்லர். எல்லாருடைய இறை நம்பிக்கையும் வைத்து நிறுக்கப்படின் அவருடையதுதான் கனக்கும். சுவனத்தில் புகுபவர்களில் அவர்தாம் முதல்வராயிருப்பார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.
இஸ்லாத்திற்காக இவர்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், அடிகளும் உதைகளும் கொஞ்சமன்று. இவர்களின் பணம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பணம் போன்றே இஸ்லாத்திற்காகப் பயன்பட்டது. “அபூபக்ரின் செல்வம் போன்று வேறு எவருடைய செல்வமும் எனக்குப் பயன்படவில்லை. எல்லோருடைய கடனையும் நான் தீர்த்துவிட்டேன். ஆனால் அபூபக்ருக்கு மட்டும் தான் கடன்பட்டுள்ளேன்.அதற்குப் பிரதியைஅல்லாஹ் அவருக்கு மறுமையில் வழங்குவான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினர்.
மேலும் சித்தீக் நாயகம் பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழரிடம் எடுத்துரைக்கும்பொழுது, “அவர் அதிகமாக நோன்பு நோற்றதாலும், தொழுததாலும் உங்களை விட மேலானவராக இல்லை. அவருடைய இதயத்தில் இடம் பெற்றிருக்கும் ஒன்றால் அவர் உங்களைவிட மேலானவர்” என்றனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் மதீனா செல்லத்தேர்ந்தெடுத்தது அபூபக்ர் (ரலி) அவர்களைத் தாம். தெளர் குகையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்ததைப் பற்றி இறைவன் தன் திருமறையில் குறிப்பிடும் பொழுது, “ஃதானியஃத் னைன்”(இருவரில் ஒருவர்) என்று கூறிய சொற்றொடர் இவர்களின் சிறப்புப் பெயராக விளங்குகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனா புறப்பட்ட பொழுது இவர்களிடம் எஞ்சி இருந்தது ஐயாயிரம் திர்ஹங்கள்தாம் இப்பொழுது மதீனாப் பள்ளிவாயில் இருக்கும் இடம் இவர்களின் பணத்தினால் வாங்கப்பட்டதேயாகும்.பத்ருப்போரில்தம் மகனை எதிர்த்துப் போர்செய்ததோடு அண்ணல்நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தங்கியிருந்த குடிலைக் கண்ணை இமை காப்பது போன்று காத்தும் நின்றனர்.
பத்ருப்போரில் சிறை செய்யப் பட்டவர்களைக் கொன்றுவிட வேண்டு மென்றுசிலர் கூறியபொழுது,“ இழப்புத் தொகை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளித்து விடலாம்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆலோசனை கூறிய இரக்க உள்ளம் கொண்டவர்கள்.இவர்களை வானவர்களில் மீக்காயீல்(அலை) அவர்களுக்கும், நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், ஈஸா (அலை) அவர்களுக்கும் உவமையாகக் கூறினர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும்கலந்து கொண்டார்கள், தபூக் படையயடுப்பிற்காக தங்களின் உடைமைகள் அனைத்தையும் வழங்கினார்கள்.
“உம் குடும்பத்தினருக்காக ஏதேனும் வைத்துவிட்டு வந்துள்ளீரா” என்று வினவிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் வைத்துவிட்டு வந்துள்ளேன்” என்றனர். ஹஜ்ஜுக்குச் செல்பவருக்குத் தலைவர் (அமீருல் ஹஜ்) ஆக ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டில் அபூபக்ர் அவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்துச் சிறப்புச் செய்தனர். இஸ்லாமிய வரலாற்றில் இவர்களே முதல் ‘அமீருல் ஹஜ்’ ஆவர்.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற காலைத் தமக்குப் பதிலாகத் தொழ வைக்கத் தேர்ந்தெடுத்ததும் இவர்களைத்தாம். அப்பொழுது இவர்கள் பதினேழு முறை தொழவைத்துள்ளனர்.அச்சமயம் மதீனாப் பள்ளிவாயிலை நோக்கித் திறக்கப்பட்ட கதவுகளில் அபூபக்ர் (ரலி) அவர்களின் இல்லத்தின் கதவைத் தவிரவேறு எல்லாக் கதவுகளையும் மூடிவிடுமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தனர். இவர்கள்தம் வீடு இருந்த இடம் இப்பொழுதுமதீனாப் பள்ளியுடன் இணைக்கப்பட்டு அங்கு ‘இது அபூபக்ரின் வீடு’ என்று அரபியில் எழுதப்பட்டுஇருக்கிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்த பொழுது, “அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறுபவர்களின் தலையைத் துணிப்பேன்” என்று உமர் (ரலி) அவர்கள் கர்ச்சித்துக்கொண்டிருந்த சமயம் உண்மையை விளக்கி மக்களுக்கு ஆறுதல் கூறினர். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் கலீபாவாக உமரையோ, அபூ உபைதாவையோ தாம் தேர்ந்தெடுக்குமாறு இவர்களே மக்களிடம் கூறினர். ஆனால் அவர்களோ இவர்களின் கரம் பிடித்து “பைஅத்” செய்து இவர்களையே கலீபாவாக ஆக்கினர். உமர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேடைக்குத் தயக்கத்துடன் சென்ற இவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்த படியில் அமராமல் அதற்கு அடுத்தாற்போல் கீழிலிருந்த படியில் அமர்ந்தே மக்களிடம் ‘பைஅத்’ பெற்றார்கள்.கலீபத்துர் ரசூலுல்லாஹ்’ என்னும் பட்டத்துடன் கலீபா பதவி ஏற்ற அடுத்த நாளே துணி மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வாணிபத்திற்குச் சென்றதைக் கண்டு தங்களின் முழுக் கவனத்தையும் அரசாங்கஅலுவல்களில் செலவழிக்கும் பொருட்டுபொதுக் கருவூலத்திலிருந்துசம்பளம் வழங்கப்பட்டது.
கலீபாவாக இருந்த இரண்டாண்டு மூன்று மாதம் பதினொரு நாட்களில் (கி.பி. 632 - 634) சில படையயடுப்புகள் நிகழ்ந்தன. யமன், யமாமா, உம்மான் அகிய நாடுகளிலிருந்தவர்கள் ‘ஜகாத்’ செலுத்த மறுத்த பொழுது மென்மை நிரம்பிய இவர்கள் வெஞ்சினம் கொண்டு அவர்கள் செலுத்தவேண்டிய ‘ஜகாத்’ தொகையில் கடைசி திர்ஹம் செலுத்தும்வரை அவர்களுடன் போர் செய்யப் போவதாகச் சூளுரைத்தனர். ஆட்சி தொடங்கிய ஆறுமாத காலத்திற்குள்காலித் (ரலி) அவர்கள் நடத்திய போர்களில் மத்திய அரேபியா முழுவதும் அடிபணிந்தது. பின்னர் நடந்த போர்களில் ரோமானியப் பெரும்படைபுறமுதுகிட்டோடியது. நபியயன்று வாதாடிய துலைஹா தோற்று இஸ்லாத்தைத் தழுவினார். மற்றொரு போலி நபியாகிய முஸைலமா வெட்டி வீழ்த்தப்பட்டார். முஸைலமாவுடன் நடந்த போரில் திருக்குர்ஆனை மனனம் செய்திருந்த பலர் இறந்ததால் உமர் (ரலி) அவர்களின் ஆலோசைனையின்படி குர்ஆனை ஒன்று சேர்த்து உருவாக்கும் பணியை ஸைத் இப்னு தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு முதன் முதலாக திருக்குர்ஆனை ஒன்று சேர்த்து உருவாக்கிய பெருமை சித்தீக் நாயகம் அவர்களையே சாரும். இறப்புப்படுக்கையில் கிடக்கும் பொழுது தமக்குப் பின் கலீபாவாக உமர் (ரலி) அவர்களை நியமித்தனர். “அவர்கள் கடுமையானவர் களாயிற்றே” என்று மக்கள் ஐயம் தெரிவித்தபொழுது,“அவரின் இயல்பை நான் நன்கு அறிவேன். நான் கடுமையாக இருக்கும்பொழுது அவர் என்னை மென்மைப்படுத்துவார். நான் மென்மையாக இருக்கும் பொழுதுகடுமையாக இருக்குமாறு எனக்கு அறிவுரை பகர்வார்” என்றனர். “நான் அல்லாஹ்வின் திரு முன்செல்லும்பொழுது, ‘எனக்குப்பின் உன் படைப்புகளில் மேலானவரை நான் தலைவராக ஏற்படுத்தி வந்துள்ளேன்’ என்று கூறுவேன்” என்றும் இயம்பினர்.
தாம் கலீபாவாக இருந்த பொழுது சம்பளமாகப் பெற்ற 6,000 திர்ஹங்களையும் தமக்குரிய நிலத்தை விற்றுப் பொதுநிதியில் சேர்த்து விடுமாறு பணித்தார்கள்.அக்காலை தாம் பெற்றிருந்த ஒரு நீக்ரோ அடிமையையும்,ஓர் ஒட்டகையையும், ஒன்றே கால் ரூபாய் மதிப்புள்ள துணியையும் அடுத்து கலீபாவாக வரும் உமர் (ரலி) அவர்களிடம்ஒப்படைத்து விடுமாறு இவர்கள் கூறினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் (ரலி)அவர்களே! தங்களுக்குப் பின்னர் கலீபாவாக வருபவர்களின் கடமைகளை மிகவும் சிரமமாக்கி விட்டீர்களே”என்று கூறிக் கண்ணீர் வடித்தனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே போன்று தாமும் திங்கட்கிழமையே இறக்க விரும்புவதாகக் கூறிய இவர்கள் ஹிஜ்ரி13, ஜமாதுல்ஆகிர் 22-ஆம் நாள் திங்கட்கிழமையே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று தங்களின் 63-ஆம் வயதில் இவ்வுலகு நீத்தனர். இவர்களின் விருப்பப்படிஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அண்மையில் நல்லடக்கம செய்யப்பட்டனர்.
(இ.கலைக்களஞ்சியம்)