• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Apr 2012   »  ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


 ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


 

நாம் ரஸூலுல்லாஹ்வின் பிள்ளை.  முஹிய்யுத்தீனின் அரவணைப்பில் உள்ளோம்.  எதற்கும் அஞ்சோம்.  உண்மையே பகர்வோம்.  நன்மையே செய்வோம். பொய்மையை அழிப்போம்ஒழிப்போம்.ஏகத்துவ வாள் எம்கையில் உள்ளது. அதுவே அல்லாஹ்வும்ரஸூலுல்லாவும், எம் உயிர்ப் பாட்டனார் முஹிய்யுத்தீன் ஆண்டவர்களும் எமக்குக் கொடுத்த ஆயுதம், அதுவே எமக்குப் போதும்.  எதிரிகளை அதனால் ஒழிப்போம்.  ஹக்கு என்பது என்ன என்பதை உலகறியச் செய்வோம்.

நாம் நாமாக இருந்து நாமானோம்.  இனியும் நாமாகவே இருப்போம்.  ஏனெனில் நாமல்லாத ஒன்றை எம்மிலிருந்து பிரித்துக்காணமுடியாதுள்ளோம்.  எல்லாம் நாமே.  ஞானானந்த ஞான ஜோதிகள் இன்று உலகத்தில் தோன்றவில்லையானால் உலகம் எங்கே? இன்று நம்மாலேதான் உலகம் உய்வடைகிறது.


ஹக்கல்லாத வேறொன்றுமில்லை.யாவும் எங்கும் நிறைந்தது இதுவே என்ற பூரணமான கருத்து உள்ளத்தில் அமைதல் வேண்டும்.  அதுதான் யாவற்றையும்  பூரணப்படுத்தும்.  எல்லாம் யாவும் பூரணமாய் நிறைந்து விரவிக் கலந்துஅது இது ஆங்கிங்கு அவனிவன் என்றில்லாததே ஹக். எல்லாம் ஹக்கின் திருவிளையாடலே. எல்லாம்நித்திய சத்தியின் தத்துவமே. சக்திக்கு இனமில்லை, மதமில்லை, சாதியில்லை, நிறமில்லை,பாபமில்லை, புண்ணியமில்லை அது தன்மயமே.  ஜோதி மயமே. நிறைந்த நிலையே. கனிந்த அருளே.  எல்லாம் அதுவே.  நிறைந்த நிறைவே.  அதுவே ஹக்.  

உருவம் பருமனானது.  அதுவே தங்கி மக்களை ஏய்த்து ஏமாற்றி மயக்கத்துள்மாள்கிறது.  அருவ ஆயுளோ - உயிரோ தன்னைச் சூழஇருக்கும் அனைத்திலும் மீள்கிறது.  எல்லாம்ஹக்கே.  அது அல்லாதது வேறு ஏது?...  அருவமும் உருவமும் அதுவே.  அனைத்திலும்ஹக்கைக் காண்பதே ஹக்கை கணந்தோறும் மறவாமல் இருப்பதற்குரிய ஒளசதமாகும்.

ஹக்கை தரிசிப்பதே நம்மை தரிசிப்பதாகும்.  நம்மை தரிசிப்பதே ஹக்கைதரிசிப்பதாகும்.  இதுவே சாந்தியாகும்.  நாம் அல்லாத வேறொன்றுமில்லை என்ற மூல மந்திரம் உங்கள் மனதிலும் மூச்சிலும் ஊறிப்போக வேண்டும்.

நாம் யாவரும் ஹக்கிடம் செல்ல வேண்டியவர்கள்.  உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவை.  மீதியாக உள்ளதுஹக்கு ஒன்றே.  ஹக்கை மறவாதீர்கள்.  ஹக்கை மறந்தவர்களுக்கு ஈடேற்றம் இல்லை.  ஹக்கை உரியவர்களுக்கு உரிய இடத்தில், உரிய முறையில் வெளியிட பின்னடைய வேண்டாம்.  ஹக்கின் திருநாமம் எங்கும் பரவ வேண்டும். அதற்கானவழி செய்தல் வேண்டும்.  நாம் இதற்காகவே உதயமானோம்.  இறந்து, மடிந்து, மருண்டு, மயங்கி இருக்கும் இதயங்களை ஹயாத்தாக்கவே (உயிர்ப்பிக்கவே)நாம் உதித்தோம்.

 

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் 49ஆவது பிறந்த தின விழா மலரிலிருந்து.....