அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு
அத்தியாயம் : 89
எதிரிகள் திரும்பிச் சென்றனர்.
உஹது யுத்தம் ஒருவாறு முடிந்து விட்டது. ஹிந்தா என்ற கொடியவளின் களியாட்டம் ஒருபுறம் இருக்க, குறைஷிக் காபிர்களில் ஓரிருவர் இன்னும் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கேடு கெட்ட ஆவலுடன் அங்கே சிதறுண்டு கிடந்த சடலங்களை வெட்டி முடமாக்க முனைந்தனர். ஐயகோ! என்ன கொடுமை இது?
குறைஷிக் காபிர்களின் நாடோடிப் போர் கூட்டுறவானை இத்தீய செயல் வெறுப்படையச் செய்தது.அவர்கள் முகம் சுளித்தார்கள் “அடப்பாவிகளே இன்னுமா உங்களுக்கு கொலைவெறி அடங்கவில்லை?” என்று கூறிக்கொண்டார்கள். அப்போது குறைஷ் காபிர்களின் தலைவர் அபூஸுப்யான், ஹளரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் வாயருகில் ஈட்டியைக் குத்தி, “ஓ புரட்சி வீரனே! சுவைத்துப்பார்!” என்று எக்காளமிட்டுச் சிரித்தார். கினானாவின் ஒரு கோத்திரத்தின் தலைவரான ஹுலைஸ் அவ்வேளை அவ்வழியாக சென்று கொண்டிருந்தார்.
அவர் அபூஸுப்யானின் இக்கொடிய செயலைக் கண்டுவிட்டார். உடனே அவர், “ஓ கினானாவின் மக்களே இதோ பாருங்கள். யுத்தத்தில் இறந்துவிட்ட தனது ஒன்று விட்ட சகோதரனின் உடலை இந்தப் பாடுபடுத்தும் இவரா குறைஷியர்களின் தலைவராக இருக்கத் தகுதியானவர்?” என்று கூக்குரலிட்டார்.
இதைக் கேட்டு விட்ட அபூஸுப்யான் திடுக்கிட்டுப் போனார். உடனே ஹுலைஸ் என்பவரை அணுகி, தயவுகூர்ந்து நீர் இங்கே கண்டதை யாரிடமும் சொல்ல வேண்டாம். ஏதோ தவறுதலாக நடந்து விட்ட ஒரு சம்பவமாகக் கருதி விட்டு விடவும்” என்று வேண்டினார்.
அன்று அபூஸுப்யான் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று வேண்டியது இன்றுவரை நாம் படிக்கும் அளவுக்கு வரலாற்றில் பதியப்பட்டு விட்டது. அண்ணலாரின் வரலாற்றில் பதியப்படாத சம்பவங்கள், நிகழ்ச்சிகள் ஒன்றுகூட இருக்க முடியாது. இதுவே ஓர் அற்புதம் தான்.
அபூஆமிர் தன் மகன் ஹன்ஸலாவின் உடலைக் கண்டதும் துடிதுடித்துக் கண்ணீர் விட்டார் “ஓ என் அருமை மகனே! நான் தான் உன்னை இந்த நபிகளாருடன் சேர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேனே. அய்யோ நீ என் பேச்சைக்கேட்க வில்லையே. இப்போது இங்கு வீரத்துடன் போரிட்டு உதிர்ந்து போன மலர்களானவர்களுடன் நீயும் சாய்ந்து கிடக்கிறாயே என்ன சொல்வேன்! என்று வாய்விட்டு அழுது புலம்பினார். பிறகு அங்குமிங்கும் சுற்றி நோட்டமிட்டார். அங்கேவீரத்தின் சின்னமாக வீழ்ந்து கிடந்த ஹளரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை சுட்டிக் காட்டி, இவருக்கு, அல்லது முஹம்மதைப் பின்பற்றியவர்களுக்கு இறைவன் கைமாறாக நன்மையை அளிப்பானாயின் அந்த இறைவன் உனக்கும் சேர்ந்து அளிப்பானாக! என்று இறைஞ்சிவிட்டு, அங்கே தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த ஹிந்தா, மற்றுமுள்ள பெண்களைப்பார்த்து, கடுமையான குரலில் உரக்கக் கூறினார் : “இதோ என் மகன் ஹன்ஸலா உங்களுக்கும் எமக்கும் எதிராகப் போரிட்டுமாண்டு கிடக்கிறான். இவனது சடலத்தை மேலும்வெட்டி முடமாக்கிவிடாதீர்கள்.”
ஒரு தந்தையின் வேண்டுகோளை ஏற்று ஹன்ஸலாவின் சடலத்தை அக்குறைஷிகாபிர்கள் ஒன்றும் செய்யாது விட்டு விட்டார்கள்.
உபை என்பவன் சொன்னது பொய்யல்ல. இன்னும் முஹம்மது உயிருடன் உஹது மலை மீது எங்கோ இருப்பதாகக் குறைஷிகள் நம்பத் தொடங்கினார்கள். யுத்தம் முடிந்து விட்ட நிலையில் மலை மீது ஏறி மீண்டும் ஒரு யுத்தமிடுவது முடியாத காரியமாக இருந்தது. அடிமைகள் பாசறைகளைப் பிரித்து ஒட்டகங்களின் மீது ஏற்றி விட்டார்கள். யுத்தகாலத்தில் கைப்பற்றிய பொருட்களையும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள். எதிரிகள் கபீலா புறப்படத்தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது அபூஸுப்யான்தனது செம்மண் நிறக் குதிரையின் மீது ஏறி பெருமானார் அவர்களும் அவர்களின் தோழர்களும்மறைந்திருக்கலாம் எனக் கருதிய இடத்தில் நின்று கொண்டு, உரக்க சப்தமிட்டார்.“ கவனியுங்கள். யுத்தம் என்பது மாறி மாறி செல்லக்கூடியது. முன்பு நடந்துவிட்ட நிகழ்ச்சிக்கு பழிவாங்கவே இன்று இந்த யுத்தம் நடந்துள்ளது. நாளையும் இதுபோன்று ஒன்று நடக்கும். கவனமாக இருங்கள். ஓ ஹுபல்! உனக்கே எல்லாப் புகழும். உனது மதத்தை நீநிலைக்கச் செய்வாயாக” என்று கூறினார்.
உடனே நபியவர்கள் தங்கள் பதிலை ஹளரத்உமர் (ரலி) அவர்களிடம் சொல்லியனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூஸுப்யான் காதில் விழும் வண்ணம் ஒரு பாறைமீது ஏறி, “அல்லாஹ்வே மிகப்பெரியவன், மாட்சியில் அவனே உயர்ந்தவன். நாம் அவனுக்கு சமமானவர்கள் அல்லர். எம்மில் மரணித்தோர் சுவனத்தில் இருக்கிறார்கள். உங்களவர்களோ நரக நெருப்பில் வீழ்ந்து கிடக்கிறார்கள்”என்றார். ஹளரத் உமர் (ரலி) அவர்களின் குரலைக் கண்டு கொண்ட அபூஸுப்யான். “ஓ உமரே, உண்மையாகச் சொல்லும். உமது நபி உம்முடன் உயிருடன் இருக்கிறாரா?” உடனே ஹளரத் உமர் (ரலி) அவர்கள் “அதில் உமக்கென்ன சந்தேகம். இதோ எங்களுடன் தான் இருக்கிறார்கள்” என்றார். உமது வார்த்தையை நான் நம்புகிறேன் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுத் திரும்பினார். அப்போதும் அவர் வாய் சும்மா இருக்கவில்லை. “அடுத்த வருடம்நான் உங்களை சந்திக்கும் இடம் பத்ரு” என்றது. உடனே அண்ணலார் அவர்கள் மற்றொரு தோழரிடம் தம் பதிலைச் சொல்லி அனுப்பினார்கள்.“இம் ஆகட்டும். உம்முடைய இந்த வாக்கு எம்மிடையே நடக்கப்போகும் பலப்பரீட்சைக்கு ஓர்ஒப்பந்தமாக இருக்கட்டும்”.
உஹது மலையின் அடுத்த பக்கத்தில் தமக்காக காத்துக் கொண்டிருந்த தம்குதிரைப் படையினருடன் போய்ச் சேர்ந்து கொண்டார் அபூஸுப்யான். நபிகளார் ஸஅத் (ரலி) என்றதோழரை அனுப்பி, “எதிரிகளின் படைகள் ஒட்டகத்தின்மீது ஏறி குதிரைகளை வழி நடத்திச் சென்றால் அவர்கள் மக்கா திரும்பி விட்டார்கள் என அர்த்தம். அப்படியல்லாமல் குதிரைகளின் மீது ஏறிக் கொண்டு ஒட்டகங்களைவழி நடத்திச் சென்றால் அவர்கள் மதீனா நோக்கிச் செல்கிறார்கள் என அர்த்தம். அப்படி அவர்கள் மதீனா செல்வதானால் அவர்களை முந்திக்கொண்டு நான் மதீனா சென்று அவர்களை எதிர்கொள்வேன்” என்று கூறி பார்த்துவரச் சொன்னார்கள்.
நொடியில் அவ்விடத்தை விட்டுப் பறந்தார் ஸஅத் (ரலி). சென்றவர், அவர்கள் மக்காவுக்கே திரும்பிவிட்டார்கள் என்றசுபச் செய்தியுடன் வந்தார். அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள்.
(தொடரும்)