அவ்ன் நாயகர் அருள் மொழிகள்
தொகுத்தவர். எஸ். காஜா நஜ்முத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய். திண்டுக்கல்
- குர்ஆன் தான் நம் மார்க்கம். எம் பாட்டனார் எவ்வழி அவ்வழியே நம்வழி.
- கண்ணியமிக்க நான்கு இமாம்களை நாம் ஏற்கின்றோம். ஏனெனில் அவர்கள் முழுக்க முழுக்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றியவர்கள்.
- ஷரீஅத் ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தரீகத், மஉரிபத் ஆகியவகைளும் மிக முக்கியமானவைகளாகும்.
- ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பேரன்பு கொள்ளாதவன் பேரின்பம் காணமாட்டான்.
- அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் - அதுதான் இயற்கை.
- ஞானம் என்பது அறிவை மட்டும் குறிக்காது. அஃது உயர்ந்த எண்ணங்களையும், நடை, உடை, பாவனைகளையும் குறிக்கும் என்பதனைத்தான் நம் முன்னோர்கள் அனைவரும் எண்பித்துக் காட்டியுள்ளார்கள்.
- பிறர் மனதைப் புண்படுத்துவது மிகப் பெரும்பாவம்.
- தம்மையே அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தவர்கள்தாம் வலிமார்கள்.
- மனத் தூய்மை மனிதப் பண்புகளின் தாய்மை.
- “அன்பே இறை” என்பர். அன்பு மட்டும் இறை என்றோ, சக்தி மட்டும் இறை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் அன்பு இறைவனின் முக்கிய அம்சமாக இருப்பதால் அவ்வாறு சொல்வர். அல்லாஹுதஆலா மிக அன்புடையவனாக இருக்கிறான். எனவே நாமும் அன்புடையோராக இருக்க வேண்டும்.
- திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்று உட்பக்கமாகவும் ஒன்று வெளிப்பக்கமாகவும் இருக்கின்றன. இவற்றைத்தான் நாம் ஷரீஅத்’ என்றும் ‘ஹகீகத்’என்றும் கூறுகிறோம். ஷரீஅத்’ எனும் வெளிப்பாகம் வெளிப்புறத்தை - வெளிப்பாகத்தைச் சுத்தப் படுத்துகிறது. ஹகீகத் எனும் உட்பாகம் உட்புறத்தை சுத்தப்படுத்துவதோடு வெளிப்புறத்தையும் பாதுகாக்கின்றது. உட்புறத்தை அறிந்தவர்கள் வெளிப்புறத்தையும் தன்னையும் தெரிந்து கொள்கின்றார்கள்.
- தவ்ஹீதுடைய (எமது) பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனில், நாமும் சுத்தமாக இருந்து, ஐந்து நேர தொழுகைகளைப் பேணித் தொழுது, குர்ஆனையும் ஓதிக் கொண்டு ஷரீஅத்திற்கு முரணில்லாத வாழ்க்கை வாழ வேண்டும். பிள்ளைகளையும் அவ்வாறே பழக்க வேண்டும் - இதுவும் மிக முக்கியமானதாகும்.
- ஏக ஞானத்தை அறிந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும். ஒருவருக்கொருவர் தம்மால் இயன்ற உதவி - ஒத்தாசைகள் செய்து கொள்ள வேண்டும். நம்மிடையே யாரையும் இழிவாக, தாழ்வாக கருதக்கூடாது. ஏனனில் தவ்ஹீது (ஒருமைப்பாடு) அப்படிப்பட்டதல்ல. நாம் எல்லோரும் ஒன்று - ஒரே மக்கள். சிறியோர் - பெரியோர் - உயர்ந்தவர் - தாழ்ந்தவர் எனும் வேறுபாடின்றி வாழ்வதே சிறப்பான தவ்ஹீதுடைய பிள்ளைகளின் ஒன்று.வாழ்வாகும்.
- இறை என்பது ஒன்று. அதுவே பரிபூரணம். எங்குமிருப்பதும் அந்த ஒன்றே. ஒன்று என்பது ஒருவர் ஒருவராக இருப்பதில்லை. பூரணமாக இருக்கக் கூடிய ஒன்று.
- இறையை இந்த நிலையில் நீங்கள் அறிந்து ஆராய்ந்து வந்தால் உங்களையறியாத பேரின்பத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.
- ஒரு முரீது தன்னையே தனக்கு ஒரு கண்ணாடியாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். நான் எப்படி இருக்கின்றேன்? எனது தொழில் என்ன? எனது தொழிலை நான் சரிவர செய்கிறேனா? யாருக்காவது நான் அநியாயம் செய்கின்றேனா? என்பதனைத் தனக்குத் தானே மனதில் கேட்டுச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
- ஒரு கண்ணாடி முன் நின்றால் எப்படித் தன் உருவமும் உருவத்திலுள்ள அனைத்துப் புள்ளிகளும் பரிபூரணமாகத் தெரியுமோ அதே போன்று தன்னைத் தானே சோதித்தறிந்து தன் நிலையை உணர வேண்டும்.
“துர்க்குணமுள்ள ஆலிமிடத்தில் நட்புக்கொள்வதை விட நற்குணமுள்ள பாவியிடத்தில் நட்புக்கொள்வதை நான் அதிகமாய் நேசிக்கிறேன்”
புலைலுபுனு இயால் (ரஹ்)
இபுனுல் முபாரக் ( ரஹ்)அவர்கள் பிரயாணத்தில் வழியில் ஒரு கெட்ட குணமுள்ளவனோடு சகவாசிக்கும்படி நேரிட்டது. பின்பு அவன் அவர்களை விட்டுப் பிரிந்த போது அவர்கள் அழுதார்கள். “ஏன் அழுகிறீர்கள்” என மக்கள் கேட்டதற்கு அந்த ஏழை மதியான் என்னிடத்திலிருந்து பிரிந்து விட்டான். ஆயினும் அவனது துர்க்குணம் அவனை விட்டுப் பிரியாமல் அவனோடு போய் விட்டதே என்று அழுகிறேன் எனக் கூறினார்கள்.
“நற்குணமே சூபித்தன்மை”“ஒருவன் உன்னிலும் மிக நற்குண முள்ளவனாயிருந்தால் அவன் உன்னிலும் பெரிய சூபியாயிருக்கிறான்”
கத்தானி (ரஹ்) .
“துர்க்குணமானது ஒரு பாவம்” ஒருவனில் இந்தப் பாவமிருப்பதுடன் எந்த வணக்கமும் அவனுக்குப் பயன் படமாட்டாது. நற்குணமானது ஒரு வணக்கம் இந்த வணக்கமுள்ளவனுக்கு எந்தப் பாவமும் நஷ்டம் தராது. ( யஹ்யபுனு மஆது (ரலி)