தொடர்....
வஹாபிகள் சஹாபிய வேடங்களில்...
குத்பின் அகமியம்
ஹள்ரத் அபூயஸீதுல் புஸ்த்தாமீ (ரஹ்) அவர்கள் வழியில் ஷைகைத் தேடினவர்களாய், ஹஜ்ஜு உம்றாவுக்குப் புறப்பட்டார்கள். இறுதியில் ஒரு குத்பையடைந்தார்கள்.
“நீர் செல்வதெங்கே? பிராயணத்திற்காக வைத்திருப்பதென்ன? என குத்பு அவர்கள் வினவியதற்கு, அபூயஸீதுல் புஸ்த்தாமீ(ரஹ்) அவர்கள் “நான் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்கிறேன். பிரயாணத்திற்கு 200 திர்ஹங்கள் வைத்துள்ளேன்” என விடையளித்தார்கள்.
அப்படியானால், திர்ஹமை எனக்குக் காணிக்கையாக வைத்து என்னை தவாபு செய்யும் : ஹஜ்ஜூம், உம்றாவும் உமக்கு நிறைவேறிவிடும். ஸபா. மர்வாவில் ஸயீ செய்வதும் நிறைவேறிவிடும். ஆண்டவன் மீது சத்தியமாக, அவன் கஃபாவை விட எனக்குச் சங்கையளித்துள்ளான்.
கஃபா வணக்கத்திற்குரிய வீடு. எனது உள்ளமையோ அவனது அகமியத்தின் இல்லம்.கஃபாவும் அவனுடைய தஜல்லியாத்தின் தோற்றந்தான். ஆனால், இன்ஸான் காமிலின் மீது உண்டாகும் தஜல்லியாத்து கஃபாவில் உண்டாவதில்லை. நீர் என்னைத் தரிசித்தது இறைவனைக் கண்டது போலாம். உண்மை கஃபாவை நீர் தவாபு செய்துவிட்டீர். நீர் எனக்குச் செய்த ஊழியம் இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு வழிபட்டதாகும்.
உஷார்! ஆண்டவனை விட்டும் நான் வேறானவனல்லன். ஆண்டவனுடைய நூர் உம்மீது உண்டாவதாக! கண்ணைத் திறந்து என்னை நோக்கிப் பாரும்! கஃபாவை என்னுடைய வீடு என்று ஆண்டவன் ஒரு முறை தான் சொன்னான். “என் அடியானே!என்று என்னை எழுபது விடுத்தம் கூப்பிட்டுள்ளான்.
அபாயஸீதே! உமக்குக் கஃபா கிடைத்தது. ஆண்டவனிடத்தில் உமக்கு நூர் பிராகசமும், சங்கையும், மகத்துவமும் உண்டாகிவிட்டது” என்பதாக அந்த குத்பு கூறினார்கள்.
இவ்விபரத்தை மெளலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் மஸ்னவி-ஷரீபு. 2 ஆவது பாகத்தில், பீர்-முரீது ஹிகாயத்தில் கூறியுள்ளார்கள்.
ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் கஃபாவை நோக்கி “சந்தேகமின்றி, இறைவன் உனக்குச் சிறப்பைக் கொடுத்துள்ளான். ஆனால் இறையிடத்தில் முஃமின் உன்னை விட அதிகச் சிறப்பை உடையவன்” என்று கூறினார்கள் என்பதாக, மிஃப்தாஹுல் உலூம்-ரஹு மஸ்னவீ மெளலானா ரூமி, 7 வது பாகம்,142 வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாள்,உமர் (ரலி) அவர்கள் கஃபாவை நோக்கி, “உனக்குப் பெருமையும் சங்கையும் உண்டு, அல்லாஹ்விடத்தில் முஃமின் உன்னைவிட அதிக சங்கை உடையவன்” என்று கூறினார்கள் என்பதாக இபுனுஉமர் (ரலி) அவர்களைக் கொண்டு திர்மதி ஷரீபில் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளது.
“கியாமத்து நாளில் கஃபத்துல்லாஹ், என்னுடைய கபுருக்கு வந்து ‘அஸ்ஸலாமு அலைக்க’ என்று ஸலாம் சொல்லும். “வஅலைக்கஸ்ஸலாம்’ என்று பதில் கூறி, “பைத்துல்லாஹ்வே, எனக்குப் பிறகு என்னுடைய உம்மத்து உன்னளவில் வந்து எவ்வாறு நடந்து கொண்டார்கள்?” என்று கேட்பேன். அவ்வமயம் அது சொல்லும்; “என்னிடத்தில் வந்தவர்களுக்கு நான் போதுமானவன். அவர்களுக்காக நான் மன்றாடுவேன். என்னிடம் வராதவர்களுக்கு தாங்கள் போதுமானவர்கள். அவர்களுக்காகத் தாங்கள் மன்றாடுவீர்கள்”என்பதாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருள் செய்திருப்பதை ஜாபிர் (ரலி) அவர்கள் ரிவாயத்துச் செய்வதாக,இஸ்பஹானீ (ரஹ்) கிதாபுத்தர்கீபில் அறிவித்துள்ள தாக, அல்லாமா, காஜீ, உபைதுல்லாஹ் ஸாஹிபு மத்றாஸீ (ரஹ்)“துஹ்பதுஸ் ஸலாயிரீனில்” வரைந்துள்ளார்கள். (குல்லுகுத்பின்-யத்தூபு-பில்-பைத்தி-ஸப்ஆவ-அனல்-பைத்து-தாயிபுன்-பி-கியாமீ)
“ஒவ்வொரு குத்புமார்களும் கஃபாவிலுள்ள இல்லத்தை ஏழு முறை தவாபு செய்வார்கள். நானோ, அந்தக் கஃபாவின் இல்லமாகிறது என்னுடைய கூடாரத்தைச் சுற்றி தவாபு செய்கிறது என்று ஸேய்யிதுனாகுத்புல்-அக்த்தாபு. முஹிய்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்கள் தங்களது முபாரக்கான,“துப்-பி ஹானீ” பைத்தில் கூறியுள்ளார்கள்.
ஆகவே,மேலே குறிப்பிட்டுள்ள அத்தாட்சிகளிலிருந்து இன்ஸான்-காமில் கஃபத்துல்லாஹ்வை விட மேலாம்பரத்தி லுள்ளவர். எனவே, அத்தகைய தகுதி வாய்ந்த அவுலியாக்களை கஃபத்துல்லாஹ் தேடிச் சென்று தரிசிக்கிறது என்பதில் வியப்பில்லை அல்லவா?
அன்பியா,அவுலியாக்களுக்கு ஆண்டவன் பக்கமிருந்து எல்லாவிதமான தத்துவங்களும் உண்டாயிருக்கின்றன அவர்கள் உயிரோடு இருந்து வந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கிருந்த திரேக பலமும், பார்வையின் கூர்மையும், கேள்வியின் வலிமையும், ஆன்மசக்தியும் வபாத்தானதாற் கப்பால் மேலும் அதிகப்பட்டு வலுவடைகின்றன. ஹயாத்தில், சரீரம் என்ற கூண்டில் அடைப்பட்டுக் கிடந்த ஆன்மாக்கள்,வபாத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுச் சுதந்திரம் அடைகின்றன. அப்போது அவர்கள் ஈருலகையும் கைக்கடுகு போலப் பார்க்கிறார்கள். நாடிய இடங்களுக்கு நொடிப் பொழுதில் செல்கிறார்கள்.அவர்கள் ஜீவனோடிருந்த காலங்களில் எங்ஙனம் மனிதர்களுடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து வந்தார்களோ. அங்ஙனமே, மரணத்திற்குப் பின்பும் செய்யக்கூடிய ஆற்றலை ஆண்டவன் அவர்களுக் களித்துள்ளான். அவர்கள் எங்கிருந்த போதிலும் சரி, ஆபத்துக் காலத்தில் அவர்களது திருநாமத்தை விளித்துக் கூப்பிட்டவர்களுக்கு உடனே கைகொடுத்துக் காப்பாற்றி இரட்சிக்கும் தத்துவத்தையும் ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். “அவுலியாக்களுக்கு ஆண்டவன் பக்கமிருந்து குத்ரத்து (சக்தி) உடையகரம் உண்டாயிருக்கின்றது. எதிர் நோக்கிப் பாய்ந்து வரும் அம்பையும் கூட வேறு வழியில் திருப்பி அகற்றக் கூடிய வல்லமையுடையவர்கள் அவர்கள்” என்று மஸ்னவீ-ஷரீபு முழங்குகின்றது.
“நான் அஸ்தகிரியிலும், எனது முரீது உதயகிரியிலும் இருந்த போதிலும் சரியே, அவனை ஓநாய் கடிக்க வந்தாலும் எனக்குத் தெரியும். உடனே அதிலிருந்தும் அவனைக் காப்பாற்றுவேன். அத்தகைய கரமும் ஆண்டவனால் எனக்கு அளிக்கப்பெற்றதேயாகும்” என்று தாஜுல் அவுலியா, ஷைகு முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்கள் அருளியுள்ளார்கள்.
பூலோக ஜனத் தொகையில் ஐந்திலொரு பாகத்தினராக, கோடானு கோடி முஸ்லிம்களில், ஆண்களும், பெண்களும்,அவ்விருபாலரும், தத்தமக்கு ஆபத்து, இடர்கள் சம்பவிக்கும் சந்தர்ப்பங்களிலும், ஆனந்த சமயங்களிலும், இந்த அப்துல் காதிர் முஹிய்யித்தீன் ஜீலானி (ரலி) அவர்களது திருநாமத்தைத் தாராளமாக உச்சரிப்பதைப் பிரத்தியட்சமாகப் பார்க்கலாம். கடல் போல விரிவான அவர்களது அற்புத காரணங்கள், கறாமத்துகள், மனாக்கிபு கெளதிய்யா, பஹ்ஜத்துல் அஸ்றார், தப்ரீஜூல்காத்திர் முதலிய கிரந்தங்களில் நிறைந்துள்ளன.
“கெளதுல் அஃளம் (ரலி) அவர்களது அற்புத காரணங்கள் ஏராளமாக ஏடுகளையும் கிரந்தங்களையும் நிரப்பிப் பொங்கி வழிகின்றன” (மலஅத் முதல்வனத்தன், குத்பன் முஅல்ல பதன்....) என்று மாதிஹுர் ரஸூல், ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்) அவர்கள், ‘யாகுத்பா மாலையில்’, சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளார்கள். (தொடரும்)