தொடர்....
ஒரு சிறப்புப் பார்வை!
மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி
மஃரிபு நேரமும் கடந்து விட்டது. கலீபா சகஜ நிலைக்கு வரவில்லை! படுக்கவும் மறுத்துவிட்டார்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். நிலைமையைக் கேள்விப்பட்டு, எனது கல்வித் தந்தை மெளலவி.அல்ஹாஜ். ஆரிபுபில்லாஹ் T.M. மூஸாகான் பாகவி ஹள்ரத் அவர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து கலீபா அவர்களைச் சந்தித்து, ஓதிப் பார்த்து விட்டுச் சென்றார்கள். இரவு 10 மணியளவில்... சற்று சகஜ நிலைக்கு வந்த கலீபா அவர்கள், என்னை மதுரஸாவிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். பின்னர் ஒரு குதிரை வண்டியில் கலீபா அவர்களை ஏற்றி மதுரஸாவிற்கு அழைத்துச் சென்றோம்.
என்னைத் தனியாக விட்டு விட்டு அனைவரும் சென்று விடுங்கள்... என்றார்கள். யாராவது ஒருவர் தங்குகின்றோம்.... என்று கூறியதற்கும் கலீபா ஒத்துக் கொள்ளவில்லை! பின்னர் மதுரஸாவில் கலீபா அவர்களைத் தூங்க வைத்துவிட்டுஅனைவரும் திரும்பினோம்.
மறுநாள் காலை ஸுபுஹு தொழுகையில் எனது ஆசிரியத் தந்தையவர்கள், உனது நன்னாவிற்கு நோய் ஏதுமில்லை; உங்கள் நன்னா மஜ்தூபுடைய நிலையில் இருக்கின்றார். என்பதாக என்னிடம் கூறினார்கள்.
அதற்குப் பின்னர் - சுமார் 24 மணி நேரத்தில் முழுமையான சுகம் பெற்றார்கள் கலீபா வலிய்யுல் அஹ்ஸன். .இச்சம்பவம் குறித்து சில வருடங்களுக்குப் பின்னர் நான், கலீபா அவர்களிடம் கேட்டேன்!
ஆமாப்பா.... அன்னைக்கி என்ன நடந்ததுன்னே எனக்குத் தெரியல.... அஸருக்குப்பின் வீட்டிற்கு வந்தது தான் நினைவிலிருக்கின்றது! அதற்குப் பின் என்ன நடந்தது? என்று ஞாபகமில்லை. நான் என்னை மறந்து சுய நினைவிழந்து இருந்த நேரத்தில்... சங்கைமிகு ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள் தத்ரூபமாகத் தோன்றி ஒரு எவர் சில்வர் கிளாஸில் பால் கொடுத்தார்கள்! அதனை அருந்திய பின்னர் யாஸீன் நாயகம் (ரலி) அவர்களை ஏறிட்டுப் பார்த்தேன். நாயகமவர்களின் திருவுரு மறைந்து ஒரு வாலிபத் தோற்றம் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் பரிபூரண சுகம் பெற்றேன்.
இச்சம்பவம் நடந்து சில மாதங்களில் திண்டுக்கல்லிற்குச் சென்ற போதுதான் முதன் முதலாக சங்கைமிகு வாப்பா நாயகமவர்களைச் சந்திதேன்! அன்னவர்களைக் கண்டது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது; யாஸீன் நாயகமவர்கள் மறைந்துவிட்டார்களே இனி எமக்கு யார் தான் வழிகாட்டி? என சோர்ந்திருந்த நேரத்தில் தான் எனக்கு அந்த நோய் ஏற்பட்டு, அதனை யாஸீன் நாயகமே தீர்த்துவைத்து விட்டு, உடலால் யாம் மறைந்தாலும் எமக்கு உள்ரங்க வெளிரங்க வாரிசாக எமது இளைய மகனார் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்கள்....என்பதனை எனக்கு உணர்த்தியது மெய்சிலிர்க்கச் செய்யும் சம்பவம்... என்பதாகக் கலீபா வலிய்யுல் அஹ்ஸன் விவரித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியான சங்கதி! (இன்பம் இன்னும் பொங்கும்).
லுஹர் தொழுகை முடிந்தவுடன் சாப்பிடுவது பகலச் சோறு என்று “பாளையம் பகுதியில்” கூறப்படும். அஸர் தொழுத பின்னர் சாப்பிடுவதை “இடைப்பகலச் சோறு” எனக்கூறப்படும். கலீபா வலிய்யுல் அஹ்ஸன் ரமளான் மாதம் அல்லாத காலத்தில் அஸருக்குப் பின்னர்“ இடைப்பகலச் சோறு” சாப்பிடுவதை வழமையாகக் கொண்டிருந்தார்கள்.