ஞானத் துளிகள்
தொகுத்தவர்: -
திருமதி G.R.J திவ்யா பிரபு I.F.S., சென்னை
பொல்லாத செயலை அறியாமையால் செய்துவிட்டேன். இனி, அதைச் செய்யேன் இறைவா’ என்று ஒரு தடவை உள்ளம் கசிந்து சொல். பிறகு அதை அறவே மறந்துவிடு. இறைவனுடைய திருநாமம் உன்னைத் தூய்மைப்படுத்துகிறது என்கின்ற நம்பிக்கையை உன் உள்ளத்தில் உறுதியாக வை.
சாதகன் ஒருவனுக்குப் பக்தி வாய்க்குமாகில் ஹடயோகம் பொன்றவைகள் தேவையில்லை.
அஷ்ட சித்திகளை நாடுவது ஆசையின் இயல்பு. அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ண பகவான் பகர்ந்ததாவது: : “அஷ்ட சித்திகளில் ஏதேனும் ஒன்று உனக்கு வாய்த்துவிட்டாலும் நீ பரம்பொருளை அடையமாட்டாய். சித்திகள் உன்னுடைய திறமையை ஒரு சிறிதளவு அதிகப்படுத்துகின்றன. அவ்வளவுதான்”.
ஹடயோகி ஒருவனுடைய நிலை மிகப் பரிதாபகரமானது. உடலைப் பேணுதலிலும் அதை நெடிது காத்து வைத்திருத்தலிலுமே அவன் கண்ணுங் கருத்துமாயிருக்கிறான். குடலைக் கழுவுதல், குழாய் வழியாகப் பால் உறிஞ்சுதல் போன்ற செயல்களைத் தவிர
வேறு எதிலும் அவன் கவனத்தைச் செலுத்துவதில்லை.
அஷ்ட சித்திகளைப்பற்றி நினைத்தாலே எனக்குத் திகில் உண்டாகிறது. ஏதேனும் ஒரு சித்தி எனக்கு வாய்த்துவிடுமாகில் இந்த இடம் வைத்தியசாலையாக மாறுவது திண்ணம். அவரவர்க்குற்ற நோயைப் போக்க வேண்டும் என்று ஏராளமான பேர் இங்கே கூடிவிடுவார்கள்.
சித்திகள் அடையப்பெற்றிருந்த யோகி ஒருவன் கடற்கரையோரம் அமர்ந்திருந்தான். அப்பொழுது திடீரென்று புயல் அடித்தது. ‘ஏ நிறுத்து, உன் வேகத்தை’என்றான் யோகி. அவனுடைய சித்தி வலிவால் புயல் அப்படியே நின்றது. அவ்வேளையில் கடலில் விரைந்து ஓடிக் கொண்டிருந்த கப்பல் ஒன்று புயல் நின்றதை முன்னிட்டு நிலைகுலைந்து மூழ்கிப் போயிற்று. அதிலிருந்த பிரயாணிகளெல்லாரும் மடிந்துபோயினர். அந்தப் பாபம் யோகியை வந்து சார்ந்தது. அவன் சித்தியை இழந்து நரகத்தில் இடர்பட்டான். சித்தி என்றைக்குமே ஆபத்தானது.
சாது ஒருவன் பன்னிரண்டு வருகாலம் வனத்தில் தவம் பண்ணினான். அதன் விளைவாக அவனுக்கு சித்திகள் சிலவாய்ந்தன. அவைகளைக் குறித்து அவன் தற்பெருமை படைத்திருந்தான். ஒருநாள் பெருக்கெடுத்தோடும் நதியின் மீது நடந்து அக்கரையிலிருந்த கிராமம் போய்ச் சேர்ந்தான். ஊரே கூடி அவன் செயலை மிகப்பாராட்டியது.
ஆங்கு ஓர் அரசமரத்தடியில் மகாபுருஷர் ஒருவர் அமர்ந்திருந்தார். தன்பெருமையைச் சாது அவரிடமும் தெரிவித்தான். ‘இன்னும் உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். இதோ ‘இங்கு நின்று கொண்டிருக்கிற யானையைக் கொல்ல முடியும்’ என்று அதன் மீது ஒரு துளி மண்ணை எடுத்து வீசினான். அது கீழே விழுந்து மாண்டுபோயிற்று. ‘இன்னும் என்ன செய்ய முடியும்?’ என்று அந்த மகான் கேட்டார் ‘மீண்டும் யானைக்கு உயிர் தரமுடியும்’ என்று சொல்லி மற்றொரு துளி மண்ணை எடுத்து அதன்மீது வீசினான். யானை உயிர் பெற்றெழுந்தது. தன் சித்திகளைக் குறித்து மகிழ்ச்சியுற்றவனாக அந்தச் சாது, மகானைப் பார்த்தான், ‘அப்பா! நீ பன்னிரண்டு வருடம் தவம் புரிந்து காலணா சம்பாதிக்கின்றாய்’ என்றார். ‘ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?’ என்று சாது கேட்டான். ‘ஓடக்காரனுக்குக் கொடுக்கிற காலணா உனக்கு மிச்சம். யானை இருப்பதாலும் இறந்து போவதாலும் உனக்காவது ஒன்று மில்லை. உன்னிடத்துள்ள அகங்காரமும் தற்பெருமையும் இன்னும் இம்மியளவும் போகவில்லை’ என்றார் இந்த மகான்.
உலகம் இருப்பதும் மனதில்; அது ஒடுங்குவதும் மனதில். மருத்துவத் தொழில் மேலானதே. ஆனால் அகப்பட்ட நோயாளியிடத்திருந்து பொருள் பறித்தல் பொருட்டு சிகிச்சை முறையை இப்படியும் அப்படியும் செய்வது ஈனம்.
தியாசபி (பிரம்ம ஞானசபை)யைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? சூரிய மண்டலம்,சந்திர மண்டலம், நட்சத்திர மண்டலம்போன்றவைகளெல்லாம் பற்றி அவர்கள் பகர்கின்றார்களே, அவைகளைப் பற்றிய உங்களுடைய கருத்து யாதோ?
இவைகளையெல்லாம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. இவைகளை எண்ணி இப்படி மனம் குழம்புவானேன்? நீ மண்ணுலகில் இறைவனுடைய அருள் என்னும் கனி அருந்த வந்திருக்கிறாய். அதைப் பெற்று அருந்து. இந்த மண்டலம், அந்த மண்டலத்தைப்பற்றிய பேச்செல்லாம் கனியருந்துதற்குப் பதிலாக மரத்தின் கிளைகளையும் இலைகளையும் எண்ணுவதற்கு நிகராகும். அவையெல்லாம் நமக்கு வேண்டாம்.
ஆத்மசாதகன் ஒருவன் நல்வாழ்வு வாழ்ந்து இன்புற்றிருப்பவர்களோடு இணக்கம் வைக்கலாம். நெறி பிறழ்ந்து துன்புற்றிருப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளலாகாது.
நீ (குரு), சான்றோர் ஒருவரைப் பார்ப்பதற்கோ போகும்பொழுது வெறும் கையுடன் போகாதே. ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்.
பாலில் வெண்ணெய் இருக்கிறதென்று சொன்னால் போதாது. பாலைத் தயிராக்கிப் பிறகு அதைக் கடைந்தால்தான் வெண்ணெய் கிடைக்கும்.அங்ஙனம் இறை விஷயத்தைப்பற்றி வெறுமனெ பேசிக்கொண்டிருந்தால் போதாது.சாதனங்கள் செய்ய வேண்டும்.காலில் பாதரக்ஷை அணிந்திருப்பவன் முள் நிறைந்த்ள்ள இடத்தில் தயங்காது நடக்கலாம். சாதனங்கள் புரிந்து அருளுக்குப் பாத்திரமாயிருக்கிறவன் உலகம் எதற்கும் அஞ்சவேண்டியது இல்லை.