தொடர்.......
சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லாஹள்ரத், திருச்சி.
இமாம்முஜ்னீ (ரஹ்) கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ அவர்களால் கோவை செய்யப்பட்ட “கிதாபுர் ரிஸாலாவை” சுமார் 500 முறையாவது படித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் புத்தம் புது விளக்கமும் புத்தம் புதிய சேதிகளுமாகவே அதில் இருந்தன!
அபுல் காஸிமில் அன்மாதிய்யி (ரஹ்) கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபுர் ரிஸாலாவை சுமார் 50 வருடங்களாகப் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் நோட்டமிடும் போது, முன்பு விளங்கிய விளக்கத்துடன் அதிகமான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டேன்.
ஹள்ரத் ரபீஉ (ரஹ்) சொல்கிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மஸ்பூத் என்னும் கிதாபை கோவை செய்த போது அவர்களிடம் வேறு எந்த கிதாபும் இல்லை. மஸ்பூத் கிதாபை மனனமாகத்தான் கோவை செய்தார்கள். இச்சேதியை ஹள்ரத் யூனுஸ் இபுனி அப்தில் அஃலா(ரஹ்) அவர்களும் உண்மைதான் என உறுதி செய்தார்கள்.
ஹள்ரத் ரபீஃ (ரஹ்) கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுடன் மிகுந்த நாட்கள் இரவில் தங்கினேன்.. இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இரவில் நின்று தொழுது முடித்துவிட்டால், உடனே எழுதத் தொடங்கிவிடுவார்கள்.
ஹள்ரத் ஹுமைதா (ரஹ்) கூறுகிறார்கள்:
நான், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுடன் மிஸ்ருக்குச் சென்றிருந்தேன். இமாமவர்கள் மேல் வீட்டிலும் நான் கீழ் வீட்டிலும் தங்கியிருந்தோம். இரவு வேளைகளில் நான் வெளியே வந்து பார்த்தால் இமாமவர்களின் வீட்டில் வெளிச்சம் தெரியும். ஒருமுறை நான், இமாமவர்களின் ஊழியரைக் கூப்பிட்டேன். என் சப்தத்தைக் கேட்டு, இமாமவர்கள் என்னை மாடிக்கு அழைத்தார்கள். அங்கே.... ஸுப்ஹானல்லாஹ்... என்ன வென்று சொல்வேன்?இமாமவர்களுக்கு முன்னால் எண்ணற்ற கிதாபுகள் பரவி விரவிக்கிடந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு, இமாமவர்கள் எழுத்துப் பணியில் ஆர்வமாக இருந்தார்கள்.
“இமாமவர்களே! கொஞ்சம் உறங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு இமாமவர்கள், “ஒரு மஸ்அலாவிற்கு ஹதீஸின் விளக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்; அதனைக் கண்டறிந்த பின்னர் தானே நிம்மதியாக உறங்க முடியும்! எனபதிலளித்தார்கள்.
(மார்க்கச் சட்டம் ஒன்றைக் கண்டறிய ஓர் இரவு முழுவதும் விழித்திருந்த இமாமவர்களின் சேவையை என்னவென்றுரைப்பது?)
ஹள்ரத் ரபீஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அஹ்காமுல் குர்ஆன் என்னும் கிதாபை கோவை செய்ய நாடியபோது, அவர்கள் நேமமாக திருக்குர்ஆன் ஷரீஃபை ஓதுவதோடு 100விடுத்தம் திருக்குர்ஆன் ஷரீஃபை ஓதி கத்தம் செய்தார்கள்.
ஹள்ரத் முஹம்மத் இபுனி அப்தில்மலிகில் மிஸ்ரிய்யி (ரஹ்) கூறுகிறார்கள் :
மனிதரொருவர் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடம் வந்தார். அப்போது இமாமவர்கள், முஸ்ஹஃபை (திருக்குர்ஆன் ஷரீஃபை) நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மனிதர், இமாமவர்களே! இந்த நேரத்திலிருந்து தங்கள் பணியைத் தொடங்கிவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு இமாமவர்கள், “நான் நேற்று இஷாத்தொழுகையை முடித்ததிலிருந்து திருக்குர்ஆனின் ஹுக்முகளை (சட்டங்களை) நோட்டமிட்டு வருகிறேன்” என்றார்கள்.
ஹள்ரத் முஸ்னீ (ரஹ்) கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், புனித ரமளானில் இரவெல்லாம் இருளில் குர்ஆன் ஷரீஃப் ஓதி, தொழுது கொண்டிருப்பார்கள். திருமறை வசனங்களில் ஃபிக்ஹ் சம்பந்தப்பட்ட வசனம் வந்து விட்டால் அத்தோடு தொழுகையை ஸலாம் கூறி முடித்துவிட்டு, விளக்கேற்றி அந்த வசனத்தில் கூறப்படும் மார்க்கச்சட்டத்தை எழுதிக் கொள்வார்கள். பின்னர் விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் தொழத் தொடங்கி விடுவார்கள். இவ்வாறு பலமுறை நடந்தேறியுள்ளது.
ஹள்ரத் நஸ்ர் இப்னு பஹ்ரு (ரஹ்) கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மிஸ்ரில் 4 ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். அந்த நேரங்களில் தாம் மிகுதமான கிதாபுகளை கோவை செய்தார்கள். ஒரு கிதாபு, கோவை செய்து முடித்தவுடன், அன்னவர்களின் கூட்டாளி இப்னு ஹர்மு என்பவர் எழுதிக் கொள்வார். அந்தக் கிதாபை வைத்து ஹள்ரத் புவைதி இமாம் (ரஹ்) அவர்களும் பிரசன்னமாக இருப்பவர்களும் கிதாபை முழுமையாக ஓதுவார்கள். பின்னர் தங்கள் கைகளால் பிரதி எழுதிக் கொள்வார்கள். ஹள்ரத் ரபீஃ (ரஹ்) அவர்கள் அந்த மஜ்லிஸிற்கு, தாமதமாக வந்தால் அவருக்கு மட்டும் பிரத்யேகமாக ஒருமுறை ஓதிக்கொடுக்கப்படும்!
ஹள்ரத் அபுல் பள்லு இபுனு அபீனஸ்கு (ரஹ்) கூறுகிறார் :
பக்தாதில் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் இமாம் ஷாபிஈ அவர்களை குறைகூறிக் கொண்டேயிருப்பார். ஒருநாள் ஸுபுஹு தொழுகை முடிந்தவுடன், நான் மிஸ்ருக்குப் போய் வருகிறேன் என்றார். என்ன விஷயமாகச் செல்கிறீர்கள்? எனக்கேட்கப்பட்டது. அதற்கவர், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபுகளை எழுதி பிரதி எடுத்து வரப்போகின்றேன் என்றார்.
நீங்கள் இதுநாள்வரை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைக் குற்றம் குறையல்லவா கூறி வந்தீர்? ஏன் இந்த மாற்றம்? எனவும் வினவப்பட்டது.
அதற்கவர், இன்றிரவு நான் ஒரு கனவு கண்டேன், கண்கவரும் பட்சிகள் பல பளிச்சிட்டு கூட்டம் கூட்டமாக பறந்து சென்றன!
மக்கள் தங்களுக்குப் பிடித்த பட்சிகளை ஆசை ஆசையாகப் பிடித்துக்கொண்டார்கள். நானும் ஆசையோடு சில பட்சிகளைப் பிடிக்க முயன்றேன். அப்போது சிலர் என்னைத் தடுத்தனர். மற்றவர்களையெல்லாம் தடுக்காமல் என்னை மட்டும் ஏன் தடுக்கின்றீர்? எனக் கேட்டேன்.
“இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைக் குறை கூறித் திரிபவன் தானே நீ?” எனக்கூறப்பட்டது.
இனிமேல் அவ்வாறு குறை கூறமாட்டேன் எனக் கூறியதும், அப்படியானால் நீ விரும்பியவற்றைப் பிடித்துக் கொள் எனக்கூறப்பட்டது! நானும் எனக்குப் பிடித்த வண்ணமயமான பட்சிகளை சந்தோஷமாகப் பிடித்தேன்...கனவு நிறைவு பெற்றது! இப்போது நான் திருந்தி விட்டேன். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைச் சந்தித்து மன்னிப்புப் பெற்று அன்னவர்களின் கிதாபுகளை பிரதி எடுத்து வருகிறேன் என்று கூறிச்சென்றார். (இன்ஷா அல்லாஹ் பிரயாணம் தொடரும்)