இம்மை மறுமை வெற்றியின் ரகசியம்
அல்ஹாஜ், கலீபா A.முஹம்மது காசீம் B.Sc., M.Ed., பெரம்பலூர்.
ஒரு நாள் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் பஸராவின் தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஓர் அழகிய அடிமைப் பெண் அலங்கார உடையணிந்து பணியாளருடன் சென்று கொண்டிருந்தாள். இப்பொழுது அவர்கள் அவளை நோக்கி, “உன் எசமான் உன்னை விற்பாரா?” என்று வினவினர். அது கேட்ட அவள் வியப்பு மீக்குற்றவளாய் அவர்களை ஒரு முறைக்கு இருமறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு“ஷைகு அவர்களே, தாங்கள் என்ன கூறினீர்கள்?” என்று வினவினாள். பின்னர் “ஷைகுஅவர்களே என்னை என் எசமான் விலைக்கு விற்பாரா மாட்டாரா என்பதை நான் அறியேன். அப்படித்தான் அவர் என்னை விற்றாலும் நீங்கள் என்னை விலைக்கு வாங்க இயலுமா?” என்று வினவினாள்.
“நீ என்ன? உன்னையும் என்னால் விலைக்கு வாங்க இயலும். உன்னை விடப் பேரழகு வாய்ந்தவளையும் என்னால் விலைக்கு வாங்க இயலும்?” என்று பதில் கூறினார்கள் அவர்கள்.
இது பித்துக்குளித்தனமாக அவளுக்குத் தெரிந்தது. இடி, இடி என்று சிரித்தாள் அவள். பின்னர் தன் பணியாளரை நோக்கி “இவரை நம் இல்லம் அழைத்து வாருங்கள்” என்று கூறினாள். அவ்வாறே அவர்கள் செய்தனர்.
இல்லம் வந்த அவள் நேரே தன் எசமானனிடம் சென்று, வழியில் நடந்ததைக் கூறினாள். அது கேட்டு அவனும் வயிறு குலுங்கச் சிரித்தான். “யார் அவர்?அவரை இங்கே அழைத்து வாருங்கள்! என்று அவன் கூறினான்.
அவர்களைக் கண்டதும் அவனுடைய ஆணவம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது. ஓர் இனம் தெரியாத திடுக்கம் அவனுடைய உள்ளத்தை ஆட்கொண்டது.
“தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று தாழ்மையுடன் வினவினான் அவன்.
“இந்தப் பெண்ணை நீர் என்னிடம் விற்றுவிடும்” என்றார்கள் அவர்கள்.
“அவளின் விலையைத் தங்களால் கொடுக்க இயலுமா?” என்றார்.“ஏன் இயலாது? அவளின் விலை இரண்டு பேரீத்தம் கொட்டைகள் தாமே”என்றார் அவர்கள்.
அப்பொழுது ‘கொல்’ என சிரிப்பின் ஒலி அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்தது. ஆனால் அவளின் எசமானோ சிரிக்காது அவர்களை நோக்கி “பெரியீர், தாங்கள் இவளின் விலையை எவ்வாறு நிர்ணயித்தீர்கள்?” என்று வினவினான்.
“என்ன அவளிடம் குறைகள் உள்ளன?” என்றான் அவன்.
“குறைகளா? ஒன்றா?இரண்டா? கூறுகின்றேன் கேளும்”. இவள் குளித்து நறுமணம் பூசாவிட்டால் இவளுடைய உடல் நாற்றமெடுத்து விடும். உறங்கி எழுந்து பல் துலக்காவிட்டால் வாய் வாடை வீசத் தொடங்கி விடும். கூந்தலில் எண்ணெய் இட்டு வாரி முடிக்காவிட்டால் அது அழுக்கடைந்து அலங்கோல நிலையிலேயே ஈருக்கும் பேனுக்கும் இருப்பிடமாகிவிடும். அவளுக்குச் சிறிது வயதாகி விட்டாலோ அவளின் அழகெல்லாம் எங்கோ மாயமாய் ஓடி மறைந்து விடும்.
அவள் கிழவியாகி விட்டாலோ எத்தகு வேலைக்கும் அவள் தகுதியற்றவளாகி விடுகிறாள். அவளுக்கு மாதவிடாய் வருகிறது, அவள் மலம் ஜலம் கழிக்கிறாள், பல்வேறு விதமான அசுத்தங்கள் அவளிடமிருந்து வெளியாகின்றன. விதம் விதமான இன்னல்களுக்கும் இடுக்கண்களுக்கும் அவள் இலக்காகின்றாள். இவையெல்லாம் அவளிடம் காணப்படும் வெளிப்படையான குறைபாடுகள்.
“அவளிடம் மறைந்து கிடக்கும் குறைபாடுகளோ சொல்லும் தரத்தவையல்ல. அவளின் வாழ்வே சுயநலத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். அவள் உம்மீதுஅன்பு செலுத்துவதும் கூட உள் நோக்குடனேயன்றி நன்றியுணர்வோடு அல்ல. வெம்புவாள், விழுவாள் பொய்யே, மேல் விழுந்தவள் பொய்யே, தம்பலம் தின்பாள் பொய்யே, சாகிறேன் என்பாள் பொய்யே, அவளின் சொல், செயல் அனைத்தும் பொய்மையே உடைத்ததாகும். உமக்குப் பின் அவள் வேறொருவனிடம் போய்விடுவாள். எனவே அவளை நம்ப முடியாது. நம்பியோர்கள் நாயினும் கடையராவரேயன்றி வேறில்லை.
ஆனால் என்னிடம் இவளை விட ஆயிரம் மடங்கு மேலான பண்புள்ள ஒரு பெண் இருக்கிறாள், அவள் குங்குமம்,கஸ்தூரி, ஒளி ஆகியவற்றினால் படைக்கப்பட்டவள். அவள் கடலில் எச்சில் உமிழின் கடலின் உவர்நீர் முழுவதும் தேன் இனிமை பெற்று விடும். அவள் பிணத்துடன் பேசிடின் பிணம் உயிர் பெற்று மறுமொழி பகரும். கதிரவனின் முன் அவளின் சாயல் படின் ஒளிமங்கும். இருளில் அவள் வெளிப்படின் இருள் அவளை கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து விடும். அவள் தன்னை அணி செய்து கொண்டு உலகில் தோற்றமளிப்பின் அகில உலகமும், எழிலும் மணமும் ஒருங்கே எய்த பெறும். அவள் கொண்ட கணவன் மீது நீங்கா அன்புடையவள், வேறொருவனைக் கடைக்கண்ணாலும் பாராதவள். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுப்பவள்.
“இவ்விரு அடிமைப் பெண்களில் எவர் விலை கொடுத்து வாங்கத் தகுதியானவர் என்று நீங்களே கூறுங்கள்” என்றனர் மாலிக் (ரஹ்) அவர்கள்.
அது கேட்ட அவளின் எசமான் தாங்கள் கூறும் பெண்தான் என்று கூறிவிட்டு “அவள் யார்?அவளின் விலை யாது?” என்று வினவினான்.
அதற்கு அவர்கள் நீர் அவளுக்காகவேண்டி அதிகமான விலை கொடுக்க வேண்டிய தேவையில்லை. சாதாரண விலைகொடுத்தாலே போதும். நள்ளிரவில் எழுந்து இரண்டு ரக் அத் “தஹஜ்ஜூத்” தொழுது கொள்ளும்.
“நீர் உண்ணும் பொழுது ஓர் ஏழையையும் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்”.
“மனிதர்கள் நடக்கும் பாதையில் அசுத்தமோ, துன்பம் விளைக்கும் பொருள்களோ கிடப்பின் அவற்றை அப்புறப்படுத்தும்”.
“சொற்பத்தைக் கொண்டு மன நிறைவு கொள்ளும்”.
“அழிந்து போகும் உலகத்திற்கான கவலைகளை விட்டொழிந்து அழியா மறுஉலகம் பற்றிக் கவனம் செலுத்தும்.”
மேலும் உன் ஷைகின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன், ஷரீஅத்தையும் பேணுதலுடன் எடுத்து நடந்து கொள். அவ்விதம் செய்யின் இம்மையிலும் மறுமையிலும் இறைதிருப்தியைப் பெற்று எழில் வாழ்வு வாழ்வீர். மேலும் மறுமையில் இன்பச் சுவனத்தில், சுவனத்துக் கண்ணழகிகளுடன் வாழும் பேறு பெறுவீர்” என்று கூறினார்.
அப்பொழுது அவளின் எசமானன் அவளை நோக்கி “பெண்ணே! அவர் கூறுவதைக் கேட்டாயா?” என்று வினவினார்.
அதற்கு அவள் “ஷைகு அவர்கள் உண்மையே உரைத்தனர், அவர்கள் கூறிய அனைத்தும் உண்மையே, உண்மையே, உண்மையே, உண்மையே” என்று கூறினாள்.
உடனே அவர் அவளை நோக்கி நான் “உமக்கு உரிமை வழங்கினேன். இன்ன இன்ன சொத்துக்களை நான் உனக்கு அளித்தேன்”என்று கூறினார். பின்னர் தம்முடைய ஏனைய அடிமைகளை நோக்கி “நான் உங்களுக்கும் உரிமை வழங்கினேன். இன்ன இன்ன சொத்துக்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய இந்த வீட்டையும் இதிலுள்ள அனைத்து செல்வங்களையும் நான் அல்லாஹ்வின் பாதையில் அறம் வழங்கிவிட்டேன்” என்று கூறித் தம் விலையுயர்ந்த உடுப்புகளையெல்லாம் களைந்தெறிந்து விட்டு, வாசலில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு முரட்டுத் துணியை எடுத்து அணிந்து கொண்டு கிளம்பிவிட்டார். எங்கே? கானகம் நோக்கி.
அது கண்ட அந்த அடிமைப் பெண்ணும் “தங்களுக்கு பின் நான் இங்கிருந்து என் செய்வது” என்று கூறி, தானும் ஒரு முரட்டுத் துணியை அணிந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.
இருவரும் கானகத்தில் பன்னெடுங்காலமாக வசித்து, கடுந்தவம் செய்து அங்கேயே உயிர் நீத்தார்கள்.
நாமும் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்களின் மேலான அறிவுரைகளை உணர்ந்து செயல்பட்டால்,நிச்சயமாக இறைதிருப்தியைப் பெறமுடியும். மேலும் நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்று சிறப்பான எழில் வாழ்வு வாழ ஹக்கு சுப்ஹானஹு வதஆலா அருள்புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.