• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Aug 2012   »      இஸ்லாத்தில் ஆன்மிக நெறி


இஸ்லாத்தில் ஆன்மிக நெறி

காயல்

ஆலிமா பேரவை

 

     ந்நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சூஃபி ஞானி இப்னு அதா உல்லா  இஷ்கந்தரி அவர்கள்.  இவர்களின் சிறந்த நூல் அல்ஹிகம் என்னும் பெயருடையது.  இந்நூற்றாண்டிலேயே இன்ஸானுல் காமில் எனும் நூலை வழங்கிய  மெய்ஞ்ஞானி அப்துல்கரீம் அல்ஜீலி அவர்களும் லிபியா நாட்டில் அஹமது ஸாரூக் அவர்களும் வாழ்ந்து இறை ஞானத்தை இவ்வுலக மக்களுக்கு வழங்கி வந்தனர்.  சூஃபி ஞானிகளின் வளர்நிலை கி.பி.14 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டுவரை நன்கு வெளிப்படுத்தப்படவில்லை.  சூஃபி ஞானிகளிடம் இன்று ‘வஹ்தத்துல் உஜூது’ கெள்கையே நின்று நிலவுகிறது.


தரீக்காக்கள்


      ‘தரீக்கா’ எனும் சொல்லுக்கு வழி, பாதை என்று பொருள்.  தரீக்காக்கள் அண்ணலாரின் காலத்தவர்களான அஸ்ஹாபுஸ் ஸுஃப்ஃபாக்களிடமிருந்து தோற்றம் பெறுகின்றன. ஹள்ரத் அபூபக்கர் (ரலி) ஹள்ரத் அலி (ரலி)  இருவரும் இப்பாட்டைகளுக்கு முதல்வர்களாகக் கொள்ளப்படுகின்றனர்.  முதல்வரின் பிரதிநிதியாக ஸல்மான்பார்ஸீ (ரலி) அவர்களும் இரண்டாமவரின் பிரதிநிதியாக ஹஸனுல் பஸ்ரி (ரஹ்)  அவர்களும் விளங்கினர். பிஸ்தாமிய்யா தரீக்கா, நக்­பந்தியா தரீக்கா, பக்தாஷிய்யா தரீக்கா இவை மூன்றும் ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் பாட்டையில் வந்தவைகள்.  மற்ற தரீக்காக்கள் அனைத்தும் ஹள்ரத் அலி (ரலி) அவர்களின் வழி வந்தவைகளாகும்.


காதிரிய்யா தரீக்கா


      முஹிய்யுத்தீன் அப்துல்காதர் ஜீலானி (ரலி) அவர்களை ஞானாசிரியராகப் பின்பற்றி ஞானவழியை  அடைந்தவர்கள் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்களானார்கள்.  திக்ர் (இறைநாமம் உருப்போடல்) விர்து (பக்திப்பயிற்சி) ஹிஸ்ப் என்ற முறைகளில் இறைவனை எண்ணுவர்.  அவரது நிலைக்கேற்ப தஜல்லி (பரவசநிலை) ஏற்படும்.  திக்ர் பில் கல்ப் (மனத்தால் இறைவனை நினைத்தல்) திக்ர் பில் லிஸான் (நாவால் இறைவனை மொழிதல்) என்னும் இருமுறைகளை அனுசரித்து, சுவாசத்தை அடக்கி உடல் இயக்கத்துடன் இறைவனை நினைப்பார்கள்.


ரிஃபாஇய்யா தரீக்கா


      அஹ்மத் பின் அலீ அப்துல் அப்பாஸ் (1106 - 1183) என்னும் பெரியார் ரிஃபாயீ தரீக்காவின் முதல்வர் ஆவார். இந்தத் தரீக்கா விலுள்ளவர்கள் உயிருள்ள எவற்றையும் கொல்லமாட்டார்கள்  துன்பம் செய்தோர்க்கு மறுதலையாக இன்பம் செய்வர்.  இந்தத் தரீக்கா தென்ஈராக் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.


ஷாதுலிய்யா தரீக்கா


      இந்த தரீக்கா வட ஆப்பிரிக்காவில் தூனிஸ் நாட்டில் திலிம்சானில் பிறந்த அபூமத்யன் (ரஹ்) அவர்களால் கி.பி. 1197ல் தொடங்கப்பட்டு அதன்பின் கி.பி.1250க்கு முன் அபுல் ஹஸன் அலிபின் அப்துல்லாஹ் ஷாதிலி (ரலி) (கி.பி. 1197-1258)என்னும் ஞானாசிரியரால் நிறுவப்பட்டது. இந்தத் தரீக்காவில் அகத்திலும் புறத்திலும் இறையச்சம், சொல்லிலும் செயலிலும் ஸுன்னத்தைப் பின்பற்றுதல், வறுமையிலும் மக்களைப் போற்றாமலிருத்தல், இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனைத் துணையாகக் கொள்ளல் என்ற உஸூல்கள் (விதிகள்) இன்றியமையாதவைகளாகும்.   இறைவனுடைய திருநாமத்தை உருப்போடுதலை வலியுறுத்தி அதன்வழி ‘ஃபனா’ (‘தான்’ நீங்குதல்) என்னும் நிலை அடைதலை இவர்கள் போதித்தார்கள்.


நக்ஷ்பந்திய்யா தரீக்கா


      நக்ஷ்பந்த் முஹம்மத் பின் முஹம்மத் பஹாவுத்தீன் அல்புகாரி (கி.பி.1317-1389)  இத்தரீக்காவை நிறுவியவர்கள்.  திக்ரை மனதுக்குள்ளேயே கூறுவர்.  பொது மக்களுடனும் அதிகார வர்கத்துடனும் தொடர்பு கொள்வர்.   இதன் நோக்கம் மனித உறவில் மகத்தான நன்மைகள் ஏற்படும் என்பதாகும்.

 

 ஸுஹ்ரவர்திய்யா தரீக்கா


      அப்துல் காதிர் ஸுஹ்ரவர்த்தி (1167) உமர் சுஹ்ரவர்த்தி (1234) இவ்விருவராலும் ஆரம்பிக்கப்பட்டது.


மெளலவிய்யா தரீக்கா


      மெளானா ரூமீ (ரஹ்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவோர் இந்தத் தரீக்காவைச் சார்ந்தோராவர்.  ‘மஸ்னவி’ எனும் மிகப்பெரிய நூலை இவர்கள் எழுதி உள்ளார்கள்.


சிஷ்திய்யா தரீக்கா

    

  சிஷ்த்திய்யா தரீக்கா ஹள்ரத் உதுமான் ஹாரூனி (ரஹ்) அவர்களால் நிறுவப்பட்டது. அஜ்மீரில் அடக்கம் பெற்றுள்ள ஹள்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்த்தி (ரஹ்) என்னும் ஞானி அவர்களால்  பிரபல்யம் பெற்றது .  இவர்கள் அஜ்மீரில் தங்கிப் பல அற்புதங்கள் செய்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வாழ்ந்து மறைந்தார்கள்.


திஜானிய்யா தரீக்கா


      வடஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த அபுல் அப்பாஸ் அஹமத் திஜானி (கி.பி. 1737 - 1815) என்பவரால் நிறுவப்பட்டது.  இந்தத் தரிக்காவைச் சேர்ந்தோர் “அஹ்பாப்” எனப்படுவர்.  நாள்தோறும் குறிப்பிட்ட வேளைகளில் திக்ர் -  பக்திப் பயிற்சி செய்வார்கள்.


ஸனூஸிய்யா தரீக்கா


      கி.பி. 1837-ல் ஷெ­ய்க் முஹம்மது என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது.  இது காதிரிய்யா தரீக்காவின் ஒரு கிளையாகும்.  இஸ்லாமியக் கட்டளைகளை மிகவும் பக்தியுடன் ஒழுங்காகப்  பின்பற்றுகிறவர்கள்.


      இன்று உலகில் இரு நூறுக்கும் மேற்பட்ட தரீக்காக்கள் உள்ளன.  (சில பெரிய தரீக்காக்களின் வழி பல கிளை தரீக்காக்களும் உள்ளன.) காதிரிய்யா தரீக்காவுக்கு உலகில் பல கிளை தரீக்காக்கள் இருந்து வருகின்றன.  அஹ்மத் அல் பதவீ (ரஹ்) அவர்களின் தரீக்கா அஹ்மதிய்யா என்றும், இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களின் தரீக்கா அத்ஹமிய்யா என்றும், ஜூனைதிய்யா என்றும், கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் தரீக்கா கஸ்ஸாலியா என்றும், ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் தரீக்கா ஹல்லாஜிய்யா என்றும், பாயஜீத்  பிஸ்தாமி (ரஹ்) அவர்களின் தரீக்கா பிஸ்தாமிய்யா என்றும் தைஃபூரிய்யா என்றும், சுஹ்ரவர்த்தி (ரஹ்) அவர்களின் தரீக்கா  சுஹ்ரவர்த்தியா என்றும், சிந்தா ஷா மதார் (ரஹ்) அவர்களின் தரீக்கா மதாரிய்யா என்றும், மெளலானா ரூமி (ரஹ்) அவர்களின் தரீக்கா தசூக்கியா என்றும் அவற்றின் மூலவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.  கல்வத்து நாயகம் அவர்களின் தரீக்கா இலாஹிய்யா தரீக்கா எனப்பெயர் பெறுகிறது.     (தொடரும்)