பொறுமையும் சகிப்புத் தன்மையும்
பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுங்கள் என்பதாகத் திருமறையில் அருளப்படுகிறது! நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்பதாகவும் திருமறையில் அருளப்படுகின்றது!
பொறுமை ஈமானில் சரிபாதி (இறைநம்பிக்கையில் சரிபாதி) என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அருளுகிறார்கள்.
பொறுமையே எனது பெருமை என்பதாகவும் நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அருளுகிறார்கள்.
பொறுமை கடலினும் பெரிது என்னும் மூலமொழியும் உண்டு! எனவே, வணக்கத்தில் மட்டுமல்ல : வாழ்க்கை முழுவதிலும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் மனித குலம் பேண வேண்டிய அடிப்படை நற்குணங்களில் முக்கியமானவை என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும்!
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களும் நபித்தோழர் ஹள்ரத் அபூபக்ரு ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மாற்று மத அன்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ஹள்ரத் அபூபக்ரு ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடன் வாங்கி இருந்தார்கள். வந்தவர் பணத்தைக் கேட்டு விட்டு, மிக மோசமாக ஏசத் தொடங்கிவிட்டார். அனைத்தையும் கேட்டுக் கொண்டு ஹள்ரத் அபூபக்ரு ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களும் ஏசிக் கொண்டிருந்தவரை புன்னகை தவழப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
சிறிது நேரத்தில் ஏச்சுப் பேச்சு அதிகமாகவே கோபமடைந்த ஹள்ரத் அபூபக்ரு ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏசியவரை பதிலுக்கு ஏசத் தொடங்கிவிட்டார்கள்! உடனே அவ்விடத்திலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் புறப்பட்டு விட்டார்கள். இதனைக் கவனித்துவிட்ட ஹள்ரத் அபூபக்ரு ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏசுவதை நிறுத்தி விட்டு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அடைந்து,அவர் என்னை ஏசியபோது, இரசித்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள். நான் ஏசத் தொடங்கியபோது என்னை விட்டு விட்டுப் புறப்பட்டுவிட்டீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள்,கடன் கொடுத்தவர் உங்களைத் தரக்குறைவாக ஏசிப் பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் பொறுத்துக் கொண்டு - சகித்துக் கொண்டு இருந்தீர்கள்! அப்போது இறைவன் ஒரு வானவரை அனுப்பி, அவர் திட்டியதற்கு பதில் சொல்லி அவரைச் சபித்துக் கொண்டிருந்தார். எப்போது நீங்கள் பொறுமை இழந்தீர்களோ அப்போது அங்கு ஷைத்தான் பிரசன்னமாகி விட்டான்! ஷைத்தான் பிரசன்னமான இடத்தில் எனக்கு வேலை இல்லை - மரியாதை இல்லை என்பதனால் தான் நான் புறப்பட்டு வந்து விட்டேன் என்றருளினார்கள்!
ஆகவே, பொறுமை இருக்கும் இடத்தில் இறைவன் இருக்கின்றான் என்னும் சேதியும் பொறுமை இழந்த இடத்தில் சாத்தான் குடியேறி விடுகின்றான் என்னும் சேதியும் இச்சம்பவத்தின் மூலம் நமக்கு விளங்குகின்றன!
குடும்பமாக இருந்தாலும் சரி; தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி;ஆட்சி அதிகார இடங்களாக இருந்தாலும் சரி, பொறுமையைக் கையாண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்பது கண்கூடான சேதியாகும்!
இன்று ஆங்காங்கே சாலைகளில் செல்லும் முஸ்லிம்களின் வாகனங்களில் மாஷா அல்லாஹ் என்னும் வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்! மாஷா அல்லாஹ் என்றால், எதனை அல்லாஹ் (இறைவன்) நாடினானோ அது என்று பொருள்! அதனை முழுமையாகச் சொல்வதென்றால் மாஷா அல்லாஹு கான வமா லம் யஷஉ லம் யகுன் என்று கூறவேண்டும்! எதனை இறைவன் நாடினானோ அது தான் நடந்தது; மேலும் அவன் நாடியதே நடந்தேறும் என்பது இவ்வாசகத்தின் பொருள்! ஆம்! இறைவன் நாடியதுதான் நடக்கின்றது என்னும் நம்பிக்கை நமது மனதில் உறுதியாகி விட்டால் நமக்குக் கவலையோ அச்சமோ ஏற்படப்போவதில்லை! எவற்றைக் கண்டும் நாம் பதற்றம் அடைய வேண்டியதில்லை! எவ்வளவு பெரிய கஷ்டமோ நஷ்டமோ ஏற்பட்டாலும் அவற்றைக் கண்டு பீதி அடையாமல் பொறுமை கொள்ள வேண்டும் என்பதுதான் நான்குமறை வேதங்களின் தீர்ப்பாகும்!
எதைக் கொண்டு வந்தோம் - அதனை நாம் இழப்பதற்கு? எதனை நாம் படைத்தோம் அது நம்மை வந்து அடையாமல் போனதற்கு? என்னும் திருவாசகத்தை நாம் எக்கணமும் நினைவில் கொண்டால் பொறுமையின் உச்சத்தை நாம் எட்டிவிடலாம்! பொறுமையும் சகிப்புத்தன்மையும் நிறைந்த வாழ்வே நம்மை பக்தி வழியிலும் முக்தி வழியிலும் வெற்றி வழியிலும் இட்டுச் செல்பவை என்பதனை எக்கணமும் நாம் மறத்தல் ஆகாது!
17.07.12 அன்று திருச்சிபுணூயூ வானொலியில் ஆற்றிய உரை)