• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Aug 2012   »     ​நல்ல பெண்மணி​


மகளிர் பக்கம்                                                                                                             நெடுந்தொடர் ....

நல்ல பெண்மணி​

 ( நன்றி : முஸ்லிம்பெண்களுக்கு -  எம். ஆர். எம்.முகம்மது  முஸ்தபா)

                                                                            பெயர் சூட்டுதல்

 

    சிலர் தம் பெயரைக் கூறவே கூச்சப்படுவார்கள்.  அதற்குக் காரணம்  அவர்களின் பெயர்,அழக்கற்றதாகவோ அழகற்ற பொருள் உள்ளதாகவோ இருப்பதாகும்.  இவ்விதப் பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு இடாதீர்கள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவி ஒருவரின் பெயரைக் கூட மாற்றி அமைத்திருக்கிறார்கள்.  ஒருவருக்கு அஸ்ரம் என்னும் பெயர் இருந்தது.  அதன் பொருள்  வெட்டுபவர் என்பதாகும்.  அந்தப் பெயரை மாற்றி, அவருக்கு அவர்கள் சுர்ஆ என்று பெயரிட்டார்கள்.  அதன் பொருள் விவசாயி என்பதாகும்.


      ஓர்  உண்மையை உங்களுக்கு கூறட்டுமா? ஒருவரின் பெயர் அவரின் குணங்களை உருவாக்குகின்றது.  ஜமால் என்றும் பெயர் பெற்றவர்கள், பெரும்பாலும் மென்மையான இயல்பு உள்ளவர்களாயும், ஜலால் என்னும் பெயர் உள்ளவர்கள் பெரும்பாலும் வன்மையான இயல்பு அமைந்தவர்களாகவும் இருப்பதுண்டு.  ஜமாலியத், ஜலாலியத் என்னும் இறைவனின் இருவேறு தன்மைகளை  இப்பெயர்கள் குறிப்பதே அதற்குக் காரணமாகும்.  அல்லாஹ்வின் 99 திருநாமங்களில்  ஜமாலியத் உள்ள நாமங்களும் இருக்கின்றன.  ஜலாலியத் உள்ள நாமங்களும் இருக்கின்றன.


      அழகிய பெயரை, அழகிய பொருள் உள்ள பெயரைத் தேர்ந்தெடுத்ததும், அது உச்சரிக்க இலகுவானதாக இருக்கின்றதா என்று பாருங்கள்! எத்தனையோ அழகான பெயர்கள், அழகான பொருள் உள்ள பெயர்கள், மக்களால் சிதைக்கப்படுகின்றன. எனவே, அவ்விதப் பெயர்களை  உங்கள் பிள்ளைகளுக்கு இடுவதில் எச்சரிக்கையாயிருங்கள்!


      நீண்ட பெயர்களையும் உங்கள் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள்! ஏனெனில், நீண்ட பெயர்களைக் கூறி எவரும் அழைக்க மாட்டார்கள்; இரண்டு சொற்களுக்கு மேல் பெயர் இராமல் பார்த்துக் கொள்ளுங்கள்!


      சிலர் பெயர் அழயாயிருப்பதை மாத்திரம் கவனித்து, அந்தப் பெயரை வைத்து விடுகின்றனர்.  அதற்கு என்ன பொருள்,அது எவருடைய பெயர் என்றெல்லாம் கவனிப்பதில்லை.  ஒருவருக்குக் குழந்தை பிறந்தது; நல்ல பெயர் ஒன்றைக் கேட்டு வரலாம் என்று  ஒருவரிடம் சென்றார்.  அவரிடம் ஒரு நல்ல பெயரைக் கூறும்படி கேட்டார்.  அவர் ஒரு ‘கிதாபைத்’ தூக்கிக்கொண்டு வந்தார்.  அதை அப்படிப்புரட்டினார்.  இப்படிப் புரட்டினார்.  அதில் வரும் பெயர்களில் எந்தப் பெயர் நன்றாக இருக்கிறது என்று பார்த்தார், ‘நம்ரூத்’ என்பது அழகான பெயராக அவருக்குத் தோன்றியது.  அந்தப் பெயரையே வைக்கும்படி வந்தவரிடம் கூறிவிட்டார்.  அவரும் அந்தப் பெயரைசொல்லிப் பார்த்தார்.  ‘நம்ரூத்’ நன்றாகத்தானே  இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். வீட்டிற்கு வந்து அந்த பெயரையே தம் பிள்ளைக்கு வைத்துவிட்டார்.  பிறகுதான் தெரிந்தது அவருக்கு, அது அல்லாஹ்வுடைய பகைவனின் பெயர் என்று. நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அளவிறந்த இன்னல் இழைத்து, அவர்களைத் தீக்குண்டத்தில் தூக்கி எறிந்தவனாவான் ‘நம்ரூத்’. இவ்விதத்தவறுகள்  எல்லாம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!


      குழந்தைக்கு ஏழாம் நாள் பெயர் வைத்தபின் அவர்களின் நலனிற்காக அகீக்கா கொடுப்பது அவசியமாகும்.  ஆனால், இந்தப்பழக்கம் இப்பொழுது  இல்லை என்று கூறும் அளவு குறைந்து விட்டது.  இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள்‘ஒரு தந்தை தம் மகனுக்காக அகீக்கா கொடுக்காவிட்டால், அந்த மகன் இறந்தால் அவன் தன் தந்தைக்காக நியாயத் தீர்ப்பு நாளின் போது தலையிடமாட்டான்’ என்று கூறுகின்றனர். ஆனால், மற்ற மத்ஹபுடைய இமாம்கள் அகீக்காவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.  குழந்தை வருங்காலத்தில்  நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் செய்யப்படும் இறைஞ்சுதலே அகீக்காவாகும்.  குழந்தை பிறந்ததும், ஆடோ, மாடோ அறுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு அளிக்கவேண்டும்.  குழந்தை பிறந்த ஏழாவது நாள் பொழுது உதயமான சற்று நேரத்தில், இதனைச் செய்வது நபியின் வழிமுறையாகும்.  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தம் மகனார் இபுராஹீம் பிறந்த ஏழாவது நாள் அவருக்காக இரண்டு ஆடுகளை அறுத்து, அவற்றின் இறைச்சியை ஏழைகளுக்குக் கொடுத்தபின், அவரின்தலைமுடியை இறக்கி, அதன் எடை வெள்ளியை ஏழைகளுக்கு  தர்மம் செய்தனர்.


      ஆண்  குழந்தைகளுக்கு, அவர்கள் குழந்தையாயிருக்கும் போதே  சுன்னத் என்னும் விருத்தசேதனம் செய்வது இலகுவாகும்.  ஏற்றமுமாகும்.  ஆனால் இப்பொழுது இது ஆறு முதல் பத்து வயதிற்குள்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.  இதனை ஆடம்பரத்துடன் செய்ய வேண்டும் என்று சில பெண்கள் ஆசைப்படுகின்றனர்.  எதையும் ஆடம்பரமாகச் செய்யக் கூடாது.  அதிலும் இதை ஆடம்பரமாகச் செய்ய வேண்டியதில்லை.


      பெற்றோர்கள்  குழந்தைகளை ஒழங்காக வளர்ப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.  குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல கல்வி அளிக்க வேண்டும்.  சிறந்த ஒழுக்கம்

 கற்றுக் கொடுக்கவேண்டும்.  சத்தான  உணவும், நடுத்தர  உடையும் வழங்கத் தவறக் கூடாது.       குழந்தைகள் பெற்றோரிடம்  ஒப்படைக்கப்பட்ட  அமானிதம் ஆவர்.  அந்த அமானிதத்தை நல்ல முறையில் காக்க வேண்டிய கடமை பெற்றோர்களுடையது. “விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாக ஆகக் கூடிய  நரக நெருப்பிலிருந்தும்  இரட்சித்துக் கொள்ளுங்கள்!” (66:6)  என்று அல்லாஹ் கூறுகிறான்.  குடும்பத்தினர் என்பதில் குழந்தைகளும் அடங்குவர்.


      “குழந்தைகளை  உலகின் நெருப்புத் தீண்டாமல் காப்பாற்றுவதை விட, நரகின் நெருப்புத் தீண்டாமல் காப்பாற்றுவதே மேலானதாகும்” என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் சொல்கிறார்கள்.                       (தொடரும்)