சிறப்புச் செய்தி
உதய நாள்! இதய நாள்!
-ஆலிம் புலவர்-
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்77 ஆவது பிறந்த பொன்னாள் ஷவ்வால் பிறை 16 அன்று மலர்கிறது. குத்புமார்கள் உலகிற்குப் பொதுவானவர்கள். அவர்களின் வருகை அல்லாஹ்வின் கருணையாகவும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரஹ்மத்தின் தொடர்ச்சியாகவும் நிகழ்வது.
ஒவ்வொரு குத்புமார்களும் தங்கள் வருகையின் போது இருந்த உலகை மாற்றி தங்கள் வந்த பின்னால் அன்றைய உலகின் தேவைக்கேற்ப பெரும்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நமது செய்குனா அவர்களின் காலம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தை சிதைக்கின்ற வஹ்ஹாபிஸம் சிறகு விரித்துப் பறக்கும் காலம்.
வஹ்ஹாபிகள் ஏற்படுத்திய குழப்பங்களால் முஸ்லிம் மக்கள் நல்லது எது கெட்டது எது எனப்புரியாமல் குழம்புகின்ற காலம்.
அதுமட்டுமின்றி இறையறிவான மெய்ஞ்ஞானம் பற்றி - அதிலும் மெய்யான மெய்ஞ்ஞானம் பற்றி சிந்திப்போர் அருகிப்போன காலம்.
ஞானவழி நடக்கும் ஆர்வலர்கள் கூட வஹ்தத்துல் உஜூத் எனும் ஒரே உள்ளமை பற்றி வெளியே பேசஅஞ்சி ஒதுங்கிய காலம்.
இந்தக் காலக் கட்டத்தில் உதயமான நமது ஆருயிர் குருநாதர் அவர்கள் வஹ்ஹாபிஸத்தின் முகத்திரையைக் கிழித்து அதன் தீமைகளை மக்களுக்கு தெளிவாக விளக்கி வைத்தார்கள்.
வஹ்ஹாபிகள் காபிர்கள் என்றே தீர்ப்புச் செய்த அவர்கள்; அவர்களிடம் பெண் எடுக்க வேண்டாம் கொடுக்க வேண்டாம் எனும் அளவு அதன் தீமையை உணர்த்தியுள்ளார்கள்.
மத்ஹபுகளின் -இமாம்களின் - இன்றியமையாத் தன்மையை எடுத்துரைத்து மத்ஹபுகளின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
மீலாது கொண்டாடலாமா ? மெளலிது ஓதலாமா? புர்தா கூடுமா? எனவெல்லாம் சலனப்பட்டுக் கொண்டிருந்த சுன்னத் வல்ஜமாஅத் மக்களின் மனக்குழப்பங்களை நீக்கி பெருமானார் புகழ் பாடுவதே பிறவிப்பயன் என எழுச்சியூட்டி, ஊரெங்கும் மெளலிது, புர்தா, நாடெங்கு மீலாது விழாக்கள் கொண்டாட மாபெரும் உந்து சக்தியாக விளங்குகின்றார்கள். முஸ்லிம் மக்களிடம் புரையோடிப் போயிருக்கும் நேர்மையற்ற வாழ்க்கை முறைகளை இடித்துரைத்து திருந்தி நடக்க உணர்வூட்டுகின்றார்கள்.
அல்லாஹ்வைப் பற்றியும் அவனது திருத்தூதர் பற்றியும் இனியொரு விளக்கம் தேவையில்லை என்னும் அளவு தெளிவாக விரிவாக உரைகளின் மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.
சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் வாழும் முஸ்லிம்கள்; அவர்களே அறியாமல் வஹ்ஹாபிஸத்திலும், தீவிரவாதத்திலும்,நேர்மையற்ற வாழ்க்கை முறையிலும், உழன்று கொண்டிருக்கும் நிலையை வெளிச்சமாக்கி ஸஹாபாக்கள், தாபியீன்கள்,இமாம்கள், குத்புமார்கள், வலிமார்கள், ஸாலிஹீன்கள், முன்னோர்கள் எவ்விதமாக வாழ்ந்தார்களோ அந்த சுன்னத் ஜமாஅத் - உண்மையான சுன்னத் ஜமாஅத் உருவாகவேண்டுமென புதுமைக் கருத்தை விதைத்திருக்கிறார்கள்.
உள்ளொளி பெற்று- உலக அறிவு முழுமையாகி, உடல் உரத்தோடு,தீமைகளை அழிக்கும் வீர உணர்வோடு. உலக உயிர்களிலெல்லாம் தன்னையே கண்டு மனிதநேயம் கொள்ளும் புதிய சமுதாயம் ஒன்றை தங்களின் இலட்சிய சமுதாயமாக உருவாக்கிட அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பர்களே!,
அருமைமிகு நாயகம் அவர்களின் சாதனைகளை விபரிக்க இந்த ஏடு போதாது!
உலகிற்குப் பொதுவாக உதயமான வாப்பா நாயகம் அவர்கள் முரீதுகளாகிய எமக்குச் சொத்தாகக் கிடைத்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் ஆழிய கருணையினால் எம் பாபக்கரங்களைப் பற்றி எம்மைப் புனிதப்படுத்த தங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் உதய நாள்! நமக்கெல்லாம் இதய நாளாகும்! எழுச்சி நாளாகும்!மகிழ்ச்சி நாளாகும்!
அவர்களின் பிறந்த பொன்னாளில் நமது சிந்தனைகளைக் கூர்மையாக்கி நமக்குள் நாமே உற்றுப் பார்த்து அவர்களின் உண்மைப் பிள்ளைகளாக உருவாக எண்ணங்களால் மீண்டும் பிறந்து கொள்வோம்.