• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Aug 2012   »    அர்ஷின் பனித்துளி


அர்ஷின் பனித்துளி


யாரஸூலல்லாஹ்1 தங்களை

 வாசித்தால் விழிகளில்

வற்றாத ஜம்ஜம் ஊற்றெடுக்கும்.

யோசித்தால் அறிவு அருவியாகும்.

நேசித்தால் நெஞ்சம்

நித்திய ஜீவன் பெறும்.

சக்கை வார்த்தைகள் கூட

தங்கள் புகழ் நதியில் குளித்தெழுந்தால்

சாகா வரம் பெற்றுத் திகழும்.

பேசுகின்ற வாய்களைப் பெருமைப்படுத்தும்

பெருமானே!

கேட்கின்ற செவிகளுக்கு கிருபை சேர்க்கும்

கருணை மழையே!

நாயகமே!

தங்கள் பாதம் படும் இடங்களன்றோ- எங்கள்

பார்வை பதியும் இடங்கள்.

உங்கள் அடிச்சுவடுகள்தானே

எங்கள் அரிச்சுவடிகள்.

என்னைத் தொடருங்கள் என தாங்கள்

நடந்து சென்ற புனிதச் சுவடுகள் மீது

கால்களால் நடத்தல் தகுமோ- கூடாதல்லவா?

எங்கள் இதயங்கள் நடக்கின்றன.

உங்களைத் தொடர்ந்த எட்டுக்கள்

இறை சன்னிதானத்தை யல்லவா

எட்டுகின்றன.

பாலைவனப் பவுர்ணமியே! - தாங்கள்

சரித்திர பூமிகளில் பிறக்காமல்                   

சாதாரண பூமியில் மலர்ந்தது

உலக சரித்திரத்தை புதிதாய் மாற்றவா?

சண்டை மனிதர்களுக்கிடையே

சமாதானத்தை விதைக்கவா!

கொடியவர்களின் நடுவே பூத்த

கொடிமலரே! - தாங்கள்

வரலாற்றில் பூத்த ஒரேயொரு குறிஞ்சிமலர்!

பூவின் இலைகளிலெல்லாம் அர்ஷின் பனித்துளி

கிளைகளிலெல்லாம் குர்ஸியின் வசந்தம்

இதழ்கள் முழுதும் இறைவனின் வாசம்

பூவின் ஒளிசிந்தும் மகரந்தத் துளிகள் ஒவ்வொன்றும்

ஒவ்வோர் ஆயத்துக்களாக அல்லவா         

உலா வருகின்றன!