வரலாற்றுச் சிறப்புமிக்க வலிகமாவில்
எழுச்சிமிகும் விழா!
இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் முஹிய்யுத்தீன் M.A, Ex. M.P அவர்கள்ஆற்றிய உரையிலிருந்து...
உரைத் தொகுப்பு : ஆஷிகுல் கலீல் B. Com;
அத்தரீக்கத்துல்ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் சார்பில் சிறப்பும், தொன்மையும் வாய்ந்த வெலிகமாவில்நடைபெறும் மீலாது விழாவில் என்னை பங்கேற்கச் செய்த சங்கைமிகு இமாம் வாப்பா நாயகம்அவர்களுக்கும், சங்கைமிகு சின்ன மெளலானா அவர்களுக்கும்தொடக்கமாக நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். இப்பெருவிழாவில் நான் கலந்து கொள்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இப்பெருவிழாவில் கலந்து கொண்டு பயனடையக் கூடியவாய்ப்பை நல்கிய நல்உள்ளங்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இப்பெருவிழாவில் கடல் கடந்து பல நாடுகளிலிருந்துபங்கேற்றிருக்கும் அனைவரையும் நான் புரிந்து கொண்டவன். அனைவரும் என்னையும் புரிந்து கொண்டவர்கள். அதன் மூலம் சங்கைமிகு இமாம் வாப்பா நாயகமவர்களைநான் புரிந்து கொண்டேன்.
1960-களில் ஒருமுறை திருச்சி மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் யூஸுஃப்ஸாஹிப் அவர்களும் நானும் திருமுல்லை வாசலில் மீலாது விழாவில் பங்கேற்கச் சென்றோம். அப்போது தான் சங்கைமிகு யாஸீன் மெளலானாரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து உரையாடக்கூடிய பெரும் பாக்கியம் எனக்குக்கிடைத்தது.
அதற்குப் பிறகு யாஸீன் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்திருமகனார் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களை தளபதி பீகுர் ரஹ்மான் உடன் சேர்ந்துமுதன் முதலாக சந்தித்து அவர்கள் தம் உரைகளைக் கேட்டு பேரின்பம் பெற்ற நிகழ்வு என்மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அப்பேரின்பம் இன்னும் தொடர்கிறது.
நல்லோரைக் காண்பதும் நன்று; நல்லோரின் உரைகளைக் கேட்பதும் நன்று;நல்லோர் தம்மை அணுகி இருப்பதும் நன்று... எனக் கூறப்படுவதற் கொப்ப சங்கைமிகு வாப்பாநாயகம் அவர்களோடு உரையாட உறவாட நல்லதோர் வாய்ப்புக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சிஅடைகிறேன். அன்னவர்கள் தம் உறைவிடத்தில்சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்புக் கிடைத்தமைக்கும் மிக்க மகிழ்ச்சிஅடைகின்றேன். சங்கைமிகு இமாம் வாப்பா நாயகம் அவர்கள், தங்களின்தந்தையார் யாஸீன் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அருளப்பட்டஅறபு - அறபுத்தமிழ் அகராதியை அழகுத் தமிழில் வழங்கியுள்ளார்கள். அதன் முதல் பிரதியைப் பெறக்கூடிய பெரும்வாய்ப்பு எமக்குக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தமிழ்நாட்டில் இவ்வளவு காலமாகியும் இப்படிப்பட்ட ஓர் அகராதி உருவாக்கப் படவில்லை. வெளியிடப் படவில்லை. சிலகாலங்களுக்குமுன் சுல்தான் ஹஜ்ரத் என்பவர்ஓர் அகராதியை எழுதினார். ஆனால் அது முழுமைபெறவில்லை.
சங்கைமிகு இமாம் வாப்பா நாயகம் அவர்கள்தாம் முதன் முதலாக தமிழில்ஓர் அழகிய அகராதியை வழங்கியுள்ளார்கள். அன்னவர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் இனமும் என்றென்றும் நன்றியைஉரித்தாக்கும்.
அறபியை தமிழில் மொழி பெயர்ப்பது என்பது வேறு. அறபு வார்த்தைகளுக்கு உரிய சரியான பொருளைக்கூறுவது என்பது வேறு. அறபு மொழியைப்படித்தவர்களால் மட்டும் அறபு வார்த்தைக்கு சரியான பொருளைக் கூறிவிட முடியாது. அவ்வாறு சரியான பொருளை அருள்வதற்கு உயர்ந்தமொழி ஞானமும் மொழி வளமும் அமைந்திருக்க வேண்டும். அவ்வகையில் சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் அரபு நாட்டோடும் - வழிமுறையால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் 34ஆவது வாரிசாகவும் விளங்கக் கூடிய காரணத்தால் அறபுச்சொல்லுக்கு சரியான அழகுத் தமிழை வழங்கியுள்ளார்கள்.
வாப்பா நாயகமவர்களின்பாட்டனார் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் சென்று அவர்கள் மூலம் உதித்தவர்கள். அரபுநாடு எங்கும் சென்று பின்னர் பகுதாது சென்று பாரதம் வந்து பல பகுதிகளில் வாழ்ந்துவெலிகமாவான இங்கு வந்து நம் முன் பிரசன்னமாகியிருக்கிறார்கள். எனவே சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் 15ஆம்நூற்றாண்டு வரலாற்று நாயகராக விளங்குகிறார்கள். அரேபிய traditional முறைப்படிவழிவந்தவர்களாக இருப்பதால் தான் அரபு வார்த்தைக்கு அழகான முறையில் சரியான பொருளைக்கூறியிருக்கிறார்கள். இச் சீரிய பணிக்குதமிழ் இலக்கியம் என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறது.
திருக்குர்ஆன் ரீஃபில் இடம் பெற்றுள்ள அரபுவார்த்தைகளுக்கு இதுவரை தமிழ் அகராதி உருவாக்கப்பட வில்லை. அதேபோல ஹதீதுகளில் இடம்பெற்றுள்ள அரபுவார்த்தைகளுக்கும் தமிழில் அகராதி இதுவரை உருவாக்கப் படவில்லை. தமிழகத்தில் எத்தனையோ அறபு மதுரஸாக்கள்உள்ளன. அவற்றில் ஸர்ஃபு, நஹ்வு(இலக்கணம்)போதிக்கப் படுகின்றன. ஆனால் அவற்றை இதுவரையாரும் தமிழில் மொழிபெயர்க்க வில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதயதின விழாவில்வெளியிடப்பட்டடுள்ள இந்த காமூஸ் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக அமைந்து, எல்லாத்துறைகளிலிருந்தும் அறபு இலக்கியங்கள் இலக்கணங்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்என்பது நம் அனைவரது ஆசையாக உள்ளது; நம்முன் பிரசன்னமாகியுள்ளமகான் வாப்பா நாயகம் அவர்களின் துஆவைக் கொண்டு நமது ஆசை நிறைவேறும் எனநம்புகின்றேன்! இந்த அகராதி எல்லா வற்றிற்கும் முன்மாதிரியாக விளங்கும் என்பதில்எந்தச் சந்தேகமும் இல்லை.
இது தொடக்கம் தான். இப்படிப்பட்ட புதிய வழிகாட்டலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்பாரம்பரியத்தில் வந்தவர்கள் தாம் செய்து காட்ட முடியும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்பாரம்பரியத்தில் உதித்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். பாபம் செய்ய மாட்டார்கள்.
எத்தனையோ அறிஞர்கள் உலகில் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால்அவர்களின் பிள்ளைகள் அறிஞர்களாக இருந்ததில்லை. பாரில் எத்தனையோ மன்னர்கள் - சுல்தான்கள், பேரரசர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால் அவர்களின்பிள்ளைகள் அவர்களைப் போன்று வாழ்ந்தவர்களில்லை.
மகாத்மா காந்தி நல்லவர். ஆனால் அவரின் மகன் அவருக்கு நேர் எதிரான கொள்கையுடையவர். இப்படித்தான் உலக வரலாறு அமைந்திருக்கிறது. ஆனால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகள் அனைவரும் உத்தமர்கள்; உயர்வானவர்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பொதிந்திருந்த முத்திரை பிரகாசம்அன்னவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகளிடம் இருப்பதால் அன்னவர்கள் தவறுசெய்யமாட்டார்கள். தவறு செய்யவும் முடியாது. வெளிச்சத்தில் இருட்டுக்கு என்ன வேலை? நூரே முஹம்மதிய்யா என்னும் பிரகாசம்பிரவாகம் எடுத்து ஜொலிக்கும் அஹ்ல பைத்துகளிடம் இருள் அவ்வாறு தொத்திக் கொள்வதும்இயலாது! ஒருக்காலும் அவ்வாறு நிகழாது! மொழி, வரலாறு, மனத்தூய்மைகளைசெய்யிது மார்களின் வாழ்வு முறைகளிலிருந்து தாம் முழுமையாக நாம் அறிந்து கொள்ளஇயலும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தொன்மை எவ்வாறு இருந்தது என்பதனை அன்னவர்களின் திருப்பேரரான சங்கைமிகுவாப்பா நாயகமவர்கள் மூலமாகத் தான் காண்கிறோம். அன்னவர்களின் ஆக்கங்களால் தமிழ் மொழி மணம்பெறும்; மகிழ்வுபெறும். தமிழர்கள் நன்மை அடைவர்! இதனைஇனிவரும் காலம் உணர்த்தும்!
அறபியிலிருந்து சிங்கள மொழியில் அகராதி இதுவரை வெளியிடப்பட்டதாகத்தெரிய வில்லை. அதேபோல குர்ஆன் ரீஃபிலுள்ளவார்த்தைகளுக்கு சிங்களத்தில் அகராதி இதுவரை உருவாக்கப்படவில்லை. இம்மாதிரியான முயற்சிகளை தகுதி படைத்தவர்கள் உருவாக்க வேண்டும் என்பதற்கு சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் இந்த அகராதியை வழங்கியிருப்பதன் மூலம்வழிகாட்டியிருக்கிறார்கள். சங்கைமிகுவாப்பா நாயகமவர்களால் யாத்தளிக்கப்பட்ட அகராதியில் எத்தனை எத்தனை புத்தம் புதியவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன! எத்தனை எத்தனை நவீன சொற்கள் இடம் பெற்றுள்ளனஎனக் காணும் போது பேரின்பமாக உள்ளது. வாழ்வும் வாக்கும் ஒன்றாய் இருக்கும் இடத்தில் தான் எல்லாச் சிறப்புகளும்இருக்கும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராக்குகைக்குச் சென்ற போது அவர்களுடன் வேறு எவரும் இல்லை. அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கரடுமுரடான பாதைகளின் வழியே ஹிராக் குகைக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு உணவு கொண்டு சென்றபோது அவர்களோடு துணை செல்ல ஒருவரும் இல்லை. இன்று எத்தனை கோடி கால்கள் ஹிராவில் தடம்பதித்தன; பதிக்கின்றன?எத்தனை கோடி இதயங்கள் இன்று தெளஹீத் என்னும் ஒளியை உள்ளங்களில்ஏந்தியுள்ளன. இன்று உலகெங்கும் தெளஹீத்என்னும் ஏகத்துவம் பல்கிப் பெருகி பரவி விரவி வியாபித்து இருக்கின்றது என்றால்அதற்கு அறிஞர்களோ, அரசியல் வாதிகளோ, ஆட்சியாளர்களோகாரணமல்ல. அருமை அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல மவர்களின் வாரிசுகள் தாம்காரணம். உலகளாவிய அளவில் இஸ்லாத்தைஎடுத்து இயம்பியவர்கள் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் தாம். பெருமானார் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்களின் வழித் தோன்றல்களான சங்கைமிகு இமாம் வாப்பா நாயகமவர்கள்இங்கு பிரசன்ன மாயிருப்பதும் நாம் அவர்களோடு இருப்பதும் அவர்களோடு நாம்உறவாடி உரையாடி வருவதும் நாம் பெற்ற பாக்கியமும் நற்பேரும் இறையருளும் ஆகும்.(அல்ஹம்து லில்லாஹ்)
(பேராசிரியரின் உரை இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழிலும் தொடரும்..)