சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸுல்வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்களின் 76 வது உதயதின
விழாச் சொற்பொழிவுகள்
கலீபா. M. சிராஜுத்தீன்ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.....
நாம் இப்போது நமது உயிரினும் மேலான நமது ஷைகு நாயகம் அவர்களின்உதய தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம். இப்புனித விழாவில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளும் பாக்கியம் பெற்றவர்களாகவும் நாம் இருக்கிறோம்.
அல்லாஹ்,ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் படைத்து, தனதுகலீபாவாக இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தான். முதல் நபியான அவர்களின் உள்ரங்கமாக விலாயத்தும், வெளிரங்கமாக நபித்துவமும் திகழ்ந்தது. அவர்களுக்குப் பின் தோன்றிய ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களும் இவ்வாறேதங்களுடைய உள்ரங்கத்தில் விலாயத்தும் வெளிரங்கத்தில் நபித்துவத்தையும் கொண்டவர்களாகவும்விளங்கினார்கள். இந்த நபித்துவவரிசையில் முத்திரை நபியாக வந்து நமதுரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் பூவுலக விஜயத்தின் மூலம்நிறைவு செய்தார்கள். ஆனால், அவர்களுக்குப்பின், மக்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் காட்டிய வழியிலிருந்து மாறாமல் இருக்க ஆதாரமாக மள்ஹருல் ஹக் எனும்இறைதோன்று துறைகள்- அவதாரங்கள் தேவைப்பட்டன. நபித்துவம் நிறைவு பெற்ற காரணத்தால், உள்ரங்கத்தில் நபித்துவத்தையும் வெளிரங்கத்தில் விலாயத்தையும்கொண்டவர்களாக குத்புமார்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அத்தகைய குத்புமார்களின் வரிசையில் மாணிக்கமாகவந்துதித்துள்ள நமது ஷைகு நாயகமவர்கள் - நாம் பேசும் மொழி பேசுபவர்களாக -நம்மையயல்லாம் அரவணைத்துச் செல்பவர்களாக நமக்குக் கிடைத்திருப்பது எத்தகையபாக்கியம் என்பதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.
உதயமானோம்
மகாபாரதத்தில் கிருஷ்ணன், “எங்கெல்லாம் தர்மம் குறைந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான்அவதரிப்பேன்” என்பதாகக் கூறுகிறார். இதைமாற்றுமதச் சகோதரர்கள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். அதுபோல், நமது ஷைகுநாயகமவர்கள் எதற்காகத் தோன்றினார்கள்என்பதைத் தாங்களே இவ்வாறு விளக்குகிறார்கள் : “ஹக்கின் திருநாமம் எங்கனும் பரவவேண்டும். அதற்காக வழி வகைகளைச் செய்தல்வேண்டும். இதற்காகவே நாம் உருவம் பெற்றுஉதயமானோம்”. என அருளி யுள்ளார்கள் . மேலும், “இறந்து, மடிந்து,மாண்டு, மருண்டு, மயங்கிஇருக்கும் இதயங்களை ஹயாத்தாக்கவே நாம் அருவாயிருந்து உருவானோம்” என்பதாகஅருள்கின்றார்கள். ஆக, இறந்து, மடிந்து, மாண்டு,மருண்டு, மயங்கிப் போன இதயங்களில் தர்மத்தைக்காண முடியுமா? அதர்மத்தினால் தானே அவைநிறைந்திருக்கும். இப்படிப்பட்டஅதர்மத்தால் சூழ்ந்த அகிலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், இதுபோன்றமள்ஹர்கள் - அவதாரங்கள் வந்தே ஆகவேண்டும். அதற்காகத்தான் அவர்கள் உதயமாகி இருக்கிறார்கள்.
நமது கண்ணுக்குக் கண்ணான முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானிரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு, முஹிய்யுத்தீன் (தீனை உயிர்ப்பித்தவர்) என்ற திருநாமம் எப்படிவந்தது? மனித உருவில் மெலிந்து போயிருந்த தீனை, இவர்கள் தூக்கி நிறுத்தி, உயிர்ப்பித்து, ஆரோக்கியமான மார்க்கமாக மாற்றினார்கள் என நாம் வரலாறுகளில்படித்திருக்கிறோம். இது வெளிரங்கமானபொருள்தான். ஆனால், முஹிய்யுத்தீன்எனும் திருநாமம், அவர்களுக்குச் சூட்டப்பட்டதன்உள்ரங்கத்தைப் பார்த்தால், “இறந்து, மடிந்து,மாண்டு, மருண்டு, மயங்கிஇருக்கும் இதயங்களை ஹயாத்தாக்கியதால் தான்”அவர்கள் அத்திருநாமத்தால் அலங்கரிக்கப்பட்டார்கள். இதயங்களில் தீனை உயிர்ப்பித்ததால், முஹிய்யுத்தீன் எனும் திருநாமம் சூட்டப்பட்டதைப் போல்,இக்காலத்தில் அவதரித்துள்ள நமது ஷைகு நாயகமவர்கள் காலத்தின்முஹிய்யுத் தீனாகத் திகழ்கிறார்கள் என்பதை அவர்களின் இந்த அமுத மொழி வாயிலாகவேநாம் அறிந்து கொள்ளலாம்.
நாம் இந்த உலகத்திலேயே ஹக்கைக் காண முடியுமா? நமது வாப்பாநாயகமவர்கள், ”அருவாய் இருந்து உருவானோம்” என்றுஅருள்கிறார்கள். இதற்கு ஒரு முன்னுதாரணம்இருக்கின்றது.
பிரதி - பிரதிநிதி
மறைந்த கலீபா. நாட்டாண்மைக் காரர் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர். என்றாலும் எனக்குஉயிருக் குயிரான நண்பர். அவர்கள் ஒருமுறைஎன்னிடம் சொன்னார்கள் : “நமது தந்தை நாயகம் அவர்கள் எனக்கு ஒருமுறை பட்டோலைஎழுதியிருந்தார்கள். அதில், இன்ன தேதியில்,இன்ன நேரத்தில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இரயிலில் நாம்வருகின்றோம். அந்த இரயில்திண்டுக்கல்லுக்கு இத்தனை மணிக்கு வந்து சேரும். அங்கு வந்து எம்மைச் சந்தியுங்கள். “இந்த நமூனாவில்தான் ஹக்கை நீங்கள் தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள்!என்பதாக அப்பட்டோலை வந்தது. பாருங்கள்,எவ்வளவு வெளிப்படையாகச் சொல்கின்றார்கள்” எனஆச்சரியப்பட்டுச் சொன்னார்கள். நமது தந்தை நாயகம் அவர்கள், ஷரீஅத்தைப் போர்வையாகப்போர்த்திக் கொண்டு அவதரித்தவர்கள். அவர்கள் காலத்தில்,ஹக்கின் தாற்பரியம், நமது வாப்பா நாயகமவர்கள்மூலம் நாம் அறிந்து கொள்வது போன்று இல்லாமல் மறைமுகமாகவே கூறப்பட்டது என நான்நினைக்கிறேன்.
ஆனால்,நமது ஷைகு நாயகம் அவர்கள் எழுதியிருக்கிறார்கள் : “ஹக்கைத் தரிசிப்பதே நம்மைத்தரிசிப்பதாகும். நம்மைத் தரிசிப்பதேஹக்கைத் தரிசிப்பதாகும். இதுவேசாந்தியாகும். நாம் அல்லாது வேறொன்றில்லைஎன்ற மூலமந்திரம், உங்கள் மனதிலும் மூச்சிலும் ஊறிப்போகவேண்டும்” என அருளுகின்றார்கள். எவ்வளவுபகிரங்கமான அறிவிப்பு.. பட்டவர்த்தமான அறிவிப்பு...- இது எத்தனையோ காலத்திற்குமுன் சொல்லப்பட்டதுதான். இன்றைக்குச்சொல்லும்போது நமக்குப் புதிதாக இருக்கின்றது. ஏனென்றால், அவர்களது வெளிப்பாடுகளை நாம் எடுத்துப்பார்ப்பதுமில்லை. இதைப் பற்றிச்சிந்திப்பதுமில்லை.
ஹக்கைத் தரிசித்ததற்குப் பிறகு வேறென்ன வேண்டும்...? அதுதான்சாந்தி. எப்படி மறுமையில், இறைக்காட்சி கிடைத்தபிறகுதான் ஆத்மா சாந்தி யடையும் என்றுசொல்லப்படுகின்றதோ இதில் ஹக்கைச் சந்தித்தபிறகு தான் அந்த சாந்தி கிடைக்கும் என்பது தான் உள்அர்த்தமாகச்சொல்லப்படுகின்றது. ஹக்கின் தரிசனம்என்றைக்கு ஒருவனுக்குக் கிடைக்கின்றதோ, அன்றைக்குத்தான் அவன் சாந்திஅடைந்தான். ஆனால், அதற்குச் சில ர்த்துக்கள்இருக்கின்றன.
மேலும்,நமது வாப்பா நாயகமவர்கள், “இங்கு ‘நாம்’ என்றுசொல்வது தனிப்பட்ட எம்மை மட்டுமல்ல, எல்லாமாகவும் நாம்இருக்கிறோம் என்று தான் சுட்டிக் காட்டுகின்றோம். நாம் என்று சொன்னதும், அதன் உட்பொருள் விளங்காதவர்கள்அதைத் தவறாகப் புரிந்து கொள்கின்றார்கள். அதை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்கின்றார்கள். இதற்காக நாங்கள் அதைச் சொல்லாமல் இருக்கமுடியாது. நாம் அப்படிச் சொல்லவில்லலை -இப்படிச் சொல்லவில்லை என்று விளக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சொல்லிக் காட்ட வேண்டிய தேவையும் எங்களுக்குஇல்லை” என குறிப்பிடுகின்றார்கள். புரியாதவர்கள் புரியாமல் ஆடினால் ஆடிவிட்டுப்போகட்டும். யதார்த்தம், யதார்த்தத்தை வெளிப்படுத்தித் தான் தீரும். வெளிப்படுத்தத் தான் வேண்டும்.
வரவேண்டும் - வரம் வேண்டும்
நமது ஷைகு நாயகமவர்கள் ஆரம்பத்தில் தங்களை - தங்களின் உள்ரங்கத்தைவெளிக்காட்டவில்ல. நமது தந்தை நாயகம் யாஸீன் ரலியல்லாஹு அன்ஹு மறைந்தபின், 40ஆவது நாள்நிகழ்வின்போதுதான் முதன்முதலாக, நமது ஷைகு நாயகம் அவர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். அப்போ தெல்லாம் மிகச் சாதாரணமாக, தங்களின்உயரிய தரத்தை வெளிக்காட்டாமல் இருந்தார்கள். விசா முடிவுற்றுச் சென்னைக்குச் செல்லும் போது, மறைந்தகலீபா. அப்துல் கறீம் ஜமாலி ஹக்கிய்யுல்காதிரிய் அவர்கள் நமது வாப்பா நாயகமவர்களிடம், “மெளலானா!எங்கள் உயிருக்குயிரான ஷைகு நாயகம் யாஸீன்மெளலானா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பறிகொடுத்த நிலையில் நாங்கள்இருக்கின்றோம். எங்களுக்காகத் தாங்களாவது,தமிழ்நாட்டிற்கு இனி அடிக்கடி வரவேண்டும்” என்பதாகக் கேட்டுக்கொண்டார்கள்.
இவ்வாறு முரீதீன்கள் வேண்டி - விரும்பிக் கேட்டுக் கொண்டதால் தான்ஆரம்பத்தில் நமது வாப்பா நாயகமவர்கள் இந்தியாவிற்கு வரத் தொடங்கினார்கள். அப்போதெல்லாம், வாப்பா நாயகமவர்கள், திருச்சிக்கு விஜயம் செய்யும்போது, தங்களை அவர்கள்வெளிக்காட்டிக் கொள்ளாமல்தான் இருந்தார்கள், நானும்திண்டுக்கல் காஜா நஜ்முத்தீன் அவர்களும், வாப்பா நாயகத்தோடு சாதாரணமாக வாக்கிங் செல்வோம். அப்போது “வாப்பா நாயகம்” என்று கூட அழைக்கத்தெரியாமல் மெளலானா என்று தான்கூப்பிடுவோம். மிகச்சாதாரணமாகப் பேசிக்கொண்டு சென்றோம். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்கள் தங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.
நமது வாப்பா நாயகம் அவர்கள் அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு அனுப்பித்தந்த ஒரு பட்டோலையில், “யா”வும் “ஸீனு”ம் மறைந்துவேறொன்றில் தோன்றியிருப்பதால், “யா”வும் “ஸீனு”ம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்றுஅருளியிருந்தார்கள். நமது தந்தை நாயகம் ஜமாலிய்யாஸய்யித் யாஸீன் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்து விட்டார்கள் என்றுநீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவேண்டாம். அந்த “யா”வும் - “ஸீனு”ம்மறைந்து - நிலைத்து நிற்கும் வகையில், வேறொன்றில்தோன்றியிருக்கிறது என்பதாக நமக்கு நன்மாராயம் கூறுகின்றார்கள். இது எப்படியயன்றால், நமதுகண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரகசியம், எப்படிகுத்புமார்களின் தோன்றலில் பவனி வருகின்றதோ, அதைப்போன்றதோற்ற மாற்றம் தான் இப்போது நிகழ்ந்திருக்கிறதே தவிர, அதுஅப்படியே முடிந்துவிடப் போவதில்லை. தோற்றங்களில் ஏற்படும் மாறுதல் தான் இதே தவிர, தாற்பரியம்என்றும் மாறுவதில்லை. அது என்றென்றும்நிலைத்து நிற்கக் கூடியது தான். எனவே அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை என்றகருத்தில் நமது வாப்பா நாயகமவர்கள் அன்றைக்கே அருளியுள்ளார்கள்.
நாம் ஆரம்பக் காலத்தில், மஹானந்த பாபா நாயகம் (ரலி) அவர்களுடையஅத்வைத கானம், மஹானந்த கீதம் ஆகிய பாக்களைத்தான் பாடிக்கொண்டிருந்தோம். பின்னர், தங்கள் புலமையையும் நிலையையும் வெளிக்காட்டுவதற்காகச் சில பாடல்களைநமக்காகப்புனைந்து கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து நிறைய பாடல்கள் - வாரிதாத்துகள் வரத்தொடங்கின. அதன்பின்னர், நம்முடையஅருமைத் தம்பி, ஆலிம் புலவர். ஹுஸைன் முஹம்மது அவர்கள் நமது சபைக்குநிஃமத்தாகக் கிடைத்தார்கள். அவர்கள்மூலமாகவும் நாம் நிறைய செய்கு நாயகப் புகழ்ப் பாடல்கள் கிடைக்கப் பெற்றோம். இவற்றையயல்லாம் தாம் நாம் இப்போது பாடி இன்புற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், நமது வாப்பா நாயகமவர்கள்செய்யுள் வடிவிலும்- பாடல் வடிவிலும் சொன்ன கருத்துக்கள் தெளிவானதாகவும், ஆழமானதாகவும் உள்ளன. அந்தப்பாடல்களைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தால் நமக்கு அது நன்றாகவிளங்கும். நமது ஷைகு நாயகமவர்கள்தங்களின் பாடல் ஒன்றில்,
“காட்சிப் பொருளெனக் காணும் எனைக் காண்பதே பூரணமாகும். காட்சிப்பொருளெனக் கண்டு என்னில் மீட்சி பெறுவதில் அண்டு.
பூரணம் பூரணம் நானே, என்னில்பூர்த்தியைக் காண்பதைப் பேணே”
என அருள்கின்றார்கள். நமது ஷைகு நாயகமவர்கள் பரிபூரணமாகஇருப்பவர்கள். காட்சிப் பொருளாகக்கண்டாலும் அதில் தெளிவுற்று அவர்களைப் பூரணமாகப் பார்க்க வேண்டும். அந்தப் பரிபூரணத்தின் முன் நாம் ஒன்றும் இல்லைஎனத் தெளிவுற வேண்டும். அந்தப்பரிபூரணத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், “சத்தியிற்காண்பது பூரணமாம். என்னைச் சத்தமாய்க்காண்பதே பூரணமாம்” என்கிறார்கள். என்னைச்சத்தியமாய் - சக்திமயமாய்க் கண்டு பூரணத்தில் தெளிவு பெறுங்கள் என்பதாக வாப்பாநாயகமவர்கள் இந்தப் பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றார்கள். இது போன்ற பாடல்களை நாம் சபைக்கூட்டங்களில் அடிக்கடி பாடுகின்றோம் -படிக்கின்றோம். ஆனால், அவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தவறுகின்றோம். பாடல் வரிகளுக்கு விளக்கம்அளிப்பது போன்ற உரைநடை வாயிலான வாப்பா நாயகமவர்களின் பட்டோலை ஒன்றுஇருக்கின்றது. அதை இங்ஙனம்எடுத்தியம்புவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றோம்.
“ஹக்கைத் தெளிவாக அறிந்தவனே வலியாவான். என்னைத் தெளிவாக அறிந்தவனே வலியாவான்” என்பதாக அந்தப் பட்டோலையில் நமது வாப்பாநாயகமவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எப்படி? சத்தியிற்காண்பது பரிபூரணமாம், என்னச் சத்தமாய்க் காண்பதே பரிபூரணமாம் என்று. இவ்விடம், சத்தமாய்க்காண்பது என்பது தெளிவாகக் காண்பது - அறிந்து கொள்வது எனும் பொருளில்இடம்பெற்றுள்ளது.
நன்னம்பிக்கை
இதே பொருளில் நமது தந்தை நாயகம் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானா(ரலி) அவர்களும் அருளியுள்ளார்கள். “எவன்ஒருவன் என்னை நன்னம்பிக்கையோடு ஏறிட்டுப் பார்த்தானோ, அவனை ஒருவலிய் என்று எழுதப்படும்” என்று அருளியுள்ளார்கள். இந்தச் சொற்றொடரில் நன்னம்பிக்கை என்பதைத் தான் உற்று நோக்கவேண்டும். நமது வாப்பா நாயகமவர்கள்,“என்னைத் தெளிவாக அறிந்தவர் வலீயாவார்” என்பதாகக்கூறுகின்றார்கள். தந்தை நாயகம் அவர்களோ, “என்னைநன்னம்பிக்கையோடு பார்ப்பவர் வலீயாவார்” என்பதாகப் பகர்கின்றார்கள்.
ஒன்றின் மீது நன்னம்பிக்கை எப்போதும் ஏற்படும்? அந்தப் பொருள்பற்றி நாம் தெளிவாக அறியும்போது தான் அதன் மீது நம்பிக்கை உண்டாகும். ஆக, இந்த இரண்டுகருத்துகளின் பொருள் ஒன்றுதான். அவர்களின்தோற்றத்தை நன்னம்பிக்கையோடு ஏறிட்டுப் பார்த்தாலே, நாம்வலியாகலாம் என நமக்கு எவ்வளவு எளிதான வழி இருக்கிறது. ஆனால், இதை நாம்முழுதாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா?
பெரும்பாலும் நாம் எல்லாரும் வாப்பா நாயகத்தின் புகைப்படத்தை நமதுசட்டைப் பையில் வைத்திருக்கிறோம். வாப்பாநாயகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டால், உடனேசட்டைப் பையில் உள்ள அவர்களின் திருப்படத்தை எடுத்துக் காட்டுகிறோம். அவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசாகவும் காலத்தின் குத்பாகவும் இருக்கிறார்கள்என்கிறோம். அதெல்லாம் சரி தான். இவை வாப்பா நாயகமவர்களுக்குரியன. அவர்களைப் பற்றி நாம் என்ன புரிந்து வைத்துள்ளோம்? விளங்கிவைத்திருக் கிறோம் என்று கேட்டால், நம்மிடம் தெளிவான பதில் வருமா? நமதுசற்குரு நாயகமவர்களை நாம் தெள்ளத் தெளிவாக விளங்கி வைத்திருக்க வேண்டும். அல்லது தந்தை நாயகமவர்கள் அருளியது போன்றுநன்னம்பிக்கையாவது கொள்ள வேண்டும்.நன்னம்பிக்கை என்றால், வார்த்தையளவில்லை. வரையறை செய்ய முடியாத அளவுக்குப் பரிபூரணத்தின்மீது பரிபூரணமான நம்பிக்கை கொள்வதுதான் நன்னம்பிக்கை. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச்சொல்லலாம்.
மர்ஜூக் நானா
வாப்பா நாயகமவர்களின் திரு இல்லத்தில் வாப்பா நாயகமவர்களோடுபேசிக் கொண்டிருக்கும் போது மர்ஜுக் நானாவைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களது வீரப்பராக்கிரமங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தால், அந்தப் பேச்சு மணிக்கணக்காகநீடிக்கும். நமது தந்தை நாயகம் யாஸீன்மெளலானா (ரலி) அவர்கள், மர்ஜூக் நானாவை, “மகன், மகன்” என்று தான் அழைப்பார்கள். மிக்க தைரியசாலி. அவர் தெருவில் வருகிறார் என்றால், அனைவரும் அச்சமுறுவார்கள். எந்தச்சண்டையாக இருந்தாலும் தனியாகச் சமாளித்து விடுவார். இத்தனைக்கும் அவர், எந்தவித்தையையும் கற்றவர் இல்லை. மனதைரியத்தைக் கொண்டுதான் வீரராகத் திகழ்ந்தார். அவர், நமதுதந்தை நாயகம் அவர்கள் மறைந்த சிலகாலம் கழித்து, நமது வாப்பாநாயகமவர்களைப் பார்க்க வந்திருந்தார். அவரிடம் நமது வாப்பா நாயகமவர்கள், “என்ன,மர்ஜுக் நானா, எங்களையயல்லாம் மறந்து விட்டீர்களா?” என்றுகேட்பார்களாம். அதற்கு, மர்ஜுக் நானாவோ, “மாணிக்கமே, அப்படிச்சொல்லாதீர்கள். இதைப் பாருங்கள். என் மணிபர்ஸில், நமதுயாஸீன் நாயகம் அவர்களின் திருப்படமும் -தங்களின் திருப்படமும் இருக்கின்றன. இவைஇரண்டையும் பார்க்காமல் தினமும் எனது பொழுதைத் தொடங்குவதில்லை” என்றார்..
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட நமது வாப்பா நாயகமவர்கள், “சிராஜ்,இதுதான் அவரது இபாதத் எனக்கூறி அருளினார்கள். பார்த்தீர்களா? அவர்,தொழுவது - ஓதுவது என அதிகம் சிரமப்படவில்லை. ஊருக்குள் சண்டியராக வாழ்ந்தவர். எவ்வளவு எளிமையாக நற்பெயர் பெற்றுவிட்டார்பாருங்கள்... நமது வாப்பா நாயகமவர்களின் மீது கொண்ட நன்னம்பிக்கை தான் காரணம். அப்படிப்பட்ட பிடிப்பான நம்பிக்கைக்குக்கிடைத்த நற்கூலி என்ன தெரியுமா?
மர்ஜுக் நானா மறைந்த சிலகாலம் கழித்து, நமது வாப்பாநாயகமவர்கள் கனவொன்று கண்டார்கள். அந்தக்கனவில், மஹ்ர் மைதானத்தில், திடகாத்திரமானஉடல் வாகோடு சென்று கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு கூட்டம் (கவ்ம்) சென்றதாகக் கண்டார்கள். இதை வாப்பா நாயகமவர்கள் என்னிடம் கூறிபாருங்கள், அவர் கொண்ட நன்னம்பிக் கைக்குப் பலனாக, மஹ்ரில் ஒரு கவ்மிற்கே தலைவராகத் திகழ்பவராகப் பாக்கியம் பெற்றிருக்கிறார்என்றார்கள். அந்த மர்ஜுக் நானாவை ஒருமுறை பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்கும்கிடைத்திருக்கிறது. நானும் சும்மாபாக்கெட்டில் அவர்களின் புகைப்படம் வைத்திருக் கிறேன் என்று எல்லாரும்வைத்திருப்பதில் புண்ணியமில்லை. அவர்கள்மீது எந்த அளவுக்கு நன்னம்பிக்கைகொண்டிருக் கிறோம் என்பதில் தான் வியம் இருக்கின்றது
மருட்சி
மகத்துவமிக்க நமது ஷைகு நாயகமவர்கள், தங்களைப்பற்றி, இன்று நேற்றல்ல - முப்பது வருடங்களுக்கு முன்னர்அருளிய பட்டோலையில்,
“நம்மை அறியாது நம்மைச் சோதிக்கும் சிலர், நம்மைச்சிறிதாக எண்ணி மதிக்காது, பல எண்ணங்களை வைத்து மருண்டுபோகின்றவர்கள் நம்மை அறிய மாட்டார்கள். முட்டுப்படும் நேரத்தில் நம்மை நினைக்கும் சந்தர்ப்பம் உண்டாகும்”.
நமது வாப்பா நாயகமவர்களின் படாடோபமில்லாத தோற்றத்தையும், எளிமையையும்இயல்பான நடை முறைகளையும் இனிய பேச்சுக்களையும் எளிய பழகு முறைகளையும் பார்த்து,சிலருக்கு இவர்கள் சாதாரணமானவர்கள் தாமே என்று தோன்றக்கூடும். அவ்வாறு எண்ணுபவர்கள், நமதுவாப்பா நாயகமவர்களின் உண்மையான நிலையை ஒருபோதும் அறியமாட்டார்கள் என்று தான் அந்தவாசகத்தில் நமது வாப்பா நாயகமவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதற்கடுத்து வாப்பா நாயகமவர்கள், “நாம்சொல்லியபடி - நமது எண்ணப்படி நடப்போர் ஜெயம் பெறுவர்” என்றுஅருள்கின்றார்கள். இந்த வார்த்தைகள்நமக்கு வேதவாக்கு. அப்படியயன்றால்,மற்றவர்களின் நிலை? ஜெயம் பெற மாட்டார்கள்என்பதுதான் அதன் கருத்து. ஆகவே, நமது ஷைகு நாயகவர்கள் என்ன சொல்கின்றார்களோ என்ன நினைக்கின்றார்களோ, அதன்படிநடந்தால் தான் நாம் ஜெயம் பெற முடியுமே தவிர, வேறெந்தவகையிலும் ஜெயம் பெற முடியாது என்பது தெளிவாகின்றது.
சரி,அப்படி வாப்பா நாயகமவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்ன நினைக்கிறார்கள்? எப்படி நாம் நடந்து கொள்ளவேண்டும்? என்று கேட்டால், அதற்கும் நமது வாப்பா நாயகமவர்களின்பாடல்வரிகள் பதிலாக அமைகின்றன.
“அனைத்தும் நானே நானென்னும், நினைப்பில் நித்தியம் நிலைத்திடுவாய். தினைத்துணை தானும் வேறென்னும் நினைப்பினைமுற்றும் விட்டிடுவாய்” என்று தான் அருள்கிறார்கள். இதைத் தாம் அவர்கள் சொல்கின்றார்கள். இவைதான் நமது ஷைகு நாயகமவர்களின் சொல்லும் -செயலும் - எண்ணமுமாய் இருந்து வருகிறது. இப்படித்தான் நாம் இருக்க வேண்டும் எனவும் அவர்கள்விரும்புகின்றார்கள். இதுபோன்ற பாடல்களைநாம் ராகத்தோடு பாடிக் கொண்டிருக்கிறோம் - படித்துக் கொண்டிருக்கிறோம். “நீங்கள் ராகத்தோடு படித்து, அந்த ராகத்தில் லயித்துப் போய்விடுகிறீர்கள். உங்கள் கவனம் பாடலின்பொருளின் மீது படுவதில்லை. பாடல் மட்டும் படித்துப் பயனில்லை. அதன் பொருளையும்கொஞ்சம் சிந்திக்க வேண்டும்” என்றுதான் வாப்பா நாயகமவர்கள் அருள்கின்றார்கள்.
“அனைத்தும் நானே நானென்னும் நினைப்பில் நித்தியம் நிலைத்திடுவாய். தினைத்துணை தானும் வேறென்னும் நினைப்பினை முற்றும்விட்டிடுவாய்” என்ற பாடல் வரிகளுக்கொப்ப, நாம் சிந்தனையில் தெளிவுற்றால், என்னவாகும்?
“நானாய் மிளிரின் பவம் போகும். தானே என்னும் நிலையேகும். மானேநீங்கி அருவாவாய். காணாக் கரையும்கண்டிடுவாய்” என அதற்குரிய பலாபலன்களையும் நமது வாப்பா நாயகமவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். எப்படி அவர்கள்அருவாயிருந்து உருவானோம் என தங்களைக் காட்டுகின்றார்களோ, அதே நிலைக்குநம்மையும் இதன்மூலம் எடுத்துச் செல்கின்றார்கள். ஆக, வாப்பா நாயக மவர்களின் சொற்படி, அவர்களின் எண்ணப்படி நடந்தால் நாம் “நானாய் மிளிரின் பவம் போகும். தானே என்னும் நிலையேகும். மானே நீங்கி அருவாவாய். காணாக் கரையும் கண்டிடுவாய்” என்னும் உயரியநிலைக்குச் செல்வோம் என வாப்பா நாயகமவர்கள் அருள்கின்றார்கள். அவர்களது எல்லாப் பாடல்களிலும் இந்தக் கருத்தைமையப்படுத்தித்தான் சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.
அஞ்சற்க!
இன்னும் ஒரு பாடலில் “எம்மை நம்பியயம் தீட்சிதர் வாழ்வரேல், ஏனிகம் - உகந்தனில் அஞ்சுதல் வேண்டும்”என்பதாக அருள்கின்றார்கள். அவர்களைப்“பரிபூரணமாக” நம்பினால், நாம் இம்மையைப் பற்றியும் -மறுமையைப் பற்றியும் எதற்காக அச்சம் கொள்ள வேண்டும்? நமக்குஅவை பற்றிய எந்தப் பயமும் இருக்கத் தேவையில்லை. நானும் நமது முரீதுப்பிள்ளைஒருவரைச் சந்தித்தேன். அவரது பெயர் சொல்லவிரும்பவில்லை. அவர் அந்தக் காலத்தில்,மரணப் படுக்கையில் இருந்தார். அவரைச் சந்தித்து நலம்விசாரிப்பதற்காகச் சென்றிருந்தபோது, எனது கைகளை எடுத்து தம்நெஞ்சில் வைத்துக் கொண்ட அவர், “நான் ஒரு தொழுகையையும்விட்டதில்லை. இப்போது நோயால் தொழமுடியவில்லை. என்னை அல்லாஹ் மன்னிப்பானா?எனத் தெரியவில்லை. எனக்குமறுமையை நினைத்தால் பயமாக இருக்கின்றது. எனது மறுமை வாழ்வுக்காக துஆச் செய்யுங்கள்” என்று சொன்னார்.
அவர் நமது தந்தை யாஸீன் மெளலானா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப்பார்த்தவர், அவர்களுடன்இருந்தவர். அவரிடம் நான், “யாஸீன் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் யவானிஉ கிதாபில் ஒருதிருவாசகம் வருமே? உங்களுக்கு அது ஞாபகம் இல்லையா?” என்று கேட்டேன். உடனே, அவர், என்ன வாசகம் என்பது போல என்னைப்பார்த்தார். நான், “யவானிஉவில் நமது தந்தை நாயகம்ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
கூடாரம்
ஒவ்வொரு முரீதின் இதயத்திலும் எனக்கு கூடாரம் உண்டு. அவர் இறைவனை மறந்த நேரத்தில், நாம்அங்கிருந்து அவருக்காகத் தியானிக்கிறோம்என்று அருள்கின்றார்கள். ஆக, ஒரு சீடன் இறைவனைத் துதிக்கமறந்த நேரத்தில், நமது தந்தை நாயகம் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் அவருக்காகத் தியானிப்பதாகக் கூறுகின்றார்கள். மறந்த நேரத்தில் கூட முரீதுக்காகத்தியானிப்பவர்கள், நீங்கள் உடல்நலக் குறையால், முடியாமல் இருக்கும்போது உங்களுக்காகச் செய்யாமல் இருப்பார்களா? அந்தக் கூடாரம் சும்மா இருக்குமா? அந்தக்கூடாரத்தில் இருப்பவர்கள் செய்யாமல் இருப்பார்களா? ஏன்இவ்வாறு கவலைப்படுகிறீர்கள்? உங்களுக்காகத் தினந்தோறும் இபாதத் - வணக்கங்கள் நடந்து கொண்டேஇருக்கின்றன. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.” என்று சொன்னேன்.
உடனே,என் கைகளை இறுகப் பற்றிக் கெண்ட அவர், பத்துதெம்பு ஊசிகளைப் போட்டமாதிரி இருக்கிறது என்றார். அந்தப் புத்துணர்ச்சியோடேஇருங்கள் என அவரை உற்சாகப்படுத்தி விட்டு வந்தேன். ஆக, நமது வாப்பாநாயகமவர்கள் மீது நன்னம்பிக்கை கொண்டிருந்தால், எந்தக் கவலைநம்மை அண்டப் போகிறது?“எம்மை நம்பியயம் தீட்சிதர் வாழ்வரேல், ஏன் இகம்-உகம் தன்னில் அஞ்சுதல் வேண்டும் ” என்னும் வாப்பா நாயகமவர்களின் வாக்குப்படி நாம்வாழ்ந்தால்,
“விம்முநற் புகழினை நித்தமும் எய்துவர், வீறுடன்வாழ்வர், வெற்றியே காண்பர்” என அருளுகின்றார்கள். ஆக, வாப்பா நாயகமவர்களைநம்பி வாழ்ந்தால், நீங்கள் அடையப் போகும் பேரின்பமும்,புகழும் அளப்பரியது. ஏனென்றால், நமது ஷைகு நாயகமவர்களை நம்பி, அவர்களோடு ஒன்றிக்கும்போது பலன் நன்றாகத்தானே இருக்கும்? எல்லாப் புகழும் ஹக்குக்குத் தான் என்றிருக்கும்போது, அதில் ஒன்றித்த நாமும் அந்தப் புகழினை அடைவோம் என்பதில் எந்தச்சந்தேகமும் இருக்காது.
நன்மாராயம் கூறும் இந்தப் புனித வரிகள், நமது வாப்பாநாயகத்தின் இறையருட்பா நூலில், அஞ்சற்க என்னும் தலைப்பில்வருகிறது.
மேலும்,நமது வாப்பா நாயகமவர்கள் சொல்கின்றார்கள் : “எம்மைப்பின்பற்றியவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அஹ்மதிய்யாவைக் கொண்டு பேற்றினையும்உயர்தரங்களையும் பாக்கியங்களையும் பெற்றுக் கொள்வர்.” மேலே சொன்ன “அஞ்சற்க” என்றபாடலின் கருத்தொத்த வரிகள் தாம் இவையும். இதில் நமக்கென்ன ஐயம் ஏற்படப்போகிறது? நாம் யாரைப் பின்பற்றப் போகின்றோம்? அஹ்மதிய்யாவுடைய உள்ரங்க - வெளிரங்க வாரிசான நமது வாப்பா நாயகமவர்களைப்பின்பற்றுகின்றோம். அந்த அஹ்மதிய்யாவையேதங்களின் உள்ளமையாகக் கொண்ட நமது வாப்பா நாயகமவர்கள் கூறும்போது, நாம்அவர்களைப் பின்பற்றியவர்களாக, பேற்றினையும் உயர்தரங்களையும்பெற்றுக் கொள்வதில் எள்ளளவும் ஐயமில்லை.
மேலும்,நமது வாப்பா நாயகமவர்கள் கூறுகின்றார்கள் : “கஷ்டத்தில்நெருக்கடியில் இருக்கும் போது,“யா கலீல்” “யா கலீல் அவ்ன்” எனஉதவி தேடி அழைப்பவர்களுக்கு, அஹ்மதிய்யாவைக் கொண்டுஅவர்களுடைய உதவி வந்தடையும்.
யா கலீல் அவ்ன்
நான் சிறுவயதில் இருக்கும் போது, நாட்டாண்மைக்காரர் எனக்கு சொல்லிக்கொடுத்தது, சிராஜ்,உங்களுக்கு எந்தக் கஷ்டமான தருணத்தில் இருக்கும்பேதும் - எந்த ஒருதேவையை நாடும்போதும், “யா ஸய்யிதீ, யாஷைகீ, யா கெளதீ, யா குத்பீ, யா கலீல்அவ்ன், யா மததீ ” என அழையுங்கள் என எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்கள் .
வாப்பா நாயகமவர்கள் “யா கலீல் அவ்ன்” என்று அழைத்தாலே, உதவி தேடிவரும் என்று பகர்ந்துள்ளார்கள். எனினும், அவர்களின்மகத்துவத்தையும், மகிமையையும் கருத்திற் கெண்டு, மேற்கண்டவாறு, “யா ஸய்யிதீ, யாஷைகீ, யா கெளதீ, யா குத்பீ, யா கலீல்அவ்ன், யா மததீ ” - வாப்பா நாயகமவர்களே,தங்களின் உதவியை நான் தேடுகின்றேன்” என்று தாம் நாம் அவர்களை அழைக்க வேண்டும். இதுமாதிரி அழைத்து அதன் மூலம் பயன் பெற்றவர்கன்நிறையப் பேர் இருக்கின்றார்கள். அதில் நானும் ஒருவன் தான்.
நமது வாப்பா நாயகமவர்கள், தவ்ஹீதை எவன் கற்றுக் கொள்ள வில்லையோ அவன்மனிதன் இல்லை என்று சொல்வார்கள். அதுபற்றிஅவர்கள் அருளிய பட்டோலை ஒன்றில், “தவ்ஹீதை மிகக் கடினமாகச்சிலர் நினைக்கின்றனர். அது அவ்வளவுகடினமானதன்று. அது இலகுவானதும், சம்பூரணமானதுமே. அதை விளங்கிக்கொள்ளும் முறையில் தான் சிரமமுள்ளது.” எனஅருளியிருக்கின்றார்கள். ஆக, தவ்ஹீத் என்பது சிரமமானதல்ல. அதைவிளங்கிக் கொள்வதில்தான் சிரமமிருக்கின்றது என்கிறார்கள். அவ்லியா நாயகம் மஹானந்தபாபா (ரலி) அவர்கள்,நினைத்தால் பிர்ம மயம், நீ மறந்தால் மாயை மயம்என்று குறிப்பிடுவதைப் போல், அவ்வளவு சுருக்கத்தில் தான்நினைப்புக்கும் - மறதிக்கும் மத்தியிலான இடைவெளியில் தான் தவ்ஹீதுஇருக்கின்றது. ஆகவே, அதை விளங்கிக் கொண்டால் அது சிரமமே இல்லை என்று தான் வாப்பா நாயகமவர்கள்சொல்லிக் காட்டுகின்றார்கள்.
நம்மில் சிலர், “நமக்கு அதற்கெல்லாம் தகுதி வேண்டும். நம்மால் அஃதெல்லாம் முடியுமா?” என புலம்புபவர்கள் உள்ளனர். இவ்வாறு கூறுவதை வாப்பா நாயகம் அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. “தன்னை இயலாதவன் எனக் கருதுவதுதவ்ஹீதிற்கு மிகவும் முரணானது. திடச்சித்தம் மிக முக்கியம். முடியாததுஒன்றுமில்லை. மனிதன் நாடினால் மலையையும்புரட்டலாம்.” என சொல்லிக்காட்டுவார்கள்.
தைரியமாக இருங்கள். எதையும் நம்மால் சாதிக்க முடியம் என நமக்குஅடிக்கடி தைரியமூட்டுவார்கள். நாம் அத்தனைபேரையும் அத்வைதத்தில் சாதனையாளர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் அவர்களின்நோக்கமே தவிர, நாமெல்லாம்கோழைகளாகப் போவதற்கு அவர்கள் விரும்பவே இல்லை. நமது வாப்பா நாயகமவர்கள், எப்போதும் நம்மை உற்சாகப்படுத்தியும் உத்வேகப்படுத்தியும் தான்பேசுவார்கள்.
ஹக்கின் வுஜூதில்
“மன திடமே வாழ்வின் லட்சியம். இதை மறந்துவிட வேண்டாம். திடமற்றவன்,தடம் புரண்டு போவான். மனதில் எந்த நேரமும் நாம் ஹக்கின் வுஜூதில் தான் இருக்கிறோம் என்னும்பூரணமான நிலைக்கு திடப்படுத்திக் கொள்ள வேண்டும். எகீனான - நிச்சயமான ஈமான் அப்போதுதான் உண்டாகும்.” என்று நமது ஷைகுநாயகமவர்கள் அருள்கின்றார்கள்.
நமக்குள் திடத்தன்மை எப்போது உருவாகுமென்றால், மனதில்எப்போதும் ஹக்கில் ஹக்காகத்தான் நாம் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
இன்னும்,“திடமாக இருங்கள். கவலை கொள்ள வேண்டாம். எல்லாவற்றிலும் சிறந்ததும்பெரியதும் பதவிகளிலெல்லாம் பெரியதுமான தவ்ஹீதுஉங்களிடத்தில் இருக்கும் போது, ஹக் உங்களிட மிருக்கும் போது, நாம்உங்களுடன் இருக்கும் போது, ஏன் கவலை கொள்ள வேண்டும்?” என நமது ஷைகு நாயகமவர்கள் கேட்டு நமக்குத் தைரியம்ஊட்டுகின்றார்கள். நமக்கு அச்சம் என்பதுஇல்லை. கவலை என்பது இல்லை. துக்கம் என்பதும் இல்லை.
ஒவ்வொரு வலியும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலென்றறி.அவர்களை நேசித்தால் நாசம் என்னும் வெள்ளத்தினின்றும் நீ தப்பித்துக்கொள்வாய். அல்லாஹ்விடம் இருக்கப்பிரியமுள்ளவர்கள், அவ்லியாக்களின் சமூகத்தில்இருப்பார்களாக. அவ்லியாக்களின்சமூகத்தில் இருந்து விலகி இருப்பீர்களேயானால், உள்ரங்கத்தில்அல்லாஹ்வை விட்டும் தான் நீங்கள் விலகியிருக்கின்றீர்கள். அவ்லியாக்களின் முந்தானையைப் பற்றிப்பிடிப்பதில் பயம் வேண்டாம். ஏனெனில்,நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கும்போது, வெள்ளத்தைப்பற்றி அச்சம் எதற்கு? என்று குலிஸ்தானில் சொல்லிக் காட்டப்பட்டிருக்கின்றது.
ஆக,நாம் இந்தப் பூவுலகில் பெற முடியாத பெரும் பாக்கியமாக, பெரும் பொக்கிமாக, கற்பகவிருட்சமாக, அருட்பிழம்பை நாம் எந்தவிதத்தில் பயன்பெறமுடியுமோ அவ்வாறு பயனடைந்து, ஹக்கில் ஹக்காக, அதனளவில் நம்மைத் தியாகம்செய்து, பெரும்பேறுபெற்றவர்களாக, நமது ஷைகு நாயகமவர்களின் பொருட்டாலே நமக்குஆக்கித் தருமாறு அவர்களையே வேண்டியவனாக நிறைவு செய்கின்றேன்.
தொகுப்பு: A. நைனார் முஹம்மதுஅன்சாரி M.A., ஹக்கிய்யுல்காதிரிய்,