• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​  தேவனும் - பூதனும்



தேவனும் - பூதனும்

                                                                                                                                ய. மஹ்மூதா பீவி


    ரு நாள் தேவன் என்ற ஒருவனும் பூதன் என்ற மற்றொருவனும் ஆத்ம ஞானம் பெற விரும்பியவர்களாய் ஒரு யோகியை அணுகினர். அந்த யோகியாரிடம் இருவரும் மாணவர்கள் ஆயினர்.


    நீண்ட காலம் கல்வி பயின்ற பின்னர் மாணாக்கர் இருவரையும் நோக்கி அந்த யோகியார், “நீங்கள் தேடுகின்ற பொருள் நீங்களேயாவீர்கள்” என்று கூறி விடை கொடுத்து அனுப்பினார்.


    அது கேட்ட மாணாக்கர் இருவரும் நீங்களே என்று குறிப்பிட்டதை மட்டும் வைத்துக் கொண்டு  ஆரம்ப நிலையில் தங்கள் உடலங்களே தாங்கள் என எண்ணிக்கொண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் போய் “நாங்கள் கற்க வேண்டிய அனைத்தையும் கற்று விட்டோம்.இனிமேல் உண்ணுவதும் உறங்குவதுமே எங்கள் வேலை; பரம் பொருள் நாமேயன்றி வேறெதுவும் இல்லை” என்றனர்.


  பூதன் மேற்கொண்டு வேறெதுவும் சிந்திக்கவில்லை.உடலே கடவுள் என்ற எண்ணத்திலேயே திருப்தியுற்றுக் காலம் கழித்தான்.


    தேவன் இயற்கையிலேயே சத்துவ குணம் நிறையப் பெற்றவன். எனவே முதலில் தானே அதாவது தன்னுடைய உடலே கடவுள் என்று எண்ணியிருந்தவன் பிறகு கொஞ்ச நாட்கள் கழிந்த பின்னர் சற்று சிந்திக்கத் தொடங்கினான். பெரியவர் சொன்னவாக்கியத்திற்கு வேறு எதுவும் உள் அர்த்தம் இருக்கக் கூடுமோ என்று சிந்தித்தான்.உடனே புறப்பட்டு அந்தப் பெரியவரிடம் வந்தான். ஐயா! தாங்கள் கூறிய பதங்களின் பொருள் அடியேனுக்கு இன்னும் விளங்கவில்லை! நீங்களே பரம்பொருள் என்று கூறினீர்கள்! தாங்கள் குறிப்பிட்டது எங்கள் உடலைப் பார்த்தா? உடலே கடவுள் என்றால் உடல் அழியாமல் இருக்க வேண்டுமே! ஆனால் உடல்களெல்லாம் அழிகின்ற தன்மை உடையன ஆயிற்றே, எனக்கு சற்று விளக்கமாக எடுத்துக் கூறுவீர்களாக! என்று விண்ணப்பித்துக் கொண்டான்.


    அதற்கு மறுமொழியாக அந்த குரு மீண்டும் நீயே அதைக் கண்டறிந்து கொள் என்று கூறினார்! ஐயம் அதிகரிக்கவே தேவன் மீண்டும் முனிவரிடம் சென்றான். ஐயா! பிராண சக்திகள் தாம் பரம் பொருளா? என்று கேட்டான். முனிவரோ முதலில் கூறிய பதிலையே திரும்பவும் கூறியனுப்பினார்.


    தேவன் மறுபடியும் சிந்தித்து நான் என்பது மனமாக இருக்குமோ என்று எண்ணிப் பார்த்தான். திரும்பவும் பெரியவரிடம் போய் ஐயா! மாறாத் தன்மையும் அழியாமையும் உடைய பரம்பொருள் என்னவாக இருக்க முடியும் - மனமாகவும் இருக்க முடியாது போல் இருக்கிறதே? என்றான். இப்பொழுதும் பெரியவர் முன்கூறிய பதிலையே திரும்பவும் நீயே அதனை அறிந்து கொள்! என்று கூறி அனுப்பி விட்டார். 


    தேவன் சிந்தித்தான்; தீவிரமாகச் சிந்தித்தான். சிந்தித்த பிறகு ஆன்மாவே அந்த நித்தியமான பொருளின் ரகசியம்  என்பதனைக் கண்டு கொண்டான்.   அந்த ஆன்மா மனம். வாக்கு, மெய் ஆகிய மூன்றுக்கும் அப்பாலாய் பிறப்பு இறப்பு இல்லாததாய், வாளினால் வெட்டபடாததாய், ஆதி அனாதி அற்றதாய், தொடுதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அரியதாய், நிறைந்த அறிவு சொரூபமாய் இருப்பதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டான்.


    ஆனால் பூதன் என்பவனோ உடலின் மீதுள்ள பற்றினால் உண்மை நிலையினை உணர்ந்து கொள்ளவில்லை. 


    இப்பரந்த உலகில் பூதனை ஒத்தவர்களே நிறைந்துள்ளனர். தேவனை ஒத்தவர்கள் வெகு சிலரே.