மழைக்கால நோய்கள்
மழைக்காலத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அவற்றைத் தடுக்கும் வழிகள் என்ன?
காமன் கோல்ட்: வைரஸ் கிருமிகள்தான் இதன் மூல காரணம். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பது போல் மூன்றாவது நாள் தானாகவே ஜலதோஷம் மறைந்து விடும். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மட்டும் பாராசிட்டமால் மருந்து எடுத்துக்கலாம். தவறில்லை.
காய்ச்சல் :
டைஃபாய்டு, காலரா, டெங்கு என மழைக்காலத்தில் வரும் காய்ச்சல்களின் எண்ணிக்கை. நீ...ளம். இவை தண்ணீர், கொசுக்கள் வழியே எளிதில் பரவும். இவற்றில் டைஃபாய்டும் காலராவும் நோயாளியின் குடலை குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி விடும். தொடர்ந்து வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும், நோயாளி துவண்டு போவார். உடனே நீரும் உப்பும் கலந்த கரைசல் கொடுப்பது அவசியம். இல்லையேல் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
ஈடிஸ் இஜிப்டை என்கிற கொசுதான் டெங்குவுக்குக் காரணம்! ஒரு விஷயம் தெரியுமா ?
சுத்தமான தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்.
குறிப்பாக, டெங்கு காய்ச்சல் குளிர்ந்த காற்றில் குழந்தைகளுக்கு எளிதில் பரவும் என்பதால், கண்காணிப்பு அவசர அவசியம்.
மூச்சுத்திணறல், இருமல் : மழைக்காலங்களில் சுவாசப் பையில் ஏற்படும் இன்ஃபெக்ஷன் தான் இதற்குக் காரணம். குறிப்பாக வீஸிங், ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு மழைக்காலம் வந்தால், மரண பயம்தான். காரணம்... நோயின் தீவிரம் எகிறும் என்பதுதான்.
ஒரு கட்டத்தில் மார்பில் சளி அடைத்து, நிமோனியா காய்ச்சல் பாதிக்கும் ஆபத்து உண்டு. அதிலும் குழந்தைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
தடுப்பது எப்படி ?
தண்ணீர் சுழலும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின்னரே பருக வேண்டும்.
பழைய டயர்கள், சிரட்டை உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை(ஐ.ஜி.இ) அதிகரிக்க நார்ச்சத்துள்ள உணவுகள் எடுப்பது நல்லது.
கொசுக்களைக் கட்டுப்படுத்த, வலை,மருந்துகளை (ரெபலன்ட்) பயன் படுத்தலாம். சளி இருக்கும் போது, பால் அருந்துவதைத் தவிர்க்கலாம், இழுப்பு ஆஸ்துமா இருப்பவர்கள், மழைக்கு முன்பு ஸ்பேஸர் பஃப், உள்ளிட்ட கருவிகளை தயார்படுத்திக் கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளை அறை வெப்ப நிலைக்குக் கொண்டு வந்த பின்னர் எடுத்துக் கொள்ளலாம்.
(Courtesy : Kumudam)