திருமறைப்பக்கம்
முன்னவன் அருள்மறையில்
மூஸா - ஈஸா - (அலை) மெளலிது!
ஆலிம் புலவர்
சுன்னத் வல்ஜமாஅத் கொள்கைக்கு எதிராக “மெளலிது கூடாது, புர்தா கூடாது” என ஃபத்வா கொடுத்துக் கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்.
மெளலிது என்றாலே இரத்தம் கொதித்து சூடாகிப் போகும் இந்த வஹ்ஹாபிகள் குர்ஆன் ஷரீஃபில் வரும் மெளலிதுகளைக் கண்டு கொண்டார்களோ இல்லையோ, அதனை நாம் அவர்களுக்கு சுட்டிக் காட்டுவோம்.
மெளலிது என்றால் “பிறந்த வரலாறு”எனப் பொருள் கூறலாம். நாம் ஓதும் மெளலிது நூல்களில், மற்றவர்களைப் போலல்லாமல் பிறப்பிலேயே சிறப்புப் பெற்ற மாநபியவர்களின் “பிறந்த நிகழ்வுகள்” வருணிக்கப்படுகின்றன. அத்துடன் பிறப்பை மையமாக வைத்து அவர்களின் சிறப்புகள் பேசப்படுகின்றன.
மெளலிது ஷரீஃபின் நோக்கமும் அதுதான். மற்ற மகான்களின் மீது இயற்றப்பட்ட மெளலிதுகளும் இந்த அமைப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒருவரின் பிறப்பைப் பற்றி - அது நிகழ்ந்த களம் பற்றி - முக்கியத்துவம் பற்றி - நினைக்கவோ - நினைவு கூரவோ, எழுதவோ, புகழவோ கூடாது என்றால், குர்ஆன் ஷரீஃபில் வரும் மெளலிது நிகழ்வுகளையும் ஓதாமல் தாளைப் புரட்டிஅப்பால் செல்ல வேண்டியது தான்.
அல்லாஹு தஆலா, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மெளலிது (பிறப்பு) நிகழ்வைக் கூறும் போது, அவர்கள் வாழ்ந்த நாட்டின் நிலை,அதனை ஆண்ட ஃபிர்அவ்னின் நிலை, அங்கு நிகழ்த்தப்பட்ட ஆண் சிசுக் கொலை, அனைத்தையும் கூறி,மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயாருக்குச் செய்தி அறிவித்த சேதியை இவ்வாறு விளக்குகிறான்.
மேலும், நாம் மூஸாவின் தாயாருக்கு வஹீ அறிவித்தோம்.இக்குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி அதன் உயிருக்கு ஆபத்து வரும் என நீர் பயந்தால் அதனை ஆற்றில் விட்டு விடும்! நீ யாதொரு அச்சமும் கவலையும் கொள்ள வேண்டாம். திண்ணமாக நாம் அவரை உம்மிடமே திரும்பக் கொண்டு வந்து விடுவோம். மேலும் அவரைத் தூதர்களில் ஒருவராக ஆக்குவோம்.
இறுதியில் ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை ஆற்றிலிருந்து கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமைய வேண்டும் என்பதற்காக. (20:28: 7-8)
மேலும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பைப் பற்றிக் கூறும் போது, அவர்கள் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்பைக் கூறி- அவர்கள் எவ்வாறு ஆண் துணையின்றி அதிசயமாக ஈஸா நபியைப் பெற்றார்கள்? அந்த ஊர்மக்கள் என்னென்ன கதைத்தார்கள்? தம் அன்னை பற்றி தவறாகப் பேசிய மக்களுக்கு தாயின் மடியிலிருந்தே ஈஸா நபி என்ன பதிலளித்தார்கள்? என்பனவற்றையெல்லாம் குர்ஆனில் அல்லாஹ் விரிவாக விளக்குகிறான். இதோ! அதில் ஒரு சிறிய பகுதி...
நான் உம் இறைவனின் தூதர் ! தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன். (என வானவர் ஜிப்ரயீல் கூற) மர்யம் கூறினார். எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுள்ளவளும் அல்லவே! அதற்கு வானவர் கூறினார். அவ்வாறே நிகழும். உம் இறைவன் கூறுகிறான். அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது. மேலும் நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் இது நடந்தே தீரும்! ( )
இவ்வாறு கூறி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த செய்தியை அருளி; “அவர்கள் பிறந்த நாளிலும் மரிக்கும் நாளிலும் அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாளிலும் இறைவனின் ஸலாம்(சாந்தி) இறங்குவதாகக்” கூறுகிறான்.
மேலும், ஹள்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முதுமைக் காலத்தில் ஹள்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறக்கப் போகும் நற்செய்தியையும், ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறக்கப்போகும் நற்செய்தியையும் குர்ஆன் ஷரீஃபில் நாம் தெளிவாகப் பார்க்கலாம்.
இந்த பிறப்புச் செய்திகளெல்லாம் “குர்ஆன் கூறும் மெளலிது” என நாம் கூறினால் அதனைத்தவறென்று நிரூபிக்க முடியுமா?
நாம் குர்ஆனை ஓதும் அதே நேரம்,ஹள்ரத் மூஸா, ஈஸா, இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,ஜகரிய்யா , யஹ்யா, (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்களின் மெளலிதைத்தான் ஓதுகிறோம் என்பதை மறுக்கமுடியுமா?
சென்னையும்- கர்நாடகமும்!
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டதாம். டெல்டா விவசாயிகளின் பரிதாப நிலையை கொஞ்சம் கூட எண்ணிப்பார்த்து மனம் இரங்காமல் இப்படிப் பண்ணுறாங்களே......!
அட சும்மா இருங்காணும்.... தமிழ்நாட்டுல மட்டும் இரக்கம் பொத்துக்கிட்டு ஓடுதாக்கும்! மெட்ராஸ்காரங்களுக்கு 2 மணி நேரம் கரண்ட் கட்.... நமக்கெல்லாம் 18 மணி நேரம். மெட்ராஸ்காரங்க நம்மளையெல்லாம் நினைத்து, பாவம் மத்த ஊர்ல வாழ்றவங்க.... சிறுதொழிலெல்லாம் அழிஞ்சு நாசமாயிடுச்சு. எங்களுக்கு இன்னும் 3 மணிநேரம் கரண்ட் கட்ட அதிகமாக்கி அவங்கள காப்பத்துங்கன்னு பெரிய மனசு பண்ணிகோரிக்கை வச்சுடுவாங்களோ? பேருந்தில் இருவர் பேச காதில் கேட்டது....