வெற்றி உங்களை தேடுகிறது!
எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிடக் கூடாது! ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப்படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை. அதை எண்ணி கவலைப்படுவதற்கு பதிலாக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தால் நடப்பவையாவது நல்லதாக நடக்கும்.
வாழ்வில் முன்னேறுபவர், இன்றைய செய்தி நாளைய வரலாறு ஆவது போல் வரலாற்றில் இடம் பிடிப்பார். ஓர் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டும் வருவது என தன்னம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும்.
எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே! அதிலிருந்து தன்னம்பிக்கையுடன் பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி. அச்சமின்றி எதிரில் உள்ளவர்களைச் சமாளித்தால் மீதி வெற்றி.
எந்த ஒரு விஷயத்திலும் நம்மால்முடியும் என நம்ப வேண்டும். அப்போதுதான் வாழ்வில் முன்னேற முடியும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் துல்லியமாகத் திட்டமிடுங்கள். திட்டமிட்ட பின் செயல்படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்குமென்று நாம் உணர்ந்த பின் அதை செயல்படுத்தினால் தேடிவரும் வெற்றி!
- நண்பன்-
ஞானத் துளிகள்
தொகுத்தவர்: -
திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை
மனிதன் எந்த மதத்தை அனுஷ்டிக்கிறான் என்பது முக்கியமான தல்ல. மனிதன் அருள்தாகம் கொண்டிருப்பானாகில் அது போதுமானது. இறைவனிடத்து மனிதனுக்கு அனுராகம் இருக்குமாகில் அது போதுமானது.
கசிந்துருகி இறை நாட்டம் கொள்வது விடியற்காலை நேரத்திற்கு நிகரானது. விடியற்காலத்தைத் தொடர்ந்து சூரியோதயம் உண்டாகிறது. அருள் நாட்டத்தைத் தொடர்ந்து இறைவன் காட்சி கிட்டுகிறது.
குழந்தையொன்று படுக்கப்போன பொழுது தனக்குப் பசி வரும்பொழுது தன்னை எழுப்பிவிட வேண்டுமென்று தாயிடம் சொன்னது. பசி வரும்பொழுது நீயே எழுந்து கொள்வாய் என்றாள் தாய். அருள் நாட்டம் அத்தகையது.
வியாபாரிகளாகிய உங்களுக்குப் பொருளைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பெருக்கத் தெரியும். அதே விதத்தில் அருளையும் பெருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவனை அறிந்த பிறகு அவருடைய திருவிளையாடல்களைக் கண்டுகளித்தல் பொருட்டுத் தங்கள் சரீர வாழ்க்கையைத் தொடர்ந்து வைத்திருக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.
ஒருவன் உள்ளத்தில் பக்தி ஓங்குங்கால் உற்றார் உறவினரிடத்து அவன் வைத்திருக்கும் பற்றுதல் எல்லாம் தானாக மறைந்து போகிறது.ஆனால் மக்களிடத்து அவன் தெய்வீக அன்பு கொண்டவனாக இருக்கிறான். இவ்வுலக வாழ்வே தனக்குச் சொந்தமல்லாததாகத் தோன்றுகிறது. இங்கு அவனுக்கு அமைந்துள்ள கடமைகளை ஒருவாறு செய்து முடிக்கிறான். ஆனால் தனக்குச் சொந்த இடம் இதுவல்ல என அவன் உணருகிறான்.
இறையைப் பற்றி எண்ணிறந்த அபிப்பிராயங்கள் இருப்பானேன் ?
இறை உருவாயும் அருவாயும் இருக்கின்றது!உருவங்கள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். இனி அவரவர் இயல்புக் கேற்றபடி உருவங்களுக்கு விளக்கங்கள் கொடுக்கின்றனர். யார் ஒருவனுக்கு இறை அருள் கிடைக்கிறதோ அவன் தான் இறையை உள்ளபடி அறிய வல்லவனாகிறான். அருள்நாட்டம் சிறிதேனும் இல்லாதவர்கள் அவரைப்பற்றி என்ன தெரிந்து கொள்ள முடியும்? நாம் இறையைக் காண முடியுமா? காண்பதற்கான உபாயம் யாது?
ஆம், நாம் இறையைக் காண முடியும். கண்டு இறையோடு உறவாடவும் உரையாடவும் முடியும். அருள்தாகமெடுத்து இறையை நாடிக் கண்ணீர் சிந்துவதே இறையைக் காண்பதற்கு உற்ற உபாயம். மக்கள் பொருளுக்கும் போகத்துக்கும் பதவிக்கும் குடம் குடமாகக் கண்ணீர் சிந்துகின்றனர். இறையைக் காணவேண்டுமென்று ஒரு சொட்டுக் கண்ணீராவது சிந்துபவர் யார் ? அருள் தாகம் பிடித்து இறைவனுக்காக கண்ணீர் விடுபவர் இறையைக் காண்கின்றனர்.
குழந்தை ஒன்று பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அதற்குத் தன் தாயைப் பற்றியோ உணவைப் பற்றியோ கவலையில்லை. ஆனால் தாயிடம் போகவேண்டும் என்னும் எண்ணம் வந்தால் பொம்மையை அது பொருட்படுத்துவதில்லை. உலக மக்கள் உலக சம்பத்து என்னும் பொம்மைகளை வைத்து விளையாடுகிறார்கள். இறைவனை அடையவேண்டும் என்னும் அவா அவர்களுக்கில்லை. பின்பு அந்த அருள்தாகம் அவர்களுக்குத் தீவிரமாகவந்து வாய்த்தால் உலக சம்பத்துக்களைப் பொருள்படுத்தமாட்டார்கள். இறைவனையே அவர்கள் நாடுவார்கள்.
குழந்தைக்கு விளையாடுவதற்குப் பொம்மைகளைக் கொடுத்துவிட்டுத் தாய் வீட்டுக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். விளையாடிச் சலித்துப்போன பிறகு குழந்தை அரைமனதோடு தாயைக் கூப்பிடுகிறது. ஆனால் அவளோ இதோ வந்துவிடுகிறேன். இன்னும் இப்படி விளையாடு ; அப்படி விளையாடு என்று காலத்தைப் போக்குகிறாள். ஆனால் குழந்தை பொம்மைகளை வீசி எறிந்துவிட்டுக் கோ வென்று கதறியழுதால் தாய் அடுப்பிலிருக்கும் சாதம் முதலியவைகளை அப்படியே போட்டுவிட்டுக் குழந்தையிடத்து ஓடி வருகிறாள்.அதே விதத்தில் இறைவன் மக்களுக்கு உலக வாழ்வு என்னும் பொம்மைகளைக் கொடுத்து வைத்திருக்கிறான். வாழ்வில் விரக்தியடைந்து கோ வென்று கதறியழுகிறவர்களுக்கு அனுக்கிரகம் செய்ய அவன் விரைந்தோடி வருகிறான்.
மனதின்கண் படிந்துள்ள மாசுகளெல்லாம் அகன்று போகும்பொழுது இறையருள் கிட்டுகிறது. ஊசி ஒன்று களிமண்ணால் மூடப்பட்டிருக்கும் பொழுது அது காந்தத்தால் கவரப்படுவதில்லை. ஊசியினிடத்திலிருந்து அக்களிமண்ணை அப்புறப்படுத்தினால் ஊசி காந்தத்துக் குரியதாய் மாறுகிறது. மனதில் படிந்துள்ள மாசுகளை அருள்தாகமெடுத்துச் சிந்துகிற கண்ணீர் கழுவிக் கொண்டு போகிறது.
வணக்கத்தால் வரும் நலன் யாது?
அருள் தாகத்தை அது உண்டுபண்ணுகிறது. பக்தியை அது வளர்க்கிறது. அருள் தாகம் இல்லாவிட்டால் ஆத்ம சாதனத்தில் ஒன்றையும் சாதிக்க முடியாது. வணக்கம் அடுத்து அடுத்துப்பண்ணுவதால் இறை நாட்டத்தில் ஆர்வம் மிக ஆத்ம சாதகனுக்கு உண்டாகிறது. வீட்டில் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் வீட்டுத் தலைவனுக்கு அதைக்குறித்துப் பரபரப்பு மிக உண்டாகிறது. நோயாளியின் நோயைப் போக்குவது எங்ஙனம் என்னும் கவலையே வடிவெடுத்தவன் ஆகிறான். அருள் தாகம் பிடித்தவனுக்கு அப்படி இறை விஷயத்தில் கவலை உண்டாகிறது.
தனது உத்தியோகத்தை இழந்து விட்டவன் புதிய உத்தியோகம் பெறுவதற்குப் படாதபாடு படுவது போன்று இறை விஷயத்தில் சாதகன் கருத்துச் செலுத்த வேண்டும். ஒவ்வோர் காரியாலயத்துக்கும் சென்று உத்தியோகம் ஏதாவது காலியிருக்கிறதா வென்றுஅம்மனிதன் விசாரிக்கிறான். இன்றைக்கு அவனுக்கு இடம் கிடைக்காவிட்டால் நாளைக்குத் திரும்பவும் வந்து விசாரிக்கிறான்.
குழந்தை எவ்வளவு காலத்துக்கு அழுகிறது?தாய் அதற்குப் பாலூட்ட ஆரம்பிக்கும் வரையில் தான் அழுகிறது. பாலுண்ண ஆரம்பிக்கும் பொழுது அழுகை நின்று விடுகிறது. சில குழந்தைகள் உண்ணுதற்கிடையில் சிரிக்கவும் விளையாடவும் செய்வதுண்டு. இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகின்றவர்களின் பாங்கும் அத்தகையதே!