இலக்கியத் தேன்
ஓசைப் போட்டி!
- ஷாயிர் –
இடைக்காடர் எனும் சித்தராகிய புலவரை ஏனைய புலவர்கள் அவமதித்து பல கேள்விகள் கேட்ட போது அதெல்லாம் சரிதான். காகம் கத்துவது போலவும் அதனை விரட்டி ஓட்டும் ஒலி போலவும் ஒரு வெண்பாவினை உங்களில் எவரேனும் பாடுங்கள் என்றார் இடைக்காடர்.
அது போன்ற ஒலியினை அமைத்து வெண்பா பாட எந்தப் புலவரும் முன்வரவில்லை. இறுதியில் இடைக்காடரே அதனைப் பாடிக் காட்டினார். இதோ அந்த வெண்பா!
ஆற்றங் கரையி னருகிருந்த மாமரத்தில்
காக்கையிருந்து கஃகஃகெனக் - காக்கைதனை
எய்யக்கோ லில்லாம லிச்சிச் செனவெய்தான்
வையக்கோ னார்தம் மகன்.
அதாவது
, ஆற்றங்கரையின் அருகிருந்த மாமரத்தின் மீது காகம் அமர்ந்து கரைந்து கொண்டிருக்க அதை விரட்டுவதற்கு குச்சியில்லாததால் இச்இச்சென சப்தம் கொடுத்து காகத்தை விரட்டினானாம் வையக்கோனார் மகன்.
(நூல்: திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் நூலின் முகவுரையில்...)
தமிழ்மொழியறிந்தோர் அருணகிரி நாதரையும் அவர் முருகப்பெருமான் மீது பாடிய திருப்புகழையும் அறியாமல் இருக்க முடியாது. அருணகிரி நாதரின் திருப்புகழைப் போன்றே ஓர் அருமையான திருப்புகழை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மீது பாடினார் காயல்பட்டினம் வரகவி காசிம்புலவர் அவர்கள்.
தாளக்கட்டுகள் அமைய, வண்ணம் என்றும் சந்தம் என்றும் வர்ணிக்கப்படும் திருப்புகழ் பாடுவது புலவர்க்கு மிகக் கடினம். அதைஎளிதாகச் செய்து கொண்டிருந்தார் காசிம்புலவர்.
ஆனால், எப்போது பார்த்தாலும் எழுத்தாணியும் கையுமாக ஏதேதோ சப்தத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்த புலவரைப் பார்த்து அவரின் துணைவியார் ஒரு சவாலை முன் வைத்தார்.
துணைவரே! எத்தனையோ சப்தத்தில் - சந்தத்தில் - இசையொழுக கவிதை எழுதுகின்றீர்! இதோ.... நம் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கொய்யாமரத்தில் ஒய்யாரமாக அமர்ந்து கிச்கிச் சென அணில் கத்திக்கொண்டிருக்கிறது. அந்த அணில் கத்துவது போன்ற ஒலியில் ஒரு பாடல் எழுத முடியுமா? என ஒரு சவாலை முன் வைத்தார். கேட்டவர் மனைவியாயிற்றே ...... காசிம் புலவருக்கு கைகள் துறுதுறுத்தன! காத்தம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழைப் பொதிந்து அணில் கத்துவது போன்ற ஒரு திருப்புகழை எழுதித் தள்ளிவிட்டார். இதோஅந்த அருமையான பாடல்
பட்டுக்கச் சிட்டுத் திகழ்முலை
முத்துக்குச் சுக்கட் டியகுழல்
பச்சைப்பொட் டுத்தொட் டணி நுத - லழகான
பத்மத்தட் புட்பத் திருமுக
நச்சப்புக் கொப்புக் கயல்விழி
பத்துத்திக் கொக்கப் பகலுரு - வெளியாக
வெட்டுக்கட் டுச்சித் திரமனைக்
கச்சுக்கட் டிற்பொற் பணைமிசை
யயற்றுப்பொய்க் கட்டுத் தெரிவய - ருடனேபோ
................................................................................................
மக்கத்துற் றெட்டுச் சுவனமோ
டெட்டுத்திக் கெட்டுக் கிரிபுவி
மற்றொற்றைக் கொற்றக் குடைபுரி - யிறசூலே
என்ன? பாடலைப் பாடும் போதே பற்கள் முறிந்து விழுகிறதா? புலவரின் திறமையை , தமிழாற்றலைப் பார்த்தீர்களா ? பாட்டுக்குள் அணில் ஒளிந்து கத்துவது கேட்கிறதல்லவா?
நுகபாக்கள்- நுஜபாக்கள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹள்ரத் அலிய் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
ஒவ்வொரு நபிக்கும் ஏழு நுஜபாக்கள் அல்லது நுகபாக்கள் வழங்கப்பட்டார்கள். எனக்கோ 14 பேர்கள் வழங்கப்பட்டனர்.
அவர்கள் யார் யார் ? என அலிய் (ரலி) அவர்கள் விபரிக்கத் தொடங்கி, நான், என் இரு மக்கள் (ஹஸன் - ஹுஸைன்), ஜஃபர், ஹம்ஸா,அபூபக்கர், உமர், முஸ்அப், இப்னு உமைர், பிலால், ஸல்மான், மிக்தாத், ஹுதைபா, அம்மார்,அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹும் ) எனப் பதிலளித்தார்கள்.
திர்மதி - அஹ்மத்,
(இந்த ஹதீஸ் ஹஸன் என திர்மதி இமாம் அறிவித்தார்கள் ) - இர்ஃபானுஸ்ஸுன்னா-