தாடர் எண்-32 தொடர்....
வஹபிகள் சஹாபிய வேடங்களில்...
ஜியாரத் செய்க!
“பொதுவாக கபுரு ஜியாரத்தை வேண்டாம் என விலக்குவதானது குப்ரை உண்டாக்கும்” என்பதாக, அல்லாமா, முல்லாஅலி காரீ (றஹ்) அவர்கள், ஷரஹுஷ்-ஷபா’ 2-ஆவது பாகம், 151- ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவான ஜியாரத்தை விலக்குவது கொண்டு குப்ரு ஏற்படுமானால், பனாபில்லாஹ் வாகி ஆண்டவனளவில வாஸிலான நாதாக்களுடைய, அவுலியாக்களுடைய கபுருகளை ஜியாரத் செய்யலாகாது எனக் குறிப்பாகத் தடுத்தால் எத்தகைய பயங்கரமான பாபமாக இருக்க வேண்டுமென்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். “ஜியாரத்திற்குப் போகக்கூடாது என எண்ணம் வைத்து விலக்குகிறவன் இஸ்லாத்தை விட்டு நீங்கியவனாகவும் அல்லாஹ்வுக்கும் றஸூலுக்கும் மாறுபாடு செய்தவனாகவும் ஆகிவிடுவான்” என்பதாக அல்லாமா குஸ்த்துலானீ (றஹ்), அல்லாமா முல்லா அலீகாரீ(றஹ்) ஆகியவர்கள் சொல்லியுள்ளார்கள் என்பதாக ‘மவாஹிபுல்-லதுன்னிய்யா’, 2-ஆவது பாகம், 383-ஆவது பக்கத்திலும், ஷரஹுஷ் ஷபா’, 2-ஆவது பாகம் 51-ஆவது பக்கத்திலும் வந்துள்ளன. மேலும், இவ்வாறாக ‘ஜவ்ஹர்-முனள்ளம்’,‘வாஹிதுல் ஹக்கு’ ‘மஷாரிக்குல் அன்வார்’, துரருஸ் - ஸனிய்யா - பீ - றத்தில்- வஹ்ஹாபிய்யா’, முதலிய கிரந்தங்களும் கூறுகின்றன.
அவுலியாக்களையும் அவர்களது கபுருகளையும் ஜியாரத்துச் செய்வதையும், அவர்கள் பால் உதவி தேடுவதையும் இன்கார் செய்பவன் ஷைத்தானைப் போலாவான்” என்பதாக, குர்ஆன் ஷரீபின் 11-ஆவது ஸூரா 44-ஆவது ஆயத்தின் வியாக்கியான விளக்கத்தில், தப்ஸீர் ரூஹுல் பயானில்’, 4-ஆவது பாகம், 137- ஆவது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது.
‘அவுலியாக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பதவிக்குத் தகுந்தாற்போல்,ஆண்டவன் பால் முடுகியிருப்பதில் நிச்சயமாக தரஜாக்களில் தாரதம்மிய முண்டு.அங்ஙனமே அவுலியாக்களுடைய தகுதிப்படிக்கு,அவர்களை ஜியாரத்துச் செய்கிறவர்கள் பிரயோஜனங்களைப் பெற்றுக் கொள்வார்கள் என்று ‘றத்துல்-முஹ்த்தார்’, 1-ஆவது பாகம்,665-ஆவது பக்கத்தில் சொல்லப்பட் டிருக்கின்றது.
“கஃபா, ஜம்ஜம், ஸபா, மர்வா, அரபாத் முஸ்தலிபா, மினா, கல்லெறியுமிடங்கள், அன்பியாக்களின் கபுருகள்ஆகிய இத்தலங்களிளெல்லாம் துஆக்கள் அங்கீகரமாகி ஒப்புக் கொள்ளப் படுகின்றன.இவ்விடங்களைப் போல் அவுலியாக்களின் கபுருகளிடத்திலும்‘ துஆக்கள்’ கபூலாகி ஏற்கப்படுவதை அனுபவப்பூர்வமாகக் கண்டு சோதிக்கப் பெற்றிருக்கின்றது” என்பதாக ‘தப்ஸீர் ரூஹுல் பயான்’, 1-ஆவது பாகம், 298-299 ஆவது பக்கங்களில் கூறப்பட்டிருக்கிறது.
ஹள்ரத், ஸுல்த்தானுல் ஆரிபீன், யஸய்யிது அஹ்மது கபீர் ரிபாயீ ஆரிபு நாயகம் (றலி) அவர்கள் தங்களது கலீபாக்களுக்கும் பெரியோர்களுக்கும் “நீங்கள் பகுதாது ஷரீபுக்குப் போவீர்களாயின் முதன்முதலாக கெளதுல் அஃளம், அப்துல் காதிர், முஹிய்யுத்தீன் (றலி) அவர்களை ஜியாரத்துச் செய்த பின்பு தான் மற்றக் காரியங்களைக் கவனிக்க முற்பட வேண்டும்”என்று உபதேசம் செய்தவர்களாய் இருந்தார்கள்.
ரிபாயீ நாயகம் (றலி) அவர்கள் சமூகம் ஒரு நாள் மனிதர் ஒருவர் வந்து தாம் பகுதாதுக்குப் போக நாட்டம் கொண்டிருப்பதாயும் தனக்கு உபதேசம் செய்து பயண விடையளிக்குமாறும் வேண்டி நின்றார்.
அதற்கு ஆரிபு நாயம் ரிபாயீ (றலி) அவர்கள் “நீங்கள் பகுதாதுக்குள் நுழைந்தால் நேரே சென்று ஷெய்கு அப்துல் காதிரு ஜீலானீ (றலி) அவர்களைத் தரிசித்துக் கொள்வீராக. அவர்கள் ஹயாத்தாக இருக்குங் காலத்திலும் சரி, வபாத்தாகி விட்ட காலத்திற்கப்பாலும் சரி, அவர்களை ஜியாரத்துச் செய்யாமல் நீர் எந்தக் காரியத்தையும் செய்ய முற்பட்டுவிடக் கூடாது. விலாயத்துடையவர் எவராயிருப்பினும் சரி, பகுதாதுக்குள் நுழைந்த போது ஷெய்கு அப்துல் காதிரு ஜீலானீ (றலி) அவர்களை ஜியாரத்துச் செய்யவில்லையானால், அவருடைய விலாயத்தைப் பிடுங்கப்பட்டுப் போய்விடும் என்று அவர்களுக்கு அல்லாஹ் தஆலா வார்த்தைப்பாடு செய்துள்ளான்” என்பதாக உபதேசித்து விடை கொடுத்தனுப்பினார்கள்.
இவ்விபரம் ‘பஹ்ஜத்துல் அஸ்றாற்’ 238-ஆவது பக்கத்திலும் ‘தப்ரீஜுல்-காத்திர்’ 53-ஆவது பக்கத்திலும் காணப்படுகின்றது. மனாகிபு-கெளதிய்யா’ விலும் சொல்லப்பட்டுள்ளது.
இதைக் கொண்டு அறியப்படுவது யாதெனில், எந்த ஊருக்குச் சென்ற போதிலும் அந்த ஊரிலுள்ள பிரபல்யமான அவுலியாவின் தர்காவுக்குப் போய் ஜியாரத்தை முடித்துவிட்டுத் தான் இதர காரியத்தில் ஈடுபடவேண்டும்.அதிலே தான் பரகத்துண்டு என்பதே.ஆகவேதான் குதுபுமார்களெல்லாரும் கப்ரு ஜியாரத்தைப் பேணி அனுஷ்டித்து வந்திருக்கின்றார்கள் என்பதற்கு அவர்களது நடவடிக்கைகள், சரித்திரங்கள் சாட்சியங்கள் பகருகின்றன.
மேலும், “ஸாலிஹீன்களாகிய அவுலியாக்களை ஞாபகஞ் செய்யுமிடத்தில் ஆண்டவனது றஹ்மத்து இறங்குகின்றது” என்ற ஹதீதைக் குறிப்பிட்டு, “அன்பியா, அவுலியா, ஸாலிஹீன், உலமாக்கள் ஆகியோர்களுடைய தர்கா ஷரீபை, கப்ரு ஷரீபை நாடி, புண்ணியம் தேடிப் பிரயாணம் செய்து ஸபர் போவது முஸ்த்தஹப்பாகும்”என்று ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ (றஹ்) அவர்கள் இஹ்யா உலூமுத்தீன் கிரந்தத்தில் பிரயாணத்தின் ஒழுங்கு முறைகள் என்னும் அத்தியாயத்தில் கூறுகின்றார்கள். ஜியாரத்தை முன்னிட்டு யாத்திரை செய்வது முஸ்தஹப்பு என ரத்துல் முக்தார் 1 ஆவது பாகத்தில் ஜியாரத்தின் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது
(தொடரும்)