மகளிருக்கு மட்டும்
-தபீப்-
(ஆண்களும் படிக்க வேண்டும்)
நம் நாட்டில் 80% பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரும்புச் சத்தும், வைட்டமின் மற்றும் நுண்சத்தும் (Micronutrients) நம் ஆகாரத்தில் குறைவாக இருப்பதே இதற்கு காரணம். பருவம் அடைந்த பின்பு இந்த சத்துக்களின் தேவை அதிகரிக்கின்றது. கீரை வகைகள் கொத்தமல்லி, கறி வேப்பிலை, முட்டை, பால் மீன், முளை கட்டிய பயிறு, பருப்பு வகைகள் சேர்க்க வேண்டும். பெண்கள் திருமணமாவதற்கு முன்பே சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். நம் நாட்டில் பெண் குழந்தைகள் பலர் காலை உணவை சாப்பிடுவதே இல்லை. அப்படிச் சாப்பிட்டாலும் சத்தான உணவை சாப்பிடுவதில்லை. இவ்வாறு இருப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
பெண்குழந்தைக்கு 10 வயது ஆகும் போது R-VAC (Rubella Vaccine) என்ற தடுப்பு ஊசி கண்டிப்பாகப் போட வேண்டும்.
திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப்பின் FOLIC ACID மாத்திரையை உட்கொள்ள ஆரம்பித்து விட வேண்டும். இது குழந்தை உண்டாகும் போது அதனுடைய மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற வியாதிகளிலிருந்து பாதுகாக்கும்.
பெண்கள் கருவுற்ற பின்பு மசக்கை வாந்தி அதிகம் இருக்கக் கூடாது. அப்படி ஏற்பட்டால் வாந்தியைக் கட்டுப்படுத்த டாக்டர் கொடுக்கும் மாத்திரைகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். கருவுற்ற பின்பு 3 மாதத்திற்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை முறையாக செய்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் மற்றும் நுண்சத்துக்கள் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய் எலுமிச்சை போன்ற பழங்களில் அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இவைகளை உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் உணவில் பால், மோர் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தினமும் 2 மிலி 2.5 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். ஒரு டம்ளர் (200 மி) பாலில் ஒரு கிராம் கால்சியம் சத்து உள்ளது. இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
கருவுற்ற பெண்கள் நோன்பு, விரதம் இருப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிப்பது மட்டுமல்லாமல் தாயின் ஆரோக்கியமும் குறைந்து விடும்.
கருவுற்ற காலத்தில் வீண் விவாதங்கள், சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். டி.வி.யில் வன்முறையைத் தூண்டக் கூடிய காட்சிகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது குழந்தையினுடைய வளர்ச்சியைப் பாதிக்கும்.இந்நேரங்களில் மனதிற்குச் சந்தோஷம் தரும் காட்சிகளையும், இதமான பாடல்களையும் பார்த்தல், கேட்டல் நன்று. (மருத்துவக் குறிப்பு)