சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்
அமுத மொழிகள்
19.6.2012 அன்று திண்டுக்கல்லில் தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை தொடர்ச்சி..
ஈமானும் அப்படித் தான். அல்லாஹ்வை ஈமான் கொண்டு ரஸுலுல்லாஹ்வை ஈமான் கொள்ளவில்லை என்றால் அது ஈமான் இல்லை. அல்லாஹ்வே கூறுகிறான். “லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுற் றஸூலுல்லாஹ்” எனக் கூற வேண்டுமென்று. இரண்டும் இரண்டு கதவுகள். ஒரு கதவை மூடிப் பலன் இல்லை. இரு கதவுகளையும் மூட வேண்டும்.
அப்போது தான் பாதுகாப்பு. கள்ளன் வரமாட்டான். நாய் பேயெல்லாம் வராது. பேய் வரும். (சிரித்துக் கொண்டு) நாய் வராது. (அப்போது ஹுஸைன் முஹம்மது ஆலிம் எழுந்து) எல்லாமே ஒன்று எனும் கருத்தில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு தக்பீர் கட்டியவுடன் அந்த ஒன்றுதல் வந்து விடுமல்லவா? என வினவ, அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ஆம் ! உடனே அந்த எண்ணம் வந்து விடும் !அவர்கள் அங்கே வானத்தை நினைத்து தக்பீர் கட்டுவதில்லையே... பள்ளிக்குள் அல்லாஹ் இருப்பதாக நினைத்துக் கட்டுவதில்லையே... எந்தக் கடவுளையும் நினைப்பதில்லையே... வானத்தில் இருப்பதாக எண்ணினால் அது (தனியாக) ஒரு கடவுள் தான். இவர்கள் ஓர் அர்ஷை சிம்மாசனமாகக் கற்பனை செய்து அதில் ஓர் ஆள் இருப்பதாகத் தானே சிந்திக்கிறார்கள். முழுப் பிரபஞ்சமும் சிம்மாசனம் தான் !
ஆத்ம சாந்தி
(இப்போது திண்டுக்கல் மஹ்பூப் சுப்ஹானி எழுந்து) இறந்த பின் இறையுடன் இரண்டறக் கலந்த பின் நம் ஆத்மாவுக்கு நாம் தான் எனும் சிந்தனை வருமா? எனக் கேட்டார் ? அதற்கு வாப்பா நாயகம் அவர்கள், எதற்கு அந்தச் சிந்தனை? ஐஸ் ஆக இருக்கும் வரை தான் ஐஸ்...ஐஸ் என்ற சிந்தனை. அது தண்ணீராகக் கரைந்த பின் ஐஸ் என்ற எண்ணமா வரும்? தண்ணீர் என்ற எண்ணமா வரும்? அது ஒன்றும் இருக்காது! அதைப் பற்றிய எந்த ஒரு பிரச்சனையும் அங்கு இல்லை. நாம் இல்லையே.. இருந்தால் தானே சிந்திக்க வேண்டியது வரும் ! நாம் தான் இல்லாமல் போய் விடுகிறோமே ! ஐஸ் இல்லாவிட்டால் ஐஸ் என்று சொல்வோமா? அது அப்படியே கரைந்து போய்விடும். தண்ணீர் என்று தான் சொல்வோம். முழுமையாக இருக்கும் நேரத்தில் நான் தண்ணீர்...நான் தண்ணீர் என சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! எந்த சிந்தனையும் இருக்காது! அப்படி இல்லாமலிருப்பது தான் ஆத்ம சாந்தி என சொல்லப்படுவது! சிந்தனையே இருக்கக் கூடாது! சிந்தனையே வராது! சிந்திப்பதும் ஒரு தண்டனை தான்! இறந்த பின் மனிதன் உலகில் செய்த சிந்தனைகள் - செயல்கள் பற்றி கேள்வி கணக்குகள் இருக்கின்றன.(மீண்டும் சுபுஹானி எழுந்து, வாப்பா நாயகம் அவர்களின் பாடலில் “அனைத்தும் நானே நானென்னும் நினைப்பில் நித்தியம் நிலைத்திடுவாய்! தினைத்துணை தானும் வேறென்றும் நினைப்பினை முற்றும் விட்டிடுவாய்” எனவருகிறதே என வினவினார். அதற்கு வாப்பா நாயகம் அவர்கள்) ஆம்! விட்டு விட்டால் ஒன்றுமே இல்லை. இதன் கருத்து தெளிவாக விளங்குகிறது தானே! இதைத்தான் நாம் சொல்கின்றோம்! அப்போது ஒன்றும் தேவையில்லையே. நான் என்ற எண்ணமே- நான் நீ என்பதே இல்லாமல் போய்விடும்.
உண்மைத் தொழுகை
ஒரு சிலர் பேசுவதை விளங்குகிறார்களில்லை. அதற்குவேறொரு கருத்தை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் தொழுவதில் எந்தப் புண்ணியமுமில்லை தான்! ஆனால் அல்லாஹ் ரசூல் வணங்கச் சொல்லி இருக்கிறார்கள். அதுவும் வணங்கியே தீர வேண்டும். ஆனால் கொஞ்ச நேரமாவது மனம் ஒன்றித்தொழ வேண்டும். தொழுகையை விட்டு விட்டால் அல்லாஹ் ரசூல் சொன்னதற்கு விரோதமாகச் செய்ததால் அதற்குரிய தண்டனை உண்டு ! ஆகவே தொழுகையை எந்த நிலையிலும் அதைப் பூர்த்தி செய்வது தான் முக்கியம்! ஆனால் அதற்காக அல்லாஹு அக்பர் என தக்பீர் கட்டிக் கொண்டு.வேலையில்லாதது என நினைத்துக் கொண்டு, அங்கு வருவது யார்? இங்கு போவது யார்? கேட்டைத் திறந்து யார் வருகிறார்கள் என்று பார்ப்பது. .இஃதெல்லாம் தொழுகையில் இல்லை! மேலே பார்ப்பது - திருப்பிப் பார்ப்பது சில பேர் இப்படித் தொழுகின்றனர். இஃதெல்லாம் பெரிய பாவம்.ஆடாமல் அசையாமல் வேறு கவனமின்றித் தொழ வேண்டும். அதுதான் தொழுகை! ஒருவர் ஒன்று சொன்னால் நன்மைக்குச் சொல்கின்றாரா? கெடுதிக்குச் சொல்கின்றாரா? என யோசிக்க வேண்டும். கெடுதிக்குச் சொல்ல மாட்டார். நன்மைக்குத் தான் சொல்வார். அதை நீங்கள் நன்மையாகத் தான் எடுக்க வேண்டும். நீங்கள் தொழுவதில் புண்ணியமில்லையென கெடுதிக்குச் சொல்வாரா? அப்படிச் சொன்னால் விஷயத்தை விளக்க வேண்டியதற்காகத் தான் சொல்கிறோம். அதனால் தான் சரியாக முயற்சி எடுக்க வேண்டியது உங்களுக்கு அவசியம்.
கைரு - ஷர்ரு, நன்மை - தீமை
நேற்று ஒருவர் வந்து கேட்டார்...கைரு ஷர்ரு எல்லாமே ஒன்றிலிருந்து தானே வருகிறது.
அதனால் எல்லாரும் எப்படியும் நடந்து கொள்வார்கள் தாமே! நன்மை தீமையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து வருவதால் அதைப் பற்றி என்ன? வேண்டிய மாதிரி நடக்க இயலும் தானே? என்று கேட்டார்! அவர் விளங்கியது அவ்வளவு தான்! கைரும் ஷர்ரும் இருக்கின்றன. அல்லாஹ் தந்ததில் நல்லதும் கெட்டதும் அல்லாஹ்விலிருந்து தான் வருகிறது.நாமாக உண்டு பண்ணிக் கொள்வதல்ல. அவன் நாட்டப்படி வருகிறது. அவன் நாட்டம் வரும் நேரத்தில் மோசமாக இருந்தால் அதில் நாங்கள் குறுக்கிட்டுக் கொள்ள வேண்டும்.உதாரணமாக, நாம் கடைக்குப் போய் அரிசி வாங்கப் போகிறோம்.. இது நல்ல அரிசி எனக்கடைக்காரர் சொல்கிறார். ஆம்! இதில் கல்-முள்-கறுப்பு மற்றவைகளும் இருக்கும். எனவே இதனை நன்கு கழுவி அலசி அரிசியை மட்டும் சமைத்து சாப்பிடுங்கள்! எனக் கூறுகிறார். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.
அப்படி இன்றி கடைக்காரன் கிடக்கிறான் பைத்தியக்காரன் எனச் சொல்லி கல்-மண்ணையும் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அவ்வளவுதான்! அவன் அவ்வளவு தான்!
சிந்திக்க மூளை
அல்லாஹ் என்ன சொன்னான் என்றால்,எல்லாம் என்னிலிருந்தே வருகின்றன! எல்லாம் நானாகத்தான் இருக்கிறேன்.. . ஆனால் நீ இன்னதைச் செய்! இன்னதைச் செய்யாதே!... என தெளிவுபடுத்தி விட்டான்! சில நேரம் சில எண்ணங்களும் வரும். ஒரு நேரம் குடித்துப் பார்ப்போமா? என எண்ணம் வரும். போதை வருகிறது எனப் பார்ப்போமா. (அமர்ந்திருந்த ஒருவரைக் குறிப்பிட்டு) இவர்கூட அப்படிக் குடித்துப் பார்ப்போம் என எண்ணுகிறார் என வைப்போமே! குடித்துப் பார்க்கிறார். போதை வரவில்லை! இப்படியா செய்து பார்க்கச் சொல்லி இருக்கிறது? அல்லாஹ்வும் ரஸூலும் எதை வேண்டாம் என வெறுத்தார்களோ அதை விட்டுவிட வேண்டும்! எங்களுக்கு மோசமான அந்த எண்ணம் வரும்.அப்போது என்ன செய்ய வேண்டும்?அல்லாஹ் என்ன சொல்லியுள்ளான். ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என சிந்தித்து விலகிக் கொள்ள வேண்டும்.எனவே அதை வாயில் வைத்து (டெஸ்ட்) பார்க்கக் கூடாது! அல்லாஹ் சொல்லி விட்டான்.எல்லாம் என்னிலிருந்து தான் வருகின்றன. ஆனால் அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நீ உன் மூளையை பாவித்துக் கொள்! என.. எதற்கு அல்லாஹ் மூளையைத் தந்தான்? எல்லாம் அது தான் என மூளையைக் கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா? அல்லாஹ் மூளையைக் கொடுத்தது சிந்திப்பதற்காக ! நல்லதைச் செய்வதற்குத் தான் மூளை. கெட்டதைச் செய்வதற்கு அல்ல !
(அமுதம் பொழியும்)