ஹதீஸ் பக்கம்
மனிதனாய் வாழ்வோம்!
- அபூ பாஹிரா
உலகம் செத்தபிணம் - அதனைத் தேடுவோர் நாய்கள்! (ஹதீஸ்)
என்ன? கன்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கடின மொழிகளால் கணை தொடுத்துள்ளார்களே என யோசிக்கிறீர்களா?
இது போதாது!ஆம்!
உலகாசை கொண்டு அலைவோரின்செயல்களைப் பார்த்தால், குணங்குடி மஸ்தான்சாஹிப் (ரலி) அவர்கள் “நாயினும் கடையாவனோ?” (நாயைவிட கேவலமானவனோ யான்!) என்று பாடியது போல நீங்களும் பாடவேண்டியிருக்கும்!
உதாரணமாக , ஓரிடத்தில் இலவசப் பொருள் வழங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம் . கொஞ்சம்பொருளே மீதியிருக்க, மக்களோ நிறையப்பேர் குவிந்துவிட, அந்தப் பொருளை “தான் வாங்கிவிடவேண்டும்”என அடுத்தவனைத் தள்ளி - நெருக்கி - முந்திக்கொண்டு பாயும் அவசரத்தையும், குப்பைத் தொட்டியில் கிடக்கும் ஒரிருஎலும்புத் துண்டுக்குப் பல நாய்கள் சேர்ந்துவிட அங்கே நடக்கும் சிறு போர்க்களத்தையும்ஒப்பிட்டுப் பாருங்கள்! உண்மை புரியும்.
அதே போல, ஒரு தெருவிலிருக்கும் நாய் இன்னொரு தெருவிற்குள்நுழைந்து விட்டால், அந்தத் தெருநாய் “என் ஏரியவுக்குள்ளா வந்தாய்?” என விரட்டுவதையும்.
மனிதர்கள் அந்தத்தெருக்காரன் - அந்த ஊர்க்காரன் - அந்த மொழி பேசுபவன் - அந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் - அந்த நாட்டைச் சேர்ந்தவன்என ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவதையும், நெருக்கடி கொடுப்பதையும், ஒப்பிட்டுப் பாருங்கள். இன்னும்இதுபோல எத்தனை எத்தனையோ!
மேலும் நாய்க்குத்தெரியாத நடவடிக்கைகளும் மனிதனுக்குண்டு.
நட்பைப் பிரித்தல்- குடும்பத்தைக் கெடுத்தல் - கேலி பரிகாசம் செய்தல்- அடுத்தவனின் நிலத்தை உரிமையாளன் அறியாமலே விற்றுவிடல்- மிரட்டிப் பழிவாங்குவது- இன்னும் எத்தனை எத்தனையோ!
இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?
பிணத்தின் ஹகீகத் - யதார்த்தம் - நாய்க்குப் புரியவில்லை. அது நாறும் - சற்று நேரத்தில் மேலும் மாறும் என்பதுஅதற்குப் புரியவில்லை
அதேபோலத்தான்,
உலகப் பொருள்கள்யாவும் இன்று காட்சியளித்து, நாளை நிலைமாறி,அடுத்தநாள் அழிந்து போகக்கூடியவை. அதன் யதார்த்தத்தை மனிதன் அறியாமல் அதன்மீது அளவற்ற ஆசை வைக்கும்போதுவெட்கம் - நாணம் - கெளரவம் அனைத்தையும் விட்டுவிட்டுஅதைப் பெறுவதற்கு மனிதன் போட்டி போடுகிறான். அப்போது நாயுடன் சமமாகிப் போகிறான்.
ஆதலால்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உதாரணத்தைக் கூறி மனிதனை உயர்த்த முனைகிறார்கள்.