• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  அண்ணல் நபி அவர்களின் அற்புத வரலாறு


            அண்ணல் நபிஅவர்களின்அற்புத வரலாறு


                                                                                      போருக்குப்பின்.....

 

 

    ஹது யுத்தம் ஒருவாறு  முடிந்து போனதும், மக்கத்துக் காபிர்கள்  தம் ஊரை நோக்கிப் புறப்படத் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்த மதீனத்துப் பெண்மணிகள் போர்க்களம் நோக்கி கிளம்பிவர ஆரம்பித்து விட்டார்கள்.  காயமுற்றவர்களுக்கு உதவி செய்யவும்தாங்கள் கேள்விப்பட்டவை உண்மை தானா இல்லை வதந்தியா? என்று தெரிந்து கொள்ளவும் அவர்கள் அணி அணியாக வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முதல் அணியில் ஸபிய்யா, அன்னை ஆயிஷா உம்முல் அய்மன்(ரலி) ஆகியோரும் வந்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் வருவதைக் கேள்விப்பட்ட எம்பெருமானார் மிகவும் பச்சாதாபமுற்றார்கள்.  உடனே ஸுபைர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.  “தாங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும், அதாவது உங்கள் தாயார் இங்கு வருவதற்குள் உடனடியாக ஹம்ஸாவின் உடலை அடக்கம் செய்துவிட வேண்டும்.  அதோடு ஸபிய்யாவையும் எப்படியாவது நீங்களே திரும்ப அழைத்துச் சென்றுவிட வேண்டும். ஸபிய்யாவின் சகோதரருக்கு ஏற்பட்ட கொடுமையை காணாது போகட்டும்” என்றார்கள் நபியவர்கள். உடனே ஸுபைர் (ரலி) தம் தாயாரிடம் ஓடிச் சென்று, “என்அருமைத் தாயே, தங்களை அல்லாஹ்வின் தூதர் திரும்பப் போய்விடுமாறு கூறினார்கள்” என்றார்.  அதற்கு அவரின் தாய்,“மகனே என் சகோதரர் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை நான் ஏற்கனவே கேள்விப்பட்டுஅறிந்திருக்கிறேன்.  அதனால் எனக்கு ஒன்றும் ஏற்பட்டுவிடாது.  அல்லாஹ்வுக்காக நாம் எதையும் ஏற்றுக் கொள்வோம்.  அல்லாஹ் நாடினால்,நான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பேன்”. என உறுதி கூறினார்.  இதனை ஸுபைர் (ரலி) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது, “சரி அவர்களை அவர்கள் விருப்பப்படிவிட்டு விடுங்கள்” என்று கூறிவிட்டார்கள்.


      ஸபிய்யா (ரலி) தன் அருமை சகோதரர் உடலைக் கண்டு கண்ணீர் வடித்தார்கள்.  நெஞ்சு படபடத்தது.  வாயில் துணியை வைத்துப்பொத்திக் கொண்டார்கள்.  அப்போது தன் அருமை சகோதரருக்காக பிரார்த்தனை செய்து  அப்போது இந்த  வசனத்தை ஓதினார்கள்! 

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம்.  நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்”. 


      பின்னர் பத்ருப் போருக்குப் பிறகு அருளப்பட்ட இறைவசனத்தின் கருத்துக்களை நினைவு கூர்ந்து ஆறுதலடைந்தார்கள்.  அதாவது:  “விசுவாசிகளே! நீங்கள் உங்கள் முயற்சியில் சித்தியடையும் பொருட்டு பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்.  நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.  அன்றி அல்லாஹ்வுடைய பாதையில் (யுத்தம் புரிந்துஎதிரிகளால்) கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று கூறாதீர்கள்.  அவ்வாறன்று, அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள்.  ஆனால் (இதனை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.  (விசுவாசிகளே!) ஓரளவு பயத்தாலும் பசியாலும் பொருள்கள்,உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் நஷ்டத்தாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்.  என்றாலும்,(நபியே) இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களை சகித்துக் கொண்டிருப்போருக்கு நீங்கள் நன்மா ராயம் கூறுங்கள்! சோதனைக் குள்ளாகும் அவர்கள் தங்களுக்கு எத்தகைய கஷ்டம் ஏற்பட்ட போதிலும் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம், நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம் எனக் கூறுவார்கள்.  இத்தகையோர் மீது தான் இறைவனின் கிருபையும் ஆசீர்வாதமும்ஏற்படுகின்றன.  மேலும் இவர்கள் நேரான வழியையும் அடைந்தவர்கள்”.                                                                                  

                                                                                                            (தொடரும் )