விஞ்ஞானப் பேரின்பம்
வியப்பளிக்கும் பாதுகாப்பான வளி மண்டலம்!
பூமியைச் சுற்றி வாயுக்கள் அடங்கிய காற்று மண்டலம் உள்ளது. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து தொடங்கி சுமார் 800 கி.மீ. உயரம் வரை வியாபித்துள்ளது. அதற்குமேல் வாயுக்களின் அளவு குறைந்து சுமார் 1000கி.மீக்கு மேல் வெற்றிடம் (space) ஆரம்பித்து விடுகிறது. புவி பரப்பிலிருந்து 10 கி.மீ உயரம் வரை பெரும்பாலான வாயுக்கள் நிறைந்துள்ளன. மேகத்தினை உருவாக்கும் இடமாகவும் இது அமைந்துள்ளது. அதற்கும் மேலே 70 கி.மீ. உயரம் வரை ஓசோன் படலமும் (Ozone Layer) அதற்கப்பால் 100கி.மீ. உயரத்திலிருந்து 300கி.மீ. உயரம் வரை முறையே மீஸோஸ்பியர் அடுக்கும் (Mesosphere Layer) தெர்மோஸ்பியர் அடுக்கும் (Thermosphere Layer) உள்ளன.
இவற்றை உயிரினங்கள் உயிர்வாழ ஒரு பாதுகாப்பான விதானமாக நாம் அமைந்துள்ளோம் என்று இறைவன் கீழ்க்காணும் அல்குர்ஆன் வசனத்தின் மூலம் அறிவித்துள்ளான்.
“இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம். எனினும் அவர்கள் அவற்றிலுள்ள
அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்”. - (21:32)
இனி வானம்(காற்று மண்டலம்) எவ்வாறு ஒரு பாதுகாப்பான விதானமாக அமைந்துள்ளது என்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.
1. உயிரினங்களின் பாதுகாப்பிற்கு ஓசோன் படலம்:
புவிப் பரப்பிலிருந்து சுமார் 20 கி.மீ உயரத்திலிருந்து 70 கி.மீ உயரம் வரை காற்று மண்டலத்தில் ஓசோன் அடுக்கு (Ozone Layer (or) O3) உள்ளது. இப்படலம் உயிரினங்களுக்கு ஊறுவிளைவிக்கும் குறைந்த அலை நீளமுள்ள புற ஊதாக்கதிர்களைத் (Harmful ultra violet rays of short wave length) தடுத்து விடுகின்றன. அவ்வாறு UV கதிர்கள் தடுக்கப்பட்டு விட்டால் அவை பூமியை அடைந்து தோல் எரிச்சல் (sun burn), தோல் புற்றுநோய் (skin cancer), கண்புரை நோய் (eye cataracts) இவற்றை ஏற்படுத்தும். நீர்வாழ் மிதவை உயிரிகளை (plankton)யும் அழித்துவிடும். அதே சமயம் அதிக அலை நீளமுள்ள புற ஊதாக்கதிர்களை இந்த ஓசோன் படலம் தடுக்காமல் பூமிக்கு அனுப்பிவிடும். இவை நம் தோலில் உள்ள ‘ஸ்டீரால்’ (stero) கூட்டுப் பொருளுடன் வேதிவினை புரிந்து வைட்டமின் D-ஐ உடலுக்குப்பெற்றுத் தருகிறது. ஆக ஓசோன் படலம்
குறைந்த அலை நீளமுள்ள புற ஊதாக்கதிர்களைப் பூமிக்கு அனுப்பாமல் தடுத்துவிடுவதால் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்பான குடையாக விளங்குகிறது.
2. எரிவிண்மீன்களிலிருந்து பாதுகாப்பு:
அடுத்து வளிமண்டலம் எரிவிண்மீன்களிலிருந்தும் பாதுகாப்புத் தருகிறது. காற்று மண்டலத்தில் சுமார் 100கி.மீ.உயரத்திலிருந்து 300 கி.மீ. உயரம் வரையுள்ள மீஸோஸ்பியர் அடுக்கும் எரிவிண்மீன்களிலிருந்து(Meteroites or shooting star) பூமியைப் பாதுகாக்கின்றன. எரிவிண்மீன்கள் எனப்படுவது விண்ணில் சூரியனைச் சுற்றிவரும் சிறிய மற்றும் பெரிய பாறைகளாகும். இவை பூமியின் வாயுமண்டலத்தை அடையும் பொழுது தெர்மோஸ்பியர் அடுக்கிலுள்ள அதிக வெப்பத்தில் உராய்து எரிந்துவிடுகின்றன. இரவு நேரங்களில் இவை எரிந்து பிரகாசிப்பதைக் காணலாம். இந்தப்படலம் மெல்லியதாக இருந்திருந்தால் புவியை வந்தடைந்து பேரழிவை ஏற்படுத்தும். அவ்வாறு இல்லாமல் இறைவன் நமக்கு வாயுமண்டலத்தை ஒரு பாதுகாப்பான விதானமாக அமைத்துள்ளதைத்தான் மேலே உள்ள வசனத்தில்குறிப்பிடுகிறான்.
3. சூரியப்புயலிலிருந்து பாதுகாப்பு:
பூமியைச்சுற்றி ஒரு வலுவான காந்தப்புலம் (Magnetic force field) உள்ளது. பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் அளவு இந்தக் காந்தப்புல மண்டலம் (Magnetoshere) அகன்று
பரந்துள்ளதால் சூரியப் புயலிலிருந்து (solar storms) நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது. சமீபத்திய நாஸாவின் விண்வெளி செயற்கைக் கோளின் (NASA's image space craft) ஆய்வின்படி பூமியின் காந்தப்புலத்தில் வெடிப்பு சில சமயங்களில் சில மணிநேரம் ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால்அதிர்ஷ்டவசமாக இந்த வெடிப்பு பூமியின் மேற்பரப்பைச் சூரியப்புயல் படும்படி வெளிக்காட்டவில்லை.
4. உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ வாயுக்கள்:
காற்றிலுள்ள ஆக்ஸிஜனை உயிரினங்கள் பெற்றுச் சுவாசிக்கின்றன. சுவாசிக்கும் பொழுது வெளிவரும் கரியமலவாயு காற்றை அடைகின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஸ்டார்ச்சு உணவைத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றன. காற்றிலுள்ள நைட்ரஜன் நைட்ரேட் உப்புகளாக மாற்றப்பட்டவுடன் அவற்றை உட்கொண்டு புரதத்தைத் தயாரிக்கின்றன. இவ்வாறு காற்றிலுள்ள தேவையான பிறவாயுக்கள் உப்புகளாக மாற்றப்பட்டு உயரினங்களை அடைந்து அவற்றின் உடம்பை உருவாக்கிப் பின் உயிரினங்கள் அழியும் பொழுது மீண்டும் ஒரு பகுதி காற்று மண்டலத்தை வந்தடைகின்றன. இவ்வாறு காற்று மண்டலம் உயிரினங்களுக்குத் தேவையான வாயுக்களை அளிக்கக்கூடிய வாயு சேமிப்புக் கிடங்காக உள்ளது. இவ்வாறு வளிமண்டலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பூமி தன் ஈர்ப்புச் சக்தியால் வளிமண்டலத்தைத் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரணாக வைத்துள்ளது.
5. தொலைத் தொடர்பு ஊடகம்:
சூரிய ஒளியின்அதிக அலை நீளமுள்ள ரேடியோ அலைகள் காற்றிலும் வெற்றிடத்திலும் பரவி தொலை த்தொடர்புக்கு நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
6. ஒலிபரப்பும் ஊடகம்:
காற்று மண்டலம் ஒலி (sound) பரவிச்செல்வதற்கு ஓர் ஊடகமாக உள்ளது. வளிமண்டலம் இல்லாவிட்டால் ஒலியைக் கேட்க முடியாது. வெற்றிடம் ஒலியைக் கடத்தாது. வளிமண்டலம் இல்லாவிட்டால் காற்றழுத்தமும் இராது.
7. வெப்பப் பாதுகாப்பு உறை:
காற்று மண்டலம், வெப்பம் தரவல்ல கீழ்ச் சிகப்புக் கதிர்களைப் (Infra Red Rays) பூமிக்கு அனுப்பி, தேவையான வெப்பத்தை அளித்து உயிரினங்களைப் பாதுகாக்கிறது.
இவ்வாறு ஒருபாதுகாப்பான வளிமண்டலத்தை உயிரினங்கள் வாழ அமைந்துள்ளதை இறைவன் தன் வசனத்தில்குறிப்பிட்டுள்ளான்.
இனி பருவக்காற்றுகள், சூல்கொண்ட மேகங்கள், மழை, இடி மற்றும் மின்னல் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் அல்குர்ஆன் வசனங்களை அறிவியல் உதவியுடன் ஆராய்வோம்.
1. பருவக் காற்றும் மழையும்:
பருவக்காற்றை அனுப்பித் தூய்மையான நீரை மழை மேகங்களிலிருந்து பொழியச் செய்வதைப் பற்றிக்கீழ்க்காணும் அல்குர்ஆன்
வசனங்கள் விளக்குகின்றன.
“இன்னும் அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்
மேலும் (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்” - (அல்ஃபுர்கான் - 25: 48)
“இன்னும் காற்றுகளைச் சூல்கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழைபொழிவித்து அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (அல்ஹிஜ்ர் - 15 : 22)
மழையைத் தன்னுடைய கிருபை (அருட்கொடை) என்று உவமையாகச் சொல்லி மழைநீரை உலகுயிர்க்கெல்லாம் உயிர்நீர் என்பதை இறைவன் உணர்த்துகிறான். அவனது கிருபைக்கு முன்னே பருவக்காற்றுகளை நன்மாராயமாக அனுப்புகின்றான். பருவக்காற்றுகள் சூல்கொண்ட மேகங்களை இழுத்துச்சென்று எல்லா இடங்களிலும் பரவலாக மழையைப் பெய்விக்கின்றன. இந்தியாவில் வீசக்கூடிய பருவக் காற்றுகளை நாம்அறிவோம். வடகிழக்குப் பருவக்காற்று இந்தியாவின் வடகிழக்கிலிருந்து கருமேகங்களை இழுத்து வந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரமுள்ள மாநிலங்களுக்கு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்விப்பதையும், தென்மேற்குப் பருவக்காற்று இந்துமாக்கடலின் தென் மேற்கிலிருந்து கருமேகங்களைச் சுமந்துவந்து மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவிப்பதையும் நாம்அறிவோம். இவற்றைக் குறித்தே இறைவன் மழைக்கு முன்னே நன்மாராயமாக காற்றுகளை அனுப்பி வைக்கிறேன் என்று கூறுகிறான்.
மேலும்“வானத்திலிருந்து தூய்மையான நீரை இறக்கி வைக்கிறோம்” என்று இறைவன் கூறுகிறான். மழைநீர் தூய்மையானது என்பதைஅறிவியல் ஆய்வின் மூலம் அறிகிறோம். இது வாலை வடிநீருக்கு ஒப்பானது. மழைநீர் தரையை அடையும் வரை அதன் தூய தன்மையை இழக்காது. இதுபோல புனித மக்காவில் புனித கஃபாவை ஒட்டியுள்ள வற்றாத ஜம்ஜம் நீரூற்றிலிருந்து பெறப்படும் ஜம்ஜம் நீர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத தூய தன்மையுள்ள, நோய்தீர்க்கும் மருந்தாகவும் அமைந்துள்ளது. ஜம்ஜம் நீரின்இச்சிறப்பிற்குக் காரணம் அதில் கரைந்துள்ள தனிமங்களின் அளவு விகிதமே என்கிறது அறிவியல் விளக்கம். புனிதப் பயணம்மேற்கொள்ளும் ஹாஜிகள் ஜம்ஜம் நீரை அருந்தி இறைவனது கிருபையைப் பெறுகிறார்கள்.
அடுத்து, மழைநீரை நாம் சேமித்து வைப்பதில்லை என்பதையும் தன் வசனத்தில் (15:22) சுட்டிக்காட்டுகிறான். நீர்ப் பற்றாக்குறை காலம் வரும் என்பதை முன்னறிவிப்பாகச் சொல்லும் இறைவன் நீரைச் சேமிக்க வேண்டும் என்றும்
இறைவன் எச்சரிக்கிறான். “ஜக்காத் (தர்மம்) கொடுப்பதை மக்கள் நிறுத்திவிட்டால் வானிலிருந்து மழை வீழ்வதை அது தடுத்து நிறுத்தாமல் விடாது. விலங்குகளின் பொருட்டாலன்றி மழை மீண்டும் ஒருக்காலமும் பெய்யாமல் போய்விடும்” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (இப்னு மாஜா)
2. மேகக் கூட்டங்கள், மழையின் பனிக்கட்டி, இடிமற்றும் மின்னல்:
அடுத்து வளிமண்டலத்தில் மழையைப் பெய்விக்கும் மேகக்கூட்டங்கள் எவ்வாறு உருவாகின்றனவென்னும், பனிக்கட்டி, இடிமற்றும் மின்னல் எவ்வாறு தோன்றுகின்றன வென்றும் இறைவன் கீழ்க்காணும் வசனங்களில்குறிப்பிட்டுள்ளதை அறிவியல் துணை கொண்டு விளக்கமாக ஆராய்வோம்.
“நபியே நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் (அதை ஒன்றின் மீது ஒன்று சேர்த்து)அடர்த்தியாக்குகின்றான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்கள்; இன்னும். அவன் வானத்தில் மலை(களைப் போன்ற மேகக் கூட்டங்)களிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத்தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.” (அந்நூர் - 24: 43)
“அவன் எத்தகையவனெனின் அச்சத்தையும் ஆதரவையும்தரக்கூடிய நிலையில் மின்னலை ‘அவன் தான் உங்களுக்குக் காட்டுகிறான் கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்”. (அர்ரஃது - 13 : 12)
மழையைப்பொழிவிக்கும் ஒருவகையான மேகத்திற்கு குமுலோனிம்பஸ் மேகம் (Cumulonimbus cloud) என்று பெயர். இது சாதரணமாக விண்ணில் வெண்பஞ்சுக் கூட்டத்திரள் போல் இருப்பதை நாம் காணலாம். இது 2 கி.மீ. முதல் 6 கி.மீ. வரை (Troposhphere layer of Atmosphere) வியாபித்துள்ளது இம்மேகங்கள் மழையை மட்டும் தருவதில்லை; பனிக்கட்டி மற்றும் மின்லையும் தோற்றுவிக்கின்றன என்பதை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்கள்.
முதலில் குமுலோனிம்பஸ் மேகங்கள் சிறுசிறு துண்டுகளாகத் தோன்றிப் பின்னர் அவை ஒன்றாகஇணைந்து பெரிய மேகத்தைத் தோற்றுவிக்கின்றன. பின்னர் அதிக அளவில் மேகத்தின் மையப் பகுதியில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு குவிந்து செங்குத்தாக மலைபோல் வளர்கிறது. இவ்வாறு குளிரான பகுதியை அடையும் பொழுது மழைத் துளிகளாகவும் (Water droplets) ஐஸ்கட்டியாகவும் (Hail) மாறுகின்றன. நீர்த்துளிகளும், ஐஸ்கட்டிகளும் மேலும் கீழும் மேகத்தினுளே சுழல்கின்றன (Swirlup) அவைகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதால் அவைகளில் நிலை மின்னோட்டம் உண்டாகிறது (They become charged with static Electricity) மின்சாரம் வெளியே கடந்து செல்ல வழியில்லாமல் அங்கேயே திடீரெனக் கண்ணைப் பறிக்கும் மின் ஒளிப்பிழம்பாக வெளிவருகிறது. இதனால் ஏற்படும் வெப்பம் சுற்றியுள்ள காற்றைத் திடீரென விரிவடையச் செய்வதால் இடிமுழக்கம் ஏற்படுகிறது (Thunder). இவ்வாறு பனிக்கட்டி (Hail) மின்னல் உருவாக முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
மேலே சொல்லப்பட்ட அறிவியல் விளக்கத்தைத் தான் திருக்குர்ஆன் வசனத்திலும் கண்டோம். அதாவது மேகங்கள் ஒன்றின் மீது ஒன்று இணைந்து பெரிய அடர்த்தியான மேகத்தை தோற்றுவிக்கின்றன வென்றும் அதன் நடுவிலிருந்து மழைவெளியாகிற தென்றும், பனிக்கட்டி மின்னலுக்குக் காரணமாக அமைகிறது என்றும் அல்குர்ஆன் வசனம் அறிவிக்கிறது.
இறைவன் தன் வசனத்தில் மழையைக் ‘கிருபை’ என உருவகப்படுத்தியுள்ளது போல பனிக்கட்டியாக உறைந்த கனத்த மேகத்தை ‘மலை’ என வர்ணித்துள்ளான். இறைவனது வசனத்தில் ‘அச்சத்தையும ஆதரவையும்தரக்கூடிய நிலையில் மின்னலைக் காட்டுகிறான்’ என்று சொல்லப்பட்டுள்ளது. மின்னலைத் தொடர்ந்து வரும் இடி (Thunder) பூமியில் விழும் பொழுது அதன் அச்சத்தை (பாதிப்பை) நாம் அறிவோம். ஆனால் ஆதரவு தரக்கூடிய நிலையில் மின்னல் எவ்வாறு அமைந்துள்ளது? மின்னல் மின்னுவதைக் கண்டால் மழைவரும் என்ற ஆறுதல் அதன் மீது ஆதரவு வைக்கின்றோம். அதுமட்டுமல்ல; மின்னல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மின்னல் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை (N2) நைட்ரேட் உப்பாகமாற்றுகிறது (Nitrogen Fixation). இந்த நைட்ரேட் உப்புகள் மழை நீரில் கரைந்து பூமியை வந்தடைகின்றன. இவற்றைத் தாவரங்கள் வேர்களின் மூலம் உட்கிரகித்துப் புரதத்தைத் தயாரித்து வளர்கின்றன. இதன் காரணமாகவும் ஆதரவு தரக்கூடிய நிலையில் மின்னலை இறைவன் வெளிப்படுத்துகிறான். இனி எதிர்காலத்தில் விரைவான அறிவியல் முன்னேற்றத்தால் மின்னலிலிருந்து மின்சாரத்தைப் பெற்று அதைச் சேமித்து மின்சாரத்தேவையைப் பூர்த்தி செய்யும் வழியையும் மனிதன் கண்டுபிடிக்கலாம்.
நன்றி:அறிவியல் வழிகாட்டி அல்குர்ஆன். தகவல் : ரஹ்மத் மைந்தன் பிகாம். திருச்சி