• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  ​ஞானத் துளிகள்


ஞானத் துளிகள்    

                                                                                        தொகுத்தவர்: - 

                                                                        திருமதி G.R.J. திவ்யா பிரபு  I.F.S.,சென்னை

 

  •     குடும்பஸ்தன் ஒருவனுக்கு ஆத்மசாதனங்கள் புரிவதற்கு ஏற்ற வசதிகள் வாய்ப்பது மிக துர்லபம்.  பெரும் பாலும் அவனுக்குக் குடும்ப வாழ்வு தடையாகவே வந்து வாய்க்கிறது.  பிணி, சோகம்,வறுமை, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் அபிப்ராயபேதம், கட்டுக்கடங்காதவர்களும் குறும்புக்காரர்களும் அறிவிலிகளும் ஆகிய மக்கள் -  இவைபோன்ற இடுக்கண்கள் பல இருக்கின்றன.
  •      உலக ஆசை சிறிதளவாவது ஒரு சாதகன் உள்ளத்தில்  இருக்குமாகில் அவன் ஆத்ம சாதனத்தில் முன்னேற்றமடைவதில்லை.
  •      மேலோனாக வெறும் வே­ஷம் போடுபவனுக்கும், எதிலும் சுயநலக் கணக்குப் பார்ப்பவனுக்கும் ஆத்மசாதனம் லபிக்காது.
  •      போகம் அதிகரிக்குமளவு யோகம் குறைந்து பட்டுப் போகிறது. பின்பு போகம் எப்பொழுதும் மனிதனைத் துன்பத்தில் கொண்டு சேர்க்கும்.
  •      சுவரெங்கும் கரி படிந்துள்ள அறையில் வசிக்கின்றவன் எவ்வளவு எச்சரிக்கையாயிருந்தாலும் அவன்மீது கொஞ்சம் கரிபடிந்துவிடும்.  உலகில் வசித்திருக்கிறவனுக்கு அப்படி ஏதேனும் ஒருவிதத்தில் இடையிடையே துன்பம் வரும்.  அதை தவிர்க்க அவனுக்கு இயலாது.
  •      “நீர் காலமெல்லாம் பிறருடைய வியவகாரங்களையும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவைப்பதிலேயே காலத்தைக் கழித்து வருகின்றீர்.  அது சத்கர்மமென்றாலும் இவ்வளவு தூரம் செய்தது போதும்; இனி அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு பக்தியை வளர்த்து வருவீராக”.
  •      குடும்பவாழ்க்கையில் ஒருவனுக்கு எப்பொழுதுமே தொல்லைகள் உண்டு. சில வேளைகளில் மனைவி அவன் சொன்னபடி கேட்பதில்லை.  அவனுக்குக் கிடைக்கிற சம்பளமோ வெறும் இருபது ரூபாய்.  குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்யக் கையில் காசு இல்லை.  மூத்த மகனைப்படிக்க வைக்கப் பணம் இல்லை.  வீடு பாழடைந்து கிடக்கிறது.  மழை பெய்யும் பொழுது கூரை ஒழுகுகிறது.  இத்தனை இன்னல்களுக்கிடையில் அவன் குடும்ப வாழ்க்கை நடத்த வேண்டியதாய் இருக்கிறது. 
  •      ஒருவ்ன் தன்மீது காமம் குரோதம் முதலியன ஆதிக்கம் கொள்ளாதிருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். 
  •     தான் செய்த பாபங்களைப் பற்றியே ஓயாது எண்ணிக் கொண்டிருப்பவன் மகாபாபியாகிறான்.  அவை யாவையும் மனதினின்று துடைத்துத் தள்ளிவிட்டு இறைவனை நினைப்பவன் தூயவன் ஆகிறான்.
  •      உலகத்தவருள் யாரேனும் ஒரு மனிதனுக்குக் கீழ்ப்பட்டு உத்தியோகம் பண்ணினால் அதற்கேற்றவாறு மனது மாசு படிகிறது.  இனி, நாலைந்து பேருக்குக் கீழ்ப்படிந்து சேவகம் பண்ணுபவனுடைய கதி என்னாவது?
  •      உலக வாழ்வு மிகக் கடினமானது. இப்புறம் திரும்பினால் ஒருவனுக்குத் தடியடி விழுகிறது; அப்புறம் திரும்பினால் செருப்படி விழுகிறது. எங்குத் திரும்பினாலும் ஏதேனும் ஒருவிதத்தில் உபத்திரவம் வருகிறது.  அத்தனை வித உபத்திரவங்களுக்கிடையில் சாதகன் ஒருவன் நல்வாழ்வு வாழ்ந்தாக வேண்டும்.
  •      மெய்யன்பன் ஒருவன்  ஆவலற்றவனாய் இருக்கிறான்.  இறை தனக்கு எதை அமைத்துத் தருகிறாரோ அதுவே தனக்கு முற்றிலும் பொருந்தியது என்னும் நம்பிக்கை அவனுக்கு இருப்பதால் அவன் கவலையற்று இருக்கிறான்.
  •      ஆத்ம சாதனத்தில் முன்னேற்றத்துக்குக் காமம் பேரிடைஞ்சலாயிருப்பதுபோன்று குரோதமும் பேரிடைஞ்சலாகிறது.  தடைபட்ட ஆசை குரோதமாக வடிவெடுக்கிறது.
  •      சாதனத்தின் ஆரம்பதசையில் ஒருவன் தான் செய்த பாபத்தைக் குறித்து
  •      வருந்துதல் போன்ற விசாரங்களில் ஈடுபடலாம்.  ஆனால் அதிவிரைவில் அவன் அவைகளை யெல்லாம் கடந்து தூயபக்தியில் ஈடுபடுதல் வேண்டும்.  பக்தி ஓங்கப் பெற்றிருக்கும் ஒருவன் உள்ளத்தினின்று பாப புண்ணியத்தைப் பற்றிய எண்ணங்களெல்லாம் அகன்று போகின்றன.
  •      வெட்கம், அச்சம், வெறுப்பு ஆகியவைகள் உள்ளத்திலிருக்கும் வரையில் ஒருவன் ஆத்ம சாதனங்களுக்கு உதவான், வெட்கம் முதலியவைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனுடைய திருநாமத்தை ஓதிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
  •      மக்கள் உலக வி­ஷயங்களைப் பற்றிப் பேசியது என் காதில் விழுந்தபோது அவைகளைக் கேட்கச் சகிக்க முடியாது நான் கண்ணீர் சிந்தியதுண்டு, என்றார் என் சற்குருநாதர்.

 

�G3h��x