• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  அறிவின் தலைவாயில் ஹள்ரத் அலிய் (ரலி)


அறிவின் தலைவாயில் ஹள்ரத்

அலிய் (ரலி)

நாயகப் பிரகடனம்


     மனிலிருந்து ஹஜ்ஜுக்கென புறப்பட்டபோது ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் ஹழ்ரத் காலித் (ரலி) அவர்களால் யமனில் சேமிக்கப்பட்ட வருவாயில் அண்ணல் எம்பெருமான் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்  அவர்களிடமிருந்து சேர்ப்பிக்கப்பட வேண்டிய ஐந்திலொரு பங்கையும் பெற்றுக்கொண்டு திரும்பினார்கள்.  பிரயாண இடை வழியிலேயே  விரைந்து சென்று முன்னதாகவே அண்ணலார் அவர்களைச் சந்திக்க ஆவல் கொண்ட அலீ (ரலி) அவர்கள் படையினரையும் உடைமைகளையும் ஒரு பொறுப்பாளரிடம் ஒப்படைத்து, தாங்கள் முன்னதாகச்சென்று விட்டார்கள்.


      படையினர் மதீனாவில் தங்கள் இல்லங்களை விட்டுப் புறப்பட்டு அச்சமயம் மூன்று மாதங்களாகி விட்டிருந்தன.  அவர்களின் ஆடைகளெல்லாம் மிகப் பழையனவாகி விட்டிருந்தன. ஹஜ்ஜுக்கென விழாக்கோலம் பூண்டிருக்கும் புனித நகருக்குள் புகும்போது அங்கிருப்போரின் பார்வையில் தாங்களும் பொலிவோடு தோன்ற அவர்களுக்கு ஆவல் தோன்றியது.  அவர்கள் அனைவருக்கும் போதுமான புத்தாடைகள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சேர்ப்பிக்கக் கொண்டு செல்லப்படும் உடைகளில் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  எனவே அவர்கள் அனைவரும் கூடி, பொறுப்பாளரையும் ஏற்கச் செய்து ஆளுக்கொன்றாய் அப்புத்தாடைகளை எடுத்து அணிந்து கொண்டனர்.


      அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து மீண்டும் படையினரை வரவேற்க நகர வாயிலுக்கு வந்த அலீ (ரலி) அவர்கள் படையினரின் தோற்ற மாறுதலைக் கண்டு வியப்படைந்தார்கள்.  பொறுப்பாளரிட மிருந்து விபரமறிந்துக் கொண்ட அவர்கள் படையினரின் நடவடிக்கையில் வெறுப்படைந்தார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் சேர்ப்பிக்கப்பட வேண்டிய அமானிதத்தில் முன்னதாகவே எடுக்கப்பட்ட உடைகளனைத்தையும் மீண்டும் அவ்வுடமையோடேயே சேர்ப்பிக்கச் செய்தார்கள்.


      அதன் காரணமாக படையினரின் உள்ளங்கள் சோர்வு கொண்டன.  ஹஜ்ஜிலிருந்து திரும்புகையில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அது பற்றி பிராதுகள் கூறப்பட்டன.  அவற்றைத் தடுத்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அலீயின் செயல்முறைகளில் நீங்கள் குறைகாண வேண்டாம். இறைவனின் நியதிகளைப் பேணுவதில் அவர் முனைப்புடையவர்” என எச்சரித்தார்கள்.


      பின்னரும் சிலரின்  மனச்சோர்வுகள் விலகாதிருந்தன.  அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த ஹழ்ரத் புரைதா இப்னு ஹஸீப் (ரலி) என்ற தோழர் - ஹுதைபியாவில் பெருமானார்  அவர்களின் கரத்தில் பிரமாணம் செய்தளித்த பேறு பெற்றவர்.  தம் அனுபவத்தை விவரிக்கின்றனர்.


      “அலீ (ரலி) அவர்களைப் பற்றி நான் குறை கூறக்கேட்டு அண்ணலார் அவர்களின் முகமே சிவந்து விட்டது.  ‘புரைதா! அவரைப்பற்றி எவரும் ஐயங்கொள்ள வேண்டாம்.  அவர் என்னில் நின்றுமுள்ளவர்.  உங்களின் தலைவர்! என்னுடைய தலைமையை ஏற்ற ஒவ்வொருவருக்கும் அவர் தலைவராவார்’ என உரைத்தார்கள்.  அதற்குப்பின் அலீ (ரலி) அவர்களின் மாண்பும் மரியாதையும் என் உள்ளத்தில் மிகைத்து விட்டன.  மரணப் பரியந்தம் நான் அவரை நேசித்த அளவு மற்றெவரும் நேசித்திருக்க முடியாது”.


      அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் ஒப்படைப்பதற்காக யமனிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை அலீ (ரலி) அவர்கள் தங்கள் கூடாரத்தில் இருத்திக் கொண்டார்கள்.  அவரோடு ஓர் இரவையும் கழித்தார்கள்.அக்காலத்தில் தடுக்கப்பட்டிராத ஒரு வழக்கம் அது.அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள் பற்றி ஹழ்ரத் புரைதா அஸ்லமீ (ரலி) சுட்டிக்காட்டிய குறை அதுவே.  அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட அனுப்பப்பட்ட உடைமைகளில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் குடும்பத்தாருக் குரிய பங்கும் இருந்தது.


      பயண இடைவழியில் அப்பங்கிலிருந்து தம் தேவைக்குரியதை எடுத்துக்கொள்ள அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் முன் அனுமதியையும் அலீ (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.  அது ஹழ்ரத் புரைதா (ரலி) அவர்களுக்குத் தெரியாதிருந்தது.  அந்த ஓர் அடிமைப் பெண்ணையும் விட மிகுதமாகவே அலீ(ரலி) அவர்களுக்கு அவ்வுடைமைகளில் பங்கிருந்ததை தோழர்கள் யாவரும் ஏற்றனர்.


      அரஃபாவின் வெளியிலிருந்தே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் பிரிவினையைப் பற்றி சூசகமான அறிவிப்பை வெளியிட்ட வண்ணமே யிருந்தார்கள்.  ‘மீண்டும் இந்த இடத்தில் உங்களைச் சந்திப்பேன் என உறுதி கூறமாட்டேன்’ என அவர்கள் மீட்டிக் கொண்டிருந்த சொற்களை மலைகள், திடல்களனைத்துமே கேட்டனவே.  மனிதர்களின் செவிகள் கேட்கவில்லையா?.

 

    அலீ (ரலி) அவர்களின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்குப் பொருத்தக் கேடானவை என்பதில் ஐயமில்லை.


      வாணாளின் மாலைப் பொழுதை நெருங்கி விட்டிருந்த அம்மெய்ஞ்ஞானப் பரிதி தம் பிரிவுக்குப் பின் மீண்டும் சூழப்போகும் இருளையும் அவ்விருளினூடே இருளப்போகும் உலகையும் பற்றிய கவலை மிகக் கொண்டதாகவே இருந்தது.


      மதீனாவுக்குத் திரும்பும் பாதையில் கதீர்-அல்-கும் என்ற தலத்தில் யமன் வாசிகள் பிரிந்து செல்ல வேண்டியிருந்தது.  அவர்களுக்கு விடைதருமுன் முழுச்  சமூகத்தினரிடையேயும் மீண்டும் உரையாற்றிய அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் தடுமாறப் போகும் உலகம் தாங்கிக் கொள்ள இரண்டு பற்றுக் கோல்களை வெளியிட்டார்கள்.“மக்களே! நானும் உங்களைப்போன்ற ஒரு மனிதனே. ஆண்டவனின் அழைப்பாளர் வெகுவிரைவில் என்னிடம் வரக்கூடும்.  நானும் அவருடைய அழைப்பை ஏற்க வேண்டியிருக்கும்.  எனக்குப் பின்னர், இரண்டு பொருள்களைநான் உங்களிடையே விட்டுச் செல்கிறேன்.  ஒன்று  அல்லாஹ்வின் திருவேதமாகும்.  அதில் நேர்வழியும் பேரொளியும் உள்ளன.  அல்லாஹ்வின் திருவேதத்தை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்.  மற்றொன்று ‘அஹ்லெபைத்’ (எனப்படும் என் புனித குடும்பமாகும்). என்னுடைய வீட்டாரின் வி­ஷயத்தில் உங்களுக்கு இறைவனைக் கொண்டு நினைவூட்டுகிறேன்” என்று பேசிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.


      “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களையும் விட நான் முதன்மையானவன் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா?” என்று. மக்கள் அனைவருக்கும் ‘ஆம்’ என ஒருமித்து விடை கூறினார்கள்.  மீண்டும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.


      “நம்பிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் நான் அவரின் ஆன்மாவையும் விட முதன்மையானவன் அல்லவா?” என இரு முறை வினவினார்கள். 


      ஒரு சமயம் நான் நோயுற்றிருந்தேன். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைக் காண வந்து கொண்டிருந்தார்கள்.


      “இறைவா! இது எனக்கு மரணத் தருணமானால் நீ இதனை எனக்கு எளிதாக்கி வை.  அல்லது என் வாணாள் எஞ்சியிருக்குமானால் எனக்கு சுகத்தைத் தந்தருள் புரி.  அல்லது இது சோதனையானால் அதனைத் தாங்கும் பொறுமையை எனக்கருள் புரி” என நான் இறைஞ்சிக் கொண்டிருந்ததை அவர்கள் செவியுற்று விட்டார்கள். ‘நீர் எவ்விதம் இறைஞ்சினீர்?’ என அவர்கள் என்னிடம் வினவினார்கள். முன் போலவே கூறிக் காட்டினேன். அதனைக் கேட்ட

 அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்கள் காலைத் தட்டியவர்களாக,


      “இறைவா நீ இவருக்கு சுகத்தையே தந்தருள்வாயாக; நலமே புரிந்தருள்வாயாக” என்று பிரார்த்தித்தார்கள் - என அலீ (ரலி) அவர்களே அறிவித்தார்கள்.


      இப்போது அண்ணலார் அவர்களே நோய்ப்படுக்கையில்! அவர்களும் சுகம் பெற்றே எழ வேண்டும் எனவழுத்தாதார் எவரோ?


      ஹழ்ரத் அலீ(ரலி) அவர்களின் உள்ளமும் வழுத்திக் கொண்டிருந்தது.  உடலும் உழைத்துக் கொண்டிருந்தது.  அண்ணலாரைச் சுற்றியே! எனினும் தங்கள் ஏந்தலருக்கு அதுவே இறப்பின் தூது என மட்டும்அவர்கள் எண்ணியும் இருப்பார்களா?  ஆம், ஆம்’ என்றே அனைவரும்விடை கூறினர். அண்ணலார் அவர்கள் தம் அருகே நின்றிருந்த அலீ (ரலி) அவர்களின் கரம்பிடித்துயர்த்தியவர்களாக, “இறைவா! எவருக்கு நான் நேசனோஅலீயும் அவருக்கு நேசரேயாவார்.  அவர் நேசித்தவரை நீயும் நேசிப்பாயாக.  அவரைப் பகைத்தவரை நீயும் பகைப்பாயாக.  அவருக்குத் துணை புரிந்தவருக்கு நீயும் துணை புரிவாயாக. அவரைப் புறகணித்தவரை நீயும் புறக்கணிப்பாயாக.  அவரின் புறம் சத்தியத்தை நிலைப்படுத்துவாயாக”என இறைஞ்சினார்கள்.


      அண்ணலார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றைய சிற்றுரை அலீ (ரலி) அவர்களின் மாண்பை ஊழூழி காலமும் வளரப் போகும் தங்கள் வழிவாறுகள் உணரச் செய்யும் நாயகப் பிரகடனமாகவே இருந்தது.


      பின்னர் யமன் வாசிகள் விடைபெற்றுப் பிரிந்து சென்றனர். அலீ (ரலி) அவர்களோ மதீனாவின் பாட்டையில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களையே தொடர்ந்தார்கள். -தொடரும் தொலை மிகக் குறுகிவிட்டதை எண்ணியும் பாராதவர்களாக!


      மாநபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தடைந்து மூன்று மாதங்களும் நிறைவுறவில்லை; நோய்வாய்ப்பட்டார்கள்.  தலையில் வலி என்று துவங்கிய நோய் காய்ச்சலாய் வளர்ந்து அவர்களைப் படுக்கையில் கிடத்திவிட்டது. அவர்களின் அருகிருந்தே நலன் பேண வேண்டிய கடன் அலீ (ரலி) அவர்களுக்கு அதிகமேஇருந்தது.


      ஒரு சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லத்திலிருந்து வெளி வந்த அலீ(ரலி) அவர்களிடம் மற்ற தோழர்கள் நபிகளாரின் நிலைபற்றி வினவினார்கள்.  அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நலமடைந்து விட்டதாகவே அலீ (ரலி)அவர்கள் அத்தோழர்களுக்குப் பகர்ந்தனர். மாநபி  அவர்களின் மதி வதனத்தில்தாம் கண்ட தெளிவே அவர்களை அவ்வாறு கூற வைத்தது. அணையுமுன் ஒளிரும் அகலின் ஜோதியே தாம் காண்பதென அவர்கள் ஐயுறத் தேவையே அற்ற ஒரு கட்டத்தில் தான், ஹழ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைத் தனிமையில் அழைத்துக் கூறினார்கள், “ஆண்டவன் மீதாணையாக இன்னும் மூன்றே நாட்களில் நீர் அநாதையாகி விடுவீர்”என்று


      அப்துல் முத்தலிபுடைய குடும்பத்தவர்களின் மரணத்துக்கு முந்திய முகக்கலையை நான் நன்கறிவேன்”என அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் அனுபவத்துக்குச் சாற்றிக் கொண்ட பட்டயம் தகுமானதே! மிகச் சரியாக மூன்றாம் நாள் மாலை அண்ணலவர்களின் இகவாழ்வு நிறைவு கொண்டது.     


      மரணம் அனைவருக்கும் விதிக்கப்பட்டதே உண்மையானாலும். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தம் ஆன்மா இவ்வுலகைப் பிரிந்தஅன்றே ஹழ்ரத் அலீ (ரலி) அவர்களை அப்பாஸ் (ரலி) அவர்கள் அநாதை என கூறத் துணிந்த தென்னே புதுமை! மக்கமாநகரில் தந்தை அபூதாலிபை இழந்த போது அலீ (ரலி) அவர்களைத் தாங்கிடத் தோளிருந்தது.


      மதீனாவின் மண்ணறையில்  பெற்ற தாயை, ஃபாத்திமா பின்த் அஸதை இறக்கிய போதும் அலீ(ரலி) அவர்களை அணைக்க அன்புக் கரமிருந்தது.


      நற்றவத் தூதர், நாயகப் பெருவேந்தர் நபிகளார் தம் உடலின் அசைவுகள் ஓய்ந்தபோது உலகமே  அநாதையாகி நிற்க, அலீ (ரலி) அவர்களுக்கு மட்டும் இனி எந்தநாதியிருந்தது?


நூல் : ஸய்யிதுனா அலீ அல்ஹைதர் (ரலி)

நன்றி  ஆசிரியர் : எம்.எஸ். முஹம்மத்  தம்பி.  தொகுப்பு : ரஹ்மத் மைந்தன் B.Com திருச்சி

 

��$ #��x