• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  மகளிர் பக்கம்


மகளிர் பக்கம்                                                                                  நெடுந்தொடர் ....

     

நல்ல பெண்மணி


 

( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

பெயர் சூட்டுதல்

 

    குழந்தைகள் பிறந்ததுமே, ஒரு வாரத்திற்குள்ளேயே பெயரிடுவது இப்பொழுது வழக்கத்தில் இருந்துவருகிறது.  “பிள்ளை பிறந்த ஏழாம் நாள் அன்று, அதற்குப் பெயரிடுங்கள்! அதன் தலைமுடியை அகற்றுங்கள்! அகீக்கா கொடுங்கள்!” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறியிருக்கின்றனர்.  குழந்தைக்குப் பெயரிடத் தாமதிக்கும் போது,அதனை ஏதோ ஒரு பெயரைக் கொண்டு அழைக்க ஆரம்பித்து விடுவர்.  எனவே, ஏழாவது நாளுக்குமேல் குழந்தைக்குப் பெயரிடுவதைத் தாமதிப்பது நல்லதல்ல.


      தந்தையே குழந்தைக்குப் பெயரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், தந்தை இந்த வி­யத்தில் தாயின் விருப்பத்தையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.  தாய் தான் குழந்தையை அதிகம் பெயர் சொல்லி அழைக்கப் போகிறவள்.  தந்தை, தனக்குப் பிடிக்காத பெயரைப் பிள்ளைக்கு வைத்தால், தாய் தனக்குப் பிடித்த பெயரால் பிள்ளையை அழைக்க ஆரம்பித்து விடுவாள்.  தாய் வைத்த பெயரே நிலைத்து விடும்.  தந்தை வைத்தது மறைந்துவிடும்.  

 

    குழந்தைக்கு நல்ல பொருள் உள்ள அழகிய பெயர்களை இடுவது அவசியமாகும்.  “நிச்சயமாக, நீங்கள் மறுமையில் உங்களின் பெயராலும்,உங்கள் தாயின் பெயராலும் அழைக்கப் பெறுவீர்கள்.  ஆதலின் அழகிய பெயரிடுங்கள்!” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றனர்.  அழகான பெயர்கள் எவை, அழகற்ற பெயர்கள் எவை என்று அறிய ஆவலுறலாம். “நபிமார்களின் பெயர்களைச் சூட்டுங்கள்! அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான் என்னும் பெயர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்களாகும்.  ஹாரிஸ் (விவசாயி) ஹம்மாம் (தன்னடக்க ஆற்றல்உள்ளவன்) என்னும் பெயர்கள் உண்மைக்கும் எதார்த்த நிலைக்கும் ஏற்ற பெயர்களாகும்.  ஹர்ப் (போர்) முர்ரா (கசப்பு) ஆகியவை கெட்ட பெயர்களாகும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  இதிலிருந்து அறிவது, அவர்கள் நல்ல பொருள் உள்ள பெயர்களை வரவேற்றிருக்கிறார்கள்.  கெட்ட பொருள் உள்ள பெயர்களை வெறுத்திருக்கிறார்கள், சாதாரணப் பொருள்உள்ள பெயர்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதைத்தான். இதை மனத்திற் கொண்டு உங்கள் பிள்ளைகளுக்குப் பெயரிடுங்கள்! ஷாஹின்ஷா, மலிக்குல்மலிக் போன்ற பெயர்கள் விரும்பத் தகுந்தவை அல்ல. அவை அரசர்க்கு அரசர் என்று பொருள்படும். அவை அல்லாஹ்வுக்கே பொருத்தமான பெயர்களாகும்.  அப்துல் காதிர், அப்துல் ஹக்கீம் போன்ற பெயர்கள் விரும்பத் தகுந்தவை. ஏனெனில் அவை அல்லாஹ்வின் அடிமை என்று பொருள்படும்.  ஓர் இரகசியம் கூறட்டுமா? அப்துல் காதிர் என்னும் பெயரைப் பெற்றவர்களில் தாம் அதிகமானவர்கள் இறை நேசர்களாக இருந்திருக்கின்றனர்.  பாத்திமா என்னும் பெயரைப் பெற்ற பெண்மணிகளின் வயிற்றிலிருந்து தான் அதிகமான இறைநேசர்கள் பிறந்திருக்கின்றனர்.  எனவே உங்களின் ஆண்குழந்தைகளுக்கு அப்துல் காதிர் என்றும், பெண் குழந்தைகளுக்கு பாத்திமா என்றும் பெயரிடுங்கள்!


      அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் பெயர்களான முகம்மது, அஹ்மது என்பவற்றையும் சேர்த்து உங்கள் குழந்தைகளுப் பெயரிடுங்கள்! ஏனெனில், இந்தப் பெயர் உள்ளவர்களை அல்லாஹ் நரகிற்கு அனுப்புவதில்லை என்று கூறிகின்றனர். அழகான பொருள் உள்ள பெயர்களையும், அழகான பெயர்களையும் உங்கள் பிள்ளைகளுக்குத் தேர்ந்தெடுங்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அழகிய பொருள் உள்ள பெயர்களை அதிகம் விரும்பி இருக்கின்றனர். ஹுதைபிய்யா உடன் பாட்டில் சுஹைல் இப்னு அம்ரு  கையயழுத்திட வந்த போது அண்ணல் நபி  ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்  அவர்கள், அவரைப் பார்த்து, “உங்கள் காரியம் இலகுவாகி விட்டது” என்று கூறினர். அவர் பெயர் அப்பொருளைக் குறிப்பதாக இருந்தது.  ஒரு சமயம் அண்ணல் நபியவர்கள், “இந்த ஒட்டகத்திடம் பால் கறப்பவர் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டார்கள், ஒருவர் எழுந்து, “நான் வருகிறேன்” என்று கூறிக் கொண்டு வந்தார், “உம்பெயர் என்ன?” என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள்.  ‘யயீஷீ’ என்றார் அவர்.  அவருக்கு முன் பால் கறக்க முன்வந்த இருவரை‘ வேண்டாம்!’ என்று கூறிய அவர்கள், அவரிடம் “நீர் பால் கறந்து தாரும்!” என்றார்கள்.  அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர் பெயர் வாழ்பவர் என்று பொருள்பட்டதாகும்.அழகிய பெயர்களையே  அனைவரும் விரும்புகின்றனர்.  அழகிய பெயர் உள்ளவர்களை நேசிப்பதும், அழகிய பெயர் உள்ளவர்களை, அவர்களைச் சந்திக்கு முன்பே, அவர்களின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நேசிப்பதும் மனித இயல்பு.  எனவே, உங்கள் பிள்ளைகள் நேசிக்கும் பெயர்களையும், பிறர் நேசிக்கும் பெயர்களையும் உங்கள் பிள்ளைகளுக்கு வையுங்கள்! அவர்கள் தங்கள் பெயரைக்கொண்டு மகிழ வேண்டும், பெருமிதமுற வேண்டும்.  மெளலானா முகம்மது அலீ தம் பெயரைப் பற்றி பெருமித முறுவார்.  அல்லாஹ்வின் தூதர் பெயரும், அல்லாஹ்வின் தூதரின் மருகர் பெயரும் தம் பெயரில் இணைந்திருப்பதாக அவர் கூறுவார்.        (இன்னும் வருவாள்)