மாமறைக்கு மரியாதை
மகான் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின்
ஹத்யா ஷரீப் நூலிலிருந்து.....
குர்ஆன் ஷரீபை பருவமடைந்த ஆண் பெண்கள் ஒலுவில்லாமல் தொடுவது ஹராமாகும். குர்ஆனும் அதோடு கூடியவிரிவுரைகளும் ஒன்றாகச் சேர்ந்திருந்து விரிவுரையின் அளவு குர்ஆனின் அளவைவிட கொஞ்சமாவது கூடுதலாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தால் ஒலுவில்லாமல் தொடலாம். குர்ஆன் ஷரீபை தரையிலிட்டு காலுக்குச் சமமாக வைத்துக்கொண்டு சில அரபு நாடுகளில் ஓதிக்கொண்டு இருக்கிறார்கள். இது அறியாமையின் காரணமாகச் செய்யப்படும் பெருந்தவறாகும். அதுபோலவே குர்ஆன் ஷரீபை ஓதிக் கொண்டு இருப்பவர்களுக்கு முன்புறம் உட்காராமல் பள்ளி வாசலில் முன் வரிசையில் அல்லது தமக்கு முன்னால் யாரும் உட்காராத வகையில் இருந்து ஓதுவதும், ஜும்ஆ அன்று மஸ்ஜிதில் ஒருவருக்குப்பின்ஒருவர் இருக்கும்போது குர்ஆன் ஓதுகிறவர்கள் இதனை கவனித்துச் செயல்பட வேண்டியதும்அவசியமாகும்.
இன்னும் ஒருமுக்கிய விஷயம்; அதாவது :-
நாம் எச்சிலைஅருவருப்பாகக் காண்கிறோம். ஒரு மனிதனுடைய எச்சில் நம்மீது படுவதையோ அல்லது ஒருவர் எச்சிலை நம்மீது தடவுவதையோ நாம் அனுமதிப்பதில்லை. இவ்வாறிருக்க குர்ஆன் ஷரீபின் தாள்களைப் புரட்டும்போது நமது விரலை எச்சிலில் துவைத்து அதன்பின் பக்கங்களைப் புரட்டுகிறோம். இது குர்ஆனுக்குச் செய்யப்படும் அவமதிப்பாகும். இது அல்லாமல் அந்தப் பக்கங்களின் விளிம்பு சீக்கிரம் கெட்டுக் கிழிந்து போவதற்கும் ஏதுவாகும். பக்கங்களைப் புரட்டுவதில் சிரமமிருந்தால்அதற்குச் சரியான முறையாவது :-
ஒவ்வொரு பக்கத்தின் மேல் புறத்தின்ஓரத்திலிருந்து விரலை வைத்து கீழ்ப்புறம் ஓரம்வரை ஒரு கோடு கிழித்தாற்போல்இழுத்துவிட்டு மறுபக்கத்தைப் புரட்டினால் இலகுவாகப் புரட்ட முடியும். எச்சிலைத் தொட வேண்டிய அவசியமே இல்லை, எவ்வளவு மட்டமான காகிதமாக இருந்தாலும் காகிதங்கள் இலேசாகப் புரண்டுவிடும். இனி குர்ஆன் ஷரீபை முத்தமிடுவதையும் கண்ணில் ஒத்திக்கொள்வதையும் சில வஹ்ஹாபிகள் தடை செய்தாலும் அது சுன்னத் வல்ஜமாஅத்தின்படி குர்ஆனை கெளரவிக்கும் அழகான செயல்களாம்.
celXy