• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  அழகிய முன்மாதிரி

அழகியமுன்மாதிரிஆனால்குன்- மாதிரி

 

 

அண்ணல் நபிகள் ஓர்

அழகிய முன்மாதிரி

யாருக்கு முன்மாதிரி?

எவருக்கு முன்மாதிரி?

மனிதர்களுக்கு மட்டுமா

ஓசையில்லாமல் பூக்கும் பூக்களுக்கு

மென்மையில் - நளினத்தில்

வாசத்தில் - வசீகரத்தில்!

மலர்களுக்கு மட்டுமா?

ஆகாயம் அதிராமல் - மேகத்தைக் கூட

கலைக்காமல் மெல்ல மெல்ல நடக்கும் நிலவுக்கு!

ஒளியில் - வடிவில் - முழுமையில் -

நட்சத்திரங்களை அரவணைத்து நடக்கும்

அகலாத நட்பில்!

நிலவுக்கு மட்டுமா?

பூமிப் பந்தை

மூன்று பாகம் விழுங்கிப் படுத்திருக்கும்

கடலுக்கும்!

ஆழத்தில் - அறியமுடியாத மர்மத்தில்-

அரிய முத்துக்களை அள்ளி இறைப்பதில்

அலைக் கையால் ஆசையாய் அழைப்பதில்!

அண்ணல் நபிகள் யார் மாதிரி?

ஆதம் (அலை) மாதிரியா?

சுவனத்தில் விலக்கப்பட்ட கனியின்

வேடிக்கையில் வீழ்ந்தது அவர்கள் நெஞ்சம்!

 

மிஃராஜ் இரவில் கள்ளும் பாலும் கண்ணியமாய் சமர்ப்பிக்க 

கள்ளைத் தள்ளி, பாலைப்பருகி,

அனுமதிக்கப்பட்டதை

அனுபவிக்க மறுத்தது

அண்ணலாரின் நெஞ்சம்!

அருமை நபிகள் ஆதம்நபி மாதிரியா?

தப்பிக்கக் கப்பல் தந்தான் இறைவன்!

வழி தப்பியவர்களை தண்டிக்க

வேண்டுதல் நூஹு நபியிடமிருந்து!

அய்யகோ!

தாயிபில் தாஹா நபியயனும்

சத்தியக்கப்பல் இரத்தக்குளத்தில்!

வானவர் ஜிப்ரீலின் ஆவேசம்!

உம்மென்றால் போதும்
உடனடித்தீர்ப்பு - ஆனால்

நாயகத்திருமேனியில் இரத்தக்கசிவு

இதயத்திலோ ஈரக்கசிவு!

கண்ணீரில் நனைத்த தாயிப்

மன்னிப்பு மழையில் நனைந்தது!

தாஹா நபிகள் நூஹு நபிகள் மாதிரியா?

இப்ராஹீம் நபிகள்

சின்னச் சாமிகளைச் சிதைத்து

பெரியசாமியின் மீது போட்டார்கள் பழி!

இங்கோ

ஒரு கையில் சூரியன்: மறுகையில்
சந்திரன்

 

ஒக்கவே கொடுத்தாலும்

கொள்கை விட மறுத்த கோமான் நபிகள்

அவர்கள் மாதிரியா?
 

இறைவா!

உன்னை எனக்குக் காட்டு

கண்ணுக்கு இன்பம் ஊட்டு

மூஸா நபிகளாரின் மோகம்!

விளைவு - ஒளிவீச்சில் - ஒரு வீச்சில் -

தகர்ந்தது மலை!

கலைந்தது நபியின் நிலை!

ஆனால்

எவருக்கும் திறக்காத

இறைவனின் திருமுகத்திரை

எம்பெருமானுக்காகத் திறந்தது

வரவேற்று - இருக்கையோடு

உறவாடி - உரையாடி

பரிசுகள் பெற்று பாக்கியம் பெற்ற

வாச நபிகள்

மூஸா நபி மாதிரியா?

மாதிரிகள் பல இறைவன்

படைத்தான் - நினைத்த

மாதிரி இல்லை எதுவும்

அதனால்

எதுமாதிரியுமில்லாத

புதுமாதிரியாக - இந்த

முன்மாதிரியை அமைத்தான்!

நபிமார்களுக்கே

மாதிரியானார்கள் அவர்கள்!

ஒரு மாதிரி இருக்கும் நீ - அந்த ஆடகப்

பொன் மாதிரிதான் என பூரிக்கலாமா?

நமக்குக் கண்மாதிரி அவர்கள்!

உலகுக்கே கருமாதிரி!

விண்மாதிரி அவர்களின் விரிந்த அறிவு!

எண்மாதிரி அவர்கள் எல்லா மொழிக்கும்!

சொன்னால் - குன்மாதிரி குத்ரத்தின் மூலம் அவர்கள்.