வணக்கம்புரிய இன்னும் ஏன் சுணக்கம் ?
பறக்கு மினங்களோ பறந்தே வணங்கும்
பிறக்கு முயிர்கள் பிறப்பில்வணங்குமே
மார்க்க மிருந்தும்இம் மானிடவர்க்கத்தால்
யார்க்கும் உளபயன் யாது?
நலம்பெற வைத்திடும் நல்வணக்கம்நம்மைப்
பலம்பெற வைத்திடும் பக்குவம்நல்கும்
விடைதரும் நாளை விசாரணை நேரம்
தடைகளைப் போக்கும் தரம்
மனிதனும் ஜின்னும் மறையோனைவாழ்த்தி
புனிதமாய் மின்ன புலமையோன்நாட
இனிவரும் காலம் இழக்காது கையில்
கனியயன மார்க்கத்தைக் காண்
பயிர்க்குச் செலுத்தும் பலந்தரும்நீர்போல்
உயிர்க்குச் செலுத்தும் உயிரேவணக்கமாம்
இம்மை மறுமை இரண்டிலு மிவ்வண்ணம்
நம்மை உயர்த்தும் நலம்.
நின்று மரங்களும் நீள்வணக்கம்செய்யுமே
கன்றும் பசுவும் கனிவாய்க்குனியுமே
தின்று குடித்துத் தினமு முறங்குகின்ற
உன்றன் நிலையை உணர்
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம் (பாடசாலை) அபுதாபி(தொழிற்சாலை)