இறைவனும் நபி நேசன் தான் !
மெளலவி. என்.அப்துஸ்ஸலாம் ஆலிம் பி.காம். திருச்சி.
ஹிஜ்ரத் செய்து மதீனாவைஅடைந்ததும் அங்கு திரண்டிருந்த அன்ஸாரி ஸஹாபாக்கள் சந்தோத்தால் ஆரவாரம் செய்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்புகழ்ந்து வரவேற்புப் பாடல் பாடினர். விமரிசையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரவேற்றனர். பெருங்கூட்டம் கூடியது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் காண வந்த மக்கள் கூட்டம் கலையவேயில்லை.
அவர்களை விட்டுப் பிரிய அங்கு கூடியிருந்த யாருக்கும் மனம் வரவில்லை. அவர்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய அவா. நேரம் கடந்தது. பின்னர், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான்உங்களுடன் தானே இனி வாழப்போகிறேன். சென்றுவாருங்கள் எனச் சமாதானப்படுத்தி வழியனுப்பி வைக்க, கூட்டத்தினர்கலைந்தனர். செல்லும் போதும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடியபடி சென்றனர்.
ஹிஜ்ரத் செய்துவந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் வீட்டில் தங்குவது? எனும் சர்ச்சை எழுந்தது. நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகப் பார்த்து யாரையாவதுகுறிப்பிட்டால் மற்ற அனைவருக்கும் மனவருத்தம் வரும். எல்லோரும் எம்பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும் என நினைப்பார்கள். எவ்வளவு பெரிய பேறு! அப்படி நினைக்கத்தான்வேண்டும். அவ்வாறு ஆசைப் படுபவர்கள்தாம் உண்மையான அடியார்களாக இருக்க முடியும்.
நான் எனதுஒட்டகத்தின் கயிறை அவிழ்த்து விடுகின்றேன். அது யார் வீட்டில் சென்று நிற்கிறதோ அங்கே தங்குகிறேன் என்பதாக இதற்கோர்தீர்ப்புத் தந்தார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒட்டகையின் கயிறு அவிழ்த்து விடப்பட்டது. ஒட்டகம் நடக்கத் தொடங்கியது. மதீனத்து வீதிகளில் ஒட்டகம் உலாவரத்தொடங்கியது.
ஒவ்வொரு அன்ஸாரி ஸஹாபியும்தத்தம் வீட்டு முன் நின்று கொண்டு, அந்த ஒட்டகம் தங்கள் வீட்டு முன் நின்றுவிடாதா? எனஏங்கித் தவித்தனர். ஒவ்வொரு வீட்டின்சொந்தக்காரரும் தங்கள் வீட்டை ஒட்டகம் கடந்ததும் நொறுங்கிப் போனார்கள். நடந்து கொண்டே இருந்த ஒட்டகம் வீடே இல்லாதவெட்ட வெளியயான்றில் போய் நின்றது. என்னஅற்புதம்.... அந்த இடம் இப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் ரவ்ளா ஷரீஃப். அவர்கள் வாழப்போகும் இடம் அதுதான் என்பதாக அல்லாஹ்அன்றே காட்டித் தந்தான். மீண்டும்கிளப்பிவிடப்பட்ட ஒட்டகம் நிறைவாக ஹள்ரத் அபூ அய்யூப் ரலியல்லாஹு தஆலா அன்ஹுஅவர்களின் இல்லத்தின் முன் போய் அமர்ந்து கொண்டது.
அபூ அய்யூப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்குப் பேரானந்தம்தாளமுடியவில்லை. உடனே ஓடிப்போய் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடமைகளை தங்கள் தலையில் வைத்துத்தூக்கிக் கொண்டு தங்கள் இல்லத்திற்கு ஓடினார்கள். ஒட்டகம் ஒரு நொடியில் தம் வீட்டைக் கடந்துவிடுமோ என்று பதறி ஓடிய அய்யூப்அன்ஸாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், தங்கள் தலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடை, மொத்த கஜானா தங்கள் வசம் கிடைத்து விட்ட பூரிப்பில் ஓடுவது போன்றகாட்சியைக் காட்டியது என வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
அபூ அய்யூப்அன்ஸாரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் இல்லத்தில்தான் தங்குவது என முடிவாயிற்று. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் அபூ அய்யூப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகமே தாங்கள் மாடியில் தங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் கீழே இருந்து கொள்கிறோம், என்றார்கள்.
இல்லை, தோழரே...என்னைப் பார்க்க நோயாளிகள், வயதானவர்கள் வருவார்கள். நான் மேலே தங்கினால் அவர்களுக்குச் சிரமமாகும். எனவே, நீங்கள் மாடியில்இருந்து கொள்ளுங்கள். நான் கீழேஇருக்கின்றேன் என்பதாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அவ்வாறேசெய்யப்பட்டது. அல்லாஹ்வின் அருமைத் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கீழே தங்க வைத்துவிட்டு அவர்களுக்கு உயரத்தில்தங்குவதை நினைத்தாலே அபூ அய்யூப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உதறல்எடுத்தது. எனினும் எம்பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையை மீற முடியுமா? அவ்வாறே செய்யப்பட்டது.
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கீழிருக்க, மாடியில்அபூ அய்யூப் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களுக்கோ, அவர்களின்மனைவி உம்மு அய்யூப் ரலியல்லாஹூ தஆலா அன்ஹா அவர்களுக்கோ தூங்க மனமில்லை. தூங்காமல் மாடியின் ஓர் ஓரத்தில் நின்றபடியேஇரவுகளைக் கழித்தனர். அறபகக்குளிருக்கு உருவகம் தேவையில்லை. போர்வையின்றி குளிரோடு போர்செய்யமுடியாது. இருக்கும் ஒரு போர்வையைக் கணவன்மனைவி இருவரும் போர்த்திக் கொண்டு தூங்காமலே இரவைக் கழித்தனர்.
நடந்து செல்லும் தடமும் நடப்பதால் மரத்தூளும்,தூசும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்தூக்கத்தைக் கெடுத்துவிடுமோ என்று
அச்சம். பதற்றத்தில் ஒரு குவளையைத் தட்டிவிட, அதிலிருந்த நீர் மாடியில் தளத்தில் சிந்தியது. மரத்தால் ஆனமேல் தளமாதலால், நீர் கீழே இறங்கி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிடுமோ எனப் பயந்த அபூ அய்யூப்ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இருந்த போர்வையையும் சிந்திய நீர் கீழே வடியாமல்இருக்கத் தாரை வார்த்தார்கள். நீரைஉறிஞ்சியது போர்வை. இரவை உறுஞ்சியதுவிடியல்.
இரவில் நடந்தநிகழ்வுகளை அபூ அய்யூப் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் இறைவனின் தூதர் கீழிருக்க நாங்கள் மேலிருக்க மனம் ஒப்பவில்லை. மேலும், அல்லாஹ்விடம்இருந்து இறங்கும் அருள் வஹீக்கு இடையூறாக - இடையில் இருக்கின்றோமோ என்றும் மனம்பதைக்கின்றது.
தங்களுக்கு மேல் நாங்கள்வசிப்பது மலையைத் தூக்கி நின்று கொண்டிருப்பது போன்ற சுமையைத் தருகிறது என்பதாகஎடுத்துக் கூறினார்கள். அல்லாஹ்வின்மாமறையைத் தாங்கமுடியாமல் மறுத்த மலை, ஹிரா குகையில் இருந்தபோது ரசூல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாமறையைத் தாங்கிஏந்தியபோது அவர்களையும் சேர்த்து எப்படி தாங்கிக் கொண்டது! அது ரசூல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பாதார விந்தங்களின் பரக்கத்.
இனிஇது தொடர்ந்தால், இனிவரும் இரவுகளையயல்லாம் இவர்கள் தூங்காமலே கழித்து விடுவார்கள் எனக் கவலை கொண்ட கண்மணிநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்கள் ஜாகையை மாடிக்கே மாற்றிக் கொண்டார்கள்.
அடுத்த சிலதினங்களில் ஒரு முதியவர் அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்க வந்தார். அவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் முன்பின் பார்த்ததில்லை. ஆனால், அவரது பெயரைச் சொல்லி அழைத்தார்கள். அந்த முதியவருக்கு சொல்லொணா ஆச்சரியம். பெயரைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், “எங்கே எனக்குச் சொந்தமான பட்டயம் என்று கேட்டார்கள் அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவருக்கு இன்னும் ஆச்சரியம் தாங்கவில்லை. நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சோதிப்பதற்காக,கொடுக்க வந்த பட்டயத்தை இடுப்பில் சொருகி மறைத்துக் கொண்டுவந்திருந்தார் அந்த முதியவர். முன் பின்அறியாத ஒருவரின் பெயரையும் கூறி, அவர் ஒளித்து வைத்திருந்தபட்டயத்தையும் கேட்கும் சக்தி அல்லாஹ்வின் தூதருக்கன்றி யாருக்குண்டு?
சரி, அது என்ன பட்டயம்? அதற்கொருவரலாறு இருக்கின்றது
சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி புரிந்த யூதர்களின் துப்பஉ மன்னர்களில் ஒருவர். நல்லவர். அறிஞர்களுக்கு மதிப்பளிப்பவர். அந்தக் கால யூதர்கள் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் தாம். நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் தவ்ராத் வேதத்தையும் ஈமான் கொண்டவர்கள்.
பின் வந்தகாலத்தில் தவ்ராத்தில் சொன்னபடி, ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால் தான் இஸ்லாத்தின்விரோதிகளாகி விட்டனர். நாம் சொல்லவரும்காலத்தில் யூதர்கள் நல்லவர்கள் தாம். அந்ததுப்பஉ மன்னர் எப்போதும் உலமாக்கள் புடை சூழத்தான் உலா வருவார். அவர்கள் சொன்ன சொல் மீறமாட்டார். அவ்வாறு அவர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது,ஒருநாள் யத்ரிப் (தற்போதைய மதீனா) நகரில் தங்கவேண்டியதாயிற்று.
பின்னர் அங்கிருந்துமன்னர் கிளம்பினார். ஆனால், மன்னருடன் வர உலமாக்கள் மறுத்து விட்டனர். மன்னருக்கு அதிர்ச்சி. தங்களுக்கு அளிக்க வேண்டிய கவுரவத்தில் ஏதேனும்குறை ஏற்பட்டுவிட்டதா? மரியாதைக் குறைவாக நடந்து கொண்டேனா?நான் செய்த தவறென்ன? என்னோடு தாங்கள் வரமறுப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது” என்று மன்னர் கூறினார். அதற்கு அந்த உலமாக்கள், “மாமன்னர் மன்னிக்க வேண்டும். உலமாக்களுக்கு மதிப்பளிப்பதில் அன்பும்உண்டு. ஆனால் இவ்வூரைவிட்டு எங்களால் வரஇயலாது.
நாங்கள் எங்கள் ஆயுள் வரை இங்கேயேதங்கத்தான் விரும்புகிறோம். ஏனெனில்,நமது தவ்ராத் வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது எனும்இறுதி இறைத்தூதர் வந்து வாழும் நகரம் யத்ரிப் (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் விஜயத்திற்குப் பின் அந்நகரைமதீனா என்று தான் அழைக்க வேண்டும் என்பது நபிமொழி.) என்பதை நாங்கள் இங்கு வந்ததும்கண்டு கொண்டோம். எனவே, இவ்வூரை விட்டுப் பிரிய எங்களுக்குமனமில்லை”. என்பதாகக்கூறினர்.
அது கேட்டு மகிழ்ச்சியும்நெகிழ்ச்சியும் அடைந்த துப்பஉ மன்னர் அங்கு தங்க விழைந்த சுமார் 400உலமாக்களுக்கும் மதீனாவிலேயே தனித்தனியாக வீடு கட்டித் தந்தார். மேலும் கூடுதலாக ஒரு வீடு கட்டி, அதனை உலமாக்களில் தலைமை யானவரிடம்ஒப்படைத்து, அவதரிக்கப் போகும் முஹம்மது நபிக்கு என்அன்பளிப்பாக அளித்துவிடும்படிக் கூறியிருக்கின்றார். அதற்கு சாட்சியாக அந்தப் பட்டயம் ஒன்றையும்மன்னர் எழுதிக் கொடுத்துள்ளார். இதுநடந்தது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர். தலைமை இமாமிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப்பட்டயம் வாரிசுகளின் கைகளில் மாறி மாறி நிறைவாக இந்த முதியவரின் கைக்குவந்தது.
இவர்கள் தாம் நம் முன்னோர்கள்நம்பிய உண்மை நபியா? என அறிந்து கொள்ளத்தான் அந்தப்பட்டயத்தை ஒளித்து வைத்துச் சோதனை செய்யப் பார்த்தார். ஆனால், அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் கேட்டுவிட்டார்கள். இதை எதிர்பார்க்காத - ஆனந்த அதிர்ச்சியில்இருந்த அந்த முதியவரும் அதை ஒப்படைத்தார். அந்தப் பட்டயத்தின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச்சொந்தமான வீடு எதுவெனத் தேடிப் பார்க்கையில் இன்னோர் அற்புதம் நிகழ்ந்தது.
இறைவனின்ஆற்றல் அளப்பரியது. துப்பஉ மன்னரால்ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடு, வேறெதுவுமல்ல. ஹள்ரத் அபூ அய்யூப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்குடியிருந்த அதே வீடுதான். நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்துக்குப் பின் குடியேறிய அதேவீடுதான். அபூ அய்யூப் அன்ஸாரி அவர்களது வீட்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் குடியேறவில்லை.
நபிகள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் தான் அபூ அய்யூப் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு வசித்து வந்திருக்கிறார்கள். அபூ அய்யூப்ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்னோர்கள் தாம் தலைமை இமாமின் வாரிசின் வழிவந்தவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களதுகட்டுப்பாட்டில் இருந்த வீடு காலப்போக்கில் அவர்களுக்குச் சொந்தமானதாக நினைத்துவாழ்ந்திருக்கலாம்.
இங்கே இறைவன்தன் நபிநேசத்தை எவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்கின்றான் பாருங்கள். தன் திருந்தூதர் வேறு யார் வீட்டில் தங்குவதும்தகுதியானதல்ல.... என எண்ணி, அவர்களுக்குச்சொந்தமான வீட்டிலேயே தங்கும்படியாக ஏற்பாட்டைச் செய்திருப்பது ஏற்றத்தக்கது. போற்றத்தக்கது. ஆம். இறைவனும் நபி நேசன்தான்!