மகளிர் பக்கம் நெடுந்தொடர் ....
நல்ல பெண்மணி
( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு- எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா)
|
தாய்ப்பாலின் தனித்துவம்
குழந்தை பிறந்ததும், அதன் செவிகளில் பாங்கும், இகாமத்தும் கூறவேண்டும். பாங்கை வலக்காதிலும், இகாமத்தை இடக்காதிலும் சொல்வது வழக்கமாகும். ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்ததும், அவர்களின் செவியில் பாங்கு கூறியவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களே ஆவர்.
குழந்தை பிறந்ததும் தாயிடம் ஊறும் முதல் பால் சீம்பால் எனப்படும். அது குழந்தையின் உடல் நலனிற்கு மிகவும் உகந்ததாகும். அதில் குழந்தையின் தேவைக்கு ஏற்ற அளவு மலம் இளக்கும்தன்மை இருக்கிறது. குழந்தைக்குத் தாய்ப்பாலேசிறந்த உணவாகும். மற்றப் பால்களெல்லாம் ஏதாவதுஒரு விதத்தில் குறையுள்ளவையேயாகும்.
அதனால்தான் மருத்துவ நிபுணர்களும், மனவியல் அறிஞர்களும், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலைவிடச் சிறந்த உணவு இல்லவே இல்லை என்றும்,சத்தும் மருந்தும் ஏற்ற அளவு கலந்திருப்பது தாய்ப்பாலில் தான் என்றும்,குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அதன் மூளை வளர்ச்சிக்கும்தாய்ப்பால் அவசியம் என்றும் அபிப்பிராயப்படுகின்றனர். குழந்தைக்கு ஏற்படும் நோய்களை எதிர்த்து நிற்கும் வலிமையைக் குழந்தைக்கு வழங்குவதுதாய்ப்பால்தான் என்றும், மூன்று வயதிற்குள் இறக்கும் குழந்தைகளில் தாய்ப்பால் குடிக்கும்குழந்தைகள் குறைவு என்றும், புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள்அதிகம் என்றும் உலக சுகாதார நிலைய நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தைக்குத் தாய் குறைந்தது ஆறு மாதங்களாவது பால் கொடுக்க வேண்டும்என்றும், இல்லையேல்அதற்கு இரைப்பைக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும், குழந்தைக்குத்தாய் பன்னிரண்டு மாதங்கள் வரையாவது பாலூட்ட வேண்டும் என்றும், பன்னிரண்டு மாதங்களுக்குள் பாலூட்டுவதை நிறுத்திக் கொள்வதால், உலகில் நாற்பது கோடிக் குழந்தைகள் போதிய சக்தியுடன் இருக்கவில்லை என்றும் உலகசுகாதார நிலைய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமியவிதிப்படி குழந்தைக்குத் தாய் இரண்டு ஆண்டுகள் பாலூட்டுவது விரும்பத் தகுந்தது. (முஸ்தஹப்)இரண்டரை ஆண்டுகள் பாலூட்டுவது கூடும். (ஜாயிஸ் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் பாலூட்டுவது தடுக்கப்பட்டது (ஹராம்). இரண்டரை ஆண்டுகள் பூர்த்தியாகாத ஒரு குழந்தை, தன் தாய் அல்லாத வேறொரு பெண்ணிடம பால் குடித்தாலும், அந்தப் பெண்ணிடமிருந்து பாலைக் கறந்து வாங்கி, அதனைக் குழந்தைக்குக் குடிக்கக் கொடுத்தாலும், அந்தப் பெண், அந்தக்குழந்தைக்குப் பால்குடித் தாயாகி விடுகிறாள். அவளின் கணவர், அந்தக் குழந்தைக்குத் தந்தை போலாகி விடுகிறார். அவளின் பெற்றோர், அவள் கணவரின் பெற்றோர், அந்தக் குழந்தைக்குப் பாட்டன், பாட்டிபோல் ஆகிவிடுகின்றனர்.
அவர்களின்மற்றப் பிள்ளைகள் அந்தக் குழந்தைக்கு சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் ஆகிவிடுகின்றனர். இவர்களுக்கிடையில் திருமணம்செய்து கொள்ளக் கூடாது. இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்,ஒரு குழந்தை பால் குடித்தால் இந்தத் தடை இல்லை.
குழந்தைக்குப் பெற்ற தாய் பாலூட்டுவதே பொருத்தமானதாகும். தாயின் பால் அவள் உடம்பில் ஓடும் உதிரத்தின் மறுஉருவாகும். அந்தப் பாலைத் தாய் ஊட்டும் போது, குழந்தைக்குத்தாய்மீது பாசம் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தஓர் ஆண்டிற்காவது தாய் குழந்தையை அணைப்பது, பாலூட்டுவது,முத்தமிடுவது போன்ற பாச உணர்வுள்ள செயல்களைச் செய்யாவிடில், குழந்தையின் மனவளர்ச்சி, பிற்காலத்தில் பாதிக்கப்படும்என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் இப்பொழுது, தாம் பெற்ற பிள்ளைகளுக்குப் பாலூட்ட விரும்புவதில்லை. குழந்தைக்குப் பால் கொடுத்தால், உடம்பின் அழகு குறைந்து விடும் என்றுஅவர்கள் நம்புவதே அதற்குக் காரணமாகும். குழந்தைக்குப்பாலூட்டுவதால், உண்மையில் தாயின் அழகு கூடுமே ஓழியக் குறையாதுஎன்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
குழந்தைக்குப் பாலுட்டுவதுதாயின் உடல் நலனிற்கு உகந்தது. குழந்தையின்உடல் நலனிற்கும் உகந்தது. இதனை மனிதர்களைத்தவிர்த்து மற்ற உயிரினங்கள் அனைத்தும் அறிந்திருக்கின்றன.
ஒரு குழந்தையின் வேகமாக வளர்ச்சிக்கு தாய்ப்பால் நான்கு மாதங்கள் வரைதான்போதுமான தாயிருக்கும். எனவே, குழந்தைக்குநான்கு மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுடன் உப உணவும் அவசியம். குழந்தையின் வயிற்றுக்கோ, உடம்பிற்கோ ஒத்துக் கொள்ளாது என்று அஞ்சி, உப உணவு கொடுப்பதைத்தள்ளிப் போடுவது நல்லதல்ல, பால்குடி மறக்கடிக்கப்பட்ட பிறகு, குழந்தைக்கு சத்தான உணவுகள் கொடுக்கத் தவறக்கூடாது. வளரும் நாடுகளில் ஓர் ஆண்டில் இறக்கும் ஒன்றரைக்கோடிக் குழந்தைகளில், முக்கால் கோடிக் குழந்தைகள் சத்தான உணவுஇல்லாமல், சத்தான உணவு இன்மையால் ஏற்படும் நோய்களாலும் இறக்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு இரண்டு கோடிக் குழந்தைகள்ஐந்து வயதை அடைவதற்குள் இறந்து விடுகின்றனர். முன்னேறிய நாடுகளில் 5 சதவிகிதக் குழந்தைகள் தாம் ஐந்து வயதை அடைவதற்குள் இறக்கின்றனர். முன்னேறிய நாடுகளில் இந்நிலை இருக்கக் காரணம், அங்குக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சத்தான உணவும், குழந்தைகளின் உடல் நலனில் எடுத்துக் கொள்ளப்படும் கவனமும் ஆகும்.
(இன்னும் வருவாள்)