ஸுஃபிகளின் பிரயாணம்!
இறைவனை நோக்கிய பிரயாணத்திற்காக தயாரானவர்கள்தாம் சூஃபிகள்- முரீதுகள் - ஸாலிக்குகள்.
அவர்களின் நோக்கம் புனிதமானது! அவர்களின் இலக்கு மிக உயர்வானது!
லாமக்கஸூத இல்லல்லாஹ் எனது இலட்சியம் அல்லாஹ்வைத்தவிர வேறொன்றும் இல்லைனயென அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தையும் ஒதுக்கி விட்டவர்கள் அவர்கள்.
அவர்களுக்கென தனிச் சட்டங்கள் உண்டு.
வெளிப்பிரயாணத்திற்கென பெட்டி படுக்கைகளை - வசதிகளை -ஆயத்தப்படுத்திக்கொள்வது போல, அகப்பிரயாணத்திற்கென பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் அந்தரங்க அழகிய குணங்களை தங்களுக்கென எடுத்துக் கொள்வார்கள்.
விமானப் பிரயாணத்தில் ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதுபோல, மோசமான - தீய குணங்களை - பாவ எண்ணங்களை இங்கேயே விட்டு விடுவார்கள். வெளிப் பிரயாணத்தில் உடலுக்கு ஊறுசெய்து பிரயாணத்தை தடை செய்யும் நோய்- துன்பம் - மழை - புயல் - கள்வர்கள் - எதிரிகள் இருப்பதுபோல, இதிலும் கல்பின் கால்களைப் பிடித்து இழுக்கும் தடைகள் ஏராளமுண்டு!
வெளிப்பிரயாணத்தில் அழகிய காட்சிகள் குறுக்கிடுவதுபோல இந்தப்பிரயாணத்திலும் மதிப்பு , புகழ்- போன்ற குறுக்கீடுகள் தோன்றுவதுண்டு.
இவைகளையயல்லாம் இறைவன் அருளாலும் - தளராத உள்ளத்தாலும் அவர்கள் கடந்து வரவேண்டும்.
தாய்மை அடைந்த ஒருத்தி, கரு உருவானதிலிருந்து கணநேரமும் விலகாமல் தன் குழந்தையின் மீது கவனம் வைத்திருப்பது போலவும், முட்டைகளை அடைகாக்கும் தாய்க்கோழி குஞ்சுகளின் மீதே தன் முழுசிந்தையையும் வைத்திருப்பது போலவும் எந்நேரமும் தன் உள்ளத்தை இறைவனை நோக்கியே முரீதுவைத்திருப்பார்.
தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தவர் முடிவில் இறைவனின் சன்னிதானத்தைஅடைந்தே தீருவார்!
இந்தப் பிரயாணத்தில் மிகமிக முக்கியமான விசயம் ஒன்று உண்டு! அதுதான் ஷைகாகிய ஞான குரு. அவரின்றி இந்தப் பிரயாணம் வெற்றிபெறாது.
இந்தப் பிரயாணத்திற்கு - குருதான் விசா கொடுப்பவர். குருதான் டிக்கட் பரிசோதகர். குருதான் வழிகாட்டி- குருதான் உடன் உழைத்துச் செல்லும் கைடு.
பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்தவர் வேறொரு ரகசியத்தையும் புரிந்து கொள்வார். அதாவது குருதான் பிரயாணம் - குருதான் வாகனம் - குருதான் பிரயாணத்தின் முடிவு. குருதான் எல்லாம் என!
சிறந்த அறிவு
அறிவுக்கு மட்டின்று. கரையின்று.அறிவு இவ்வளவேதான் எனவும் யான் எல்லாம் கற்ற பண்டிதனெனவும் கருதிப் பறை சாற்றுவதும் கல்வியின் குறைவுக்கோர் அடையாளமாகும்.
கலைகளோ பலவுள. ஒன்றை மட்டுமே சிறிதளவுக்கற்றுக் கண்டதையயல்லாம் குறை காண்பது குறையுடையோர் தன்மை. அறியாதவற்றிற்பிரவேசிப்பதும் அறியாதவற்றை அறிந்தவர்போல் விமர்சிப்பதும் செய்யத்துணிவதும் மானிடத்தன்மைக்கே முற்றும் முரணானதாகும்.
அறியாதவற்றில் தலையிட்டு மூளையைப்பழுதுபடுத்திக் கொள்ளாது அல்லாஹ் மிக அறிந்தவன் எனக்கூறி முடிவுக்கு வருவதே மிகச்சிறந்த அறிவாகும்.
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் எழுதிய குத்புகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) எனும் நூலிலிருந்து....