ஞானத்துளிகள்
தொகுத்தவர்: - திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை
சாதகன் ஒருவன் தன்இறையை எங்கு வைத்துத் தியானம் பண்ண வேண்டும்?
ஹிருதயகமலம் அதற்கு உற்ற இடமாகும். ஹிருதயத்தில் வைத்து தியானம் பண்ணு.
ஒருவன் எதைத் தியானிக்கிறானோ அதன் இயல்பு அவன் உள்ளத்துக்குவருகிறது.
விறகுத் தலையன் ஒருவன்வனத்தினின்று விறகு சுமந்து கொண்டு வெளியே வருவதை சாது ஒருவர் பார்த்தார். ‘உள்நோக்கிப் போ’ என்று மொழிந்துவிட்டு அவர் தம்வழியே போனார். அடுத்தநாள் விறகுத் தலையன் வனத்தினுள்மேலும் உள்நோக்கிச் சென்றான். சந்தனக் கட்டைகள்கிடைத்தன. சில நாட்களுக்குப் பிறகு மேலும்உள்நோக்கிச் சென்றான். தாமிரக் கட்டிகள் கிடைத்தன.
இன்னும் சில நாட்களுக்குப்பிறகு மேலும் உள்நோக்கிச் சென்றான். வெள்ளிக்கட்டிகள் கிடைத்தன. கொஞ்சநாளைக்குப் பிறகுஇன்னும் உள்நோக்கிச் சென்றான். பொன், வைரம் முதலியன கிடைத்தன.
மானுடா, நீ உன் மனத்தினுள் உள்நோக்கிச் செல்லுமளவு அரியபொருளைப் பெறுவாய்.
உடலில் கட்டி ஒன்றுகிளம்பியிருக்கும்பொழுது மனிதன் ஏனைய அலுவல்களைச் செய்து கொண்டிருந்தாலும் மனதில் ஒருபகுதிஅக்கட்டியினிடத்துச் செல்லும். சாதகன் ஒருவன்உலகக் கிருத்தியங்களைச் செய்துகொண்டிருப்பதற்கிடையில் மனதில் பெரும்பகுதியை இறைவனிடத்துத்திருப்ப வேண்டும்.
கடலின் அடிப்பகுதியிலிருக்கும் மணிகளை எடுப்பதற்கு ஒருவன் அதனுள் ஆழ்ந்து மூழ்கவேண்டும். அதே விதத்தில் தியானத்தில் ஒருவன்ஆழ்ந்து மூழ்க வேண்டும். மனதின் மேல்பரப்பில் அலைந்து கொண்டிருப்பதில் என்ன பயன்?
யோகி ஒருவனுடைய மனது ஆத்ம சொரூபத்திலேயே லயித்திருக்கிறது. அடைகாக்கும் பறவை வெறுமனே கண்ணை விழித்திருக்கிறது. ஆனால் அதன் நாட்டமோ முட்டையின் மீது. அங்ஙனம் யோகியும் கண் விழித்திருக்கிறான். ஆயினும்இறை திருஷ்டியில் அவன் மனது ஆழ்ந்திருக்கிறது. அவன் முகத்தைப் பார்த்தாலே அதன் அறிகுறி விளங்கும்.
ணி ஏகாந்தத்தில் தியானம்பழகினால் ஞானமும் வைராக்கியமும் விவேகமும் பக்தியும் உண்டாகும். தியானம் பழகுவதற்கு மாறாக உலக வியங்களில் ஈடுபட்டால் மனது கீழ்மையடையும். அதனிடத்துக் காமமும் காசு ஆசையும் அதிகரிக்கும். உலக வாழ்க்கையில் காமமும் காசு ஆசையும் தவிர வேறுஎதுவும் இல்லை.
உனது உள்ளத்தில் அரும் பொன் இருக்கிறது. ஆனால் நீ அதை இன்னும் அறிந்துகொள்ளவில்லை. மாசு படிந்து அது மறைந்திருக்கிறது. உள்ளத்தினுள் அது இருப்பதை நீ அறிந்து கொள்ளும்பொழுது உலக வியவகாரங்கள் தாமாகவே குறைந்துபோம்.
உறையூற்றிய பாலை அசையாது ஓரிடத்தில் வைக்காவிட்டால் நல்ல தயிர் உண்டாகாது. நீ அமைதியாக ஓரிடத்தில் ஏகாந்த வாசம் செய்யாவிட்டால்பக்தி உண்டாகாது. உறைந்த தயிரினின்று வெண்ணெய்யைக்கடைந்தெடுப்பது போன்று உன் உள்ளத்தினின்று இறை பக்தியைக் கடைந்தெடு.
ஒருவன் மனதில் உதிக்கும் ஆசைக்கேற்ற நிலையை அடைகிறான். இரண்டு நண்பர்கள் தெருவழியில் போய்க் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் உபதேசம் நடைபெற நண்பர்களில் ஒருவன் அதைக்கேட்க உட்கார்ந்து கொண்டான். மற்றவன் அங்குச் சற்று நின்று பார்த்துவிட்டு அதுதனக்கு உதவாது என்று போய்விட்டான். போனவன்ஒரு வேசி வீடு புகுந்தான். ஆனால் சிறிது நேரத்துக்குள்தான் செய்த பிழையை அவன் உணர்ந்தான். அந்தச்சூழ்நிலையில் அவனுக்கு அருவருப்பு வந்தது. என் நண்பனுடன் உபதேசம் கேட்பதற்குப்பதிலாக இத்தகைய பொல்லாத இடத்துக்கு வந்து சேர்ந்தேனே என்று தன்னை நொந்து கொண்டிருந்தான்.இனி, உபதேசம்கேட்க உட்கார்ந்தவனுக்குச் சிறிது நேரத்துக்குள் அதில் அருவருப்பு வந்தது. இம்மனிதன் எதையயதையோ பிதற்றுகிறான். என் நண்பனுடன் வேசி வீடு சென்றிருந்தால் நான் இன்புற்றுஇருந்திருப்பேனே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டிருந்தான். உபதேசங் கேட்க உட்கார்ந்திருந்தவனை சாத்தான் பிடித்துக்கொண்டுபோனான். வேசி வீட்டில் இருந்து வருந்திக்கொண்டிருந்தவனை அமரர் வந்து சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். அவன் இருந்தது வேசி வீட்டில். எனினும் அவனுடைய மனதுஉபதேசத்தை நாடிக்கொண்டிருந்தது. மற்றவன் இறைபுண்ணிய இடத்தில் அமர்ந்திருந்தான் எனினும் அவனது மனது விபசாரத்தனத்தில் மூழ்கி உழன்றுகொண்டிருந்தது. அவரவர் மனநிலைக் கேற்ற கதி மரணத்துக்குப் பிறகு வாய்த்தது.
அதிகாலையில் தியானம் பண்ணுவது மிக நன்று. சூரியோதயத்தின் பொழுதும் அஸ்தமனத்தின் பொழுதும்தியானம் பண்ண வேண்டும்.
தியானம் பண்ணிப் பழகுகிறவர்கள் பரம்பொருளை தியானம் பண்ணுவது நன்று. அது மனம்மொழிக்கு எட்டாத நிலை. அப்படித் தியானம் பண்ணுவதுமிகக் கஷ்டம்.
தாமிரப் பாத்திரம் ஒன்றை தினந்தோறும் துலக்க வேண்டும். இல்லையேல் அதில் களிம்பு ஏறுகிறது. மனம் தாமிரப் பாத்திரம் போன்றது. தினந்தோறும் தியானத்தால் அதைத்துலக்கி வைத்திருக்கவேண்டும்.
நான் கண்மூடி தியானம் பண்ணிய காலம் உண்டு. இப்பொழுதோ கண்மூடியிருந்தும் கண்திறந்திருந்தும்தியானம் பண்ணுகிறேன். பார்க்கும் பொருள்களெல்லாம்பரமனுடைய வடிவங்களாக எனக்குத் தென்படுகின்றன.
இறை தியானம் பண்ணுவதற்குப் பொருத்தமான இடம் எது?
ஹிருதயத்தில் தியானம் பண்ணலாம்.அது மிகப் பொருத்தமான இடம். எந்த இடத்தில் வைத்துத் தியானம் பண்ணச் சாதகன் ஒருவனுக்குத்தோன்றுகிறதோ அந்த இடத்தில் தாராளமாக தியானம் பண்ணலாம். ஏனெனில் பிரம்மம் இருக்கும் இடம் எது, இல்லாத இடம் எதுஎன்று பாகுபடுத்த முடியுமா?
நீரின் மேற்பரப்பில் நீந்துகிறவர்கள் ஆழமாக அடியிலிருக்கும் முத்தை எடுக்கமுடியாது. அவர்கள் ஆழ அடியில் மூழ்க வேண்டியதுஅவசியம். அங்ஙனம் சாதகன் ஒருவன் தன் மனதினுள்ஆழ்ந்து மூழ்க வேண்டும்.