வலிமார்களின் மனித நேயம்
கலீபா முஹம்மது காசீம் பெரம்பலூர்
ஒரு நாள் உழவர் ஒருவர் காஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரஹ்) அவர்களைஅணுகி அரசாங்க அதிகாரிகள் தம் நிலத்தைத் தம்மிடமிருந்து அநியாயமாக பகரித்துக்கொண்டார்களென்றும், அதனை அவர்கள் தலையிட்டு மீட்டுத்தரவேண்டுமென்றும், டில்லியிலுள்ள அவரின் மாணவர் குத்புத்தீன் (ரஹ்) அவர்களுக்குத் தமக்காகபரிந்து மடல் தீட்டின் அவர்கள் ஒரு நொடியில் அதற்கான ஆணையை சுல்தானிடமிருந்து பெற்றுவிடுவார்கள்என்றும், அழாத குறையாகக் கூறினார்கள். அதுவே அவருக்குரிய ஒரேநிலம் என்பதையும் அஃதின்றேல் அவரின் குடும்பம் பட்டினிகிடந்து வருந்தவேண்டும் என்பதையும்,அவரின் வாயிலாக காஜா அவர்கள் அறிய வந்ததும், அவர்களின்உள்ளத்தில் இரக்க நீர் சுரந்தது. சற்று நேரம்தலையைக் குனிந்த வண்ணம் இருந்த அவர்கள், ஆம்! நீர் கூறுவதுபோல்பரிந்துரை செய்து எழுதின், உம் அலுவல் முடிந்து விடும்தான். ஆனால் இறைவனின் நாட்டமோ வேறுவிதமாக உள்ளது. நானே சென்று அதனை உமக்கு மீட்டித்தர அல்லாஹ் நாடியுள்ளான். எனவே நாம் இருவரும் டில்லி செல்வோம் புறப்படும்!என்று கூறினார்கள். அது கேட்டு அந்த உழவருக்குஏற்பட்ட உவகைக்கு ஒப்பில்லை. தம் தந்தையார் டில்லி புறப்படத் தயாராகி விட்டதை அறிந்த அவர்களின் அருமை மைந்தர் பக்ருதீன் (ரஹ்) அவர்களை அணுகி அப்பா!சுல்தானிடம் எனக்காக பரிந்துரை செய்து, மண்டல கிராமத்தை எனக்கு மானியமாக பெற்றுத் தாருங்கள் என்று கூறினார்.
காஜா முயீனுத்தீன்சிஷ்தி (ரஹ்) அவர்கள் திடீரென டில்லி புறப்பட்டதால் தம் மாணவருக்குத் தெரிவிக்கவில்லை.எனவே அவர்கள் டில்லியின் அருகே வந்து கொண்டிருந்தபொழுது, அவர்களைக் கண்ட ஒருவர் குத்புத்தீன் (ரஹ்) அவர்களிடம்ஓடோடி வந்து அவர்களின் வரவை எடுத்துரைத்த பொழுது, அவர்களால் தம்காதுகளையே நம்ப இயலவில்லை, நடப்பது கனவா அல்லது நினைவா என்றுசற்று நேரம் திகைத்து அதன் பின் தெளிவு பெற்றுத்தம் ஆசானின் வரவை உடனே சுல்தானுக்கு தெரியப்படுத்தினார்கள். அது கேட்ட சுல்தான் மகிழ்ச்சி மீக்குற்று தம் ஆசானின்ஆசானை வரவேற்க தம் அமைச்சர் பெருமக்களுடன் கிளம்பி விட்டார்கள். அவரின் பின்னே டில்லி மாநகரமே திரண்டு சென்றது.
தம் ஆசானை நன்முறையில்வரவேற்றுத் தம் தவமடம் கொண்டு வந்து சேர்த்த குத்புத்தீன் (ரஹ்) அவர்கள் பின்னர் இருவரும்தனியே அமர்ந்திருக்கும் பொழுது, தம் ஆசானைநோக்கி ஷைகு அவர்களே! எவ்வித முன்னறிவிப்புமின்றி தாங்கள் திடீரென இங்கு எழுந்தருளிய
அலுவல் யாதோ என்று வினவினார்கள். அப்பொழுது அவர்கள், தம் அருகே இருந்த உழவரை சுட்டிக்காட்டி,இவருக்கு இங்கு சுல்தானிடம் ஓர் அலுவல் இருந்தது. அதன் காரணமாக நானும் இங்கு வந்தேன் என்று கூறினார்கள்.
இதற்காக தாங்கள்இத்துணை சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையே. தங்களின் மாணவர் ஒருவர் மூலமாக இச்செய்தியைத் தாங்கள் சுல்தானுக்குத் தெரியப்படுத்தின்அது முடிந்து விடுமே என்று கூறினார்கள்.
இதற்கு காஜா முயீனுத்தீன்சிஷ்தி (ரஹ்) அவர்கள் நீர் சொல்வது சரியாயிருக்கலாம். ஆனால் ஓர் இறை நம்பிக்கையாளர், வறுமையிலும், அவமானத்திலும்முழ்கி இருக்கும் பொழுதுதான் அவர் இறையருளுக்கு அண்மையிலுள்ளார். இந்த உழவர் என்னை அணுகித் தம் அவல நிலையை எடுத்துரைத்தபொழுது, சற்று சிந்தனையில் ஆழ்ந்த நான், அவருக்காக இறைவனிடம் இறைஞ்சினேன். ஆனால் பேரருளாளனாகிய இறைவனோ, ஒருவரின் துன்பத்திலும்,துயரத்திலும் பங்கு கொள்வது ஒருவகை வணக்கமேயாகும் என்று எனக்கு அறிவுறுத்தினான். எனவே அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நான் இப்பயணத்தைமேற்கொண்டேன் என்று பகர்ந்தனர். இதன் பின்என்ன? இச்செய்தியைக் குத்புத்தீன் (ரஹ்) அவர்கள் சுல்தானுக்குத்தெரிவிக்க, அடுத்த கணம் ஆவன செய்யப்பட்டது. அது கண்டு உழவரின் அகமும், முகமும் ஒருங்கு சேர்ந்து மலர்ந்தன.
காஜா தங்கியிருந்த தவமடத்திற்கு மக்கள் அணிஅணியாக வந்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். டில்லியிலுள்ள முஸ்லிம்களில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும்அவர்களைத் தரிசிக்க அந்த மடம் வந்து போயினர். ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் யார்? அவர்தான் ஷைகுல் இஸ்லாம் நஜ்முத்தீன் சக்ரா (ரஹ்) இதனை அறிந்த காஜாஅவர்கள், நஜ்முத்தீன் சக்ராவைக் கண்டுவர அவரின்இல்லம் சென்றனர். அப்பொழுது நஜ்முத்தீன் சக்ராகாஜா அவர்களை ஏறிட்டுப் பார்க்கவோ, முகமன் கூறி வரவேற்கவோ செய்யாதுதம்வீடு நிர்மாண வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அது கண்ட காஜா அவர்கள் அவரை அணுகி, என்ன நஜ்முத்தீன் சக்ரா! தாங்கள் மனம் நோகும்படி நான் ஏதேனும் தங்களுக்குத்தீங்கிழைத்து விட்டேனா? அல்லது ஷைகுல் இஸ்லாம் பதவி தந்த மயக்கத்தால்பழைய நட்பை அறுத்தெரிந்துவிட்டீர்களா? என்று வினயமாக வினவினர்.
காஜா அவர்களின்இச்சொல் அவரின் இதயத்தில் ஈட்டிப்போல பாய, தன்னுணர்வுப் பெற்று காஜா அவர்களை வரவேற்று, உபசரித்ததோடுதவறுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதன் பின் அவர் காஜா அவர்களை நோக்கி, நான் முன்பு போன்று தங்களின் மீது ஆழிய அன்புதான் கொண்டுள்ளேன். ஆனால் தங்களின் சீடர் குத்புசாஹிப் இங்கு இருக்கும்வரைஎனக்கு மதிப்பேது? நான் பெயரளவில்தான் ஷைகுல் இஸ்லாமாக இருக்கிறேன்என்று தம் மனக்குறையை எடுத்துரைத்தார்.
அது கேட்ட காஜாஅவர்கள் புன்முறுவல் தம் முகத்திலே தவழ, என்ன நஜ்முத்தீன், இதற்காகவா வருந்துகிறீர்கள்?விடுங்கள் உங்களின் கவலையை, நான் அஜ்மீர் திரும்பும்பொழுது உங்களின் கவலைக்கு காரணமான குத்பு சாஹிபையும், என்னுடன்அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.
காஜா அவர்கள் இவ்வாறுகூறியது நஜ்முத்தீன் சக்ராவின் வயிற்றில் பால்வார்த்தது போன்று இருந்தது. உடனே காஜா அவர்களைஉணவுண்டு விட்டுச் செல்லலாமென்று உபசரிக்க, காஜா அவர்களோ, மறுத்து தவமடம் மீண்டனர். உடனே குத்புத்தீன்(ரஹ்) அவர்களை அழைத்து உம்முடைய பேரையும், புகழையும்,பெருவாழ்வையும் கண்டு சிலர் புழுங்குகின்றனர். எனவே என்னுடன் அஜ்மீர் வந்து, என் ஆசனத்தில் அமரும். அப்பொழுது உமக்குஊழியம் செய்ய எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததாக இருக்கும் என்று கூறினர். அது கேட்டுப் பெரிதும் திடுக்குற்ற குத்புத்தீன்(ரஹ்) அவர்கள், காஜா அவர்களை நோக்கி தங்களின் முன் நிற்கக் கூடத்தகுதி பெற்றிராத இச்சிறியோனாகிய எனக்குத் தங்களின் ஆசனத்தில் அமர்வதற்கு அருகதை ஏது?தாங்கள் இட்ட பணியைத் தலைமேல் தாங்கிச் செயலாற்றக் காத்துள்ளேன் என்றுபணிவாகக் கூறினர். அடுத்த கணம் அவர்கள் தங்கள்ஆசானுடன் அஜ்மீர் புறப்படுவதற்கு ஆயத்தம் செய்யத் துவங்கிவிட்டார்கள்.
இச்செய்தி காட்டுத்தீபோல் நொடி நேரத்தில் டில்லி மாநகரம் முழுவதும்பரவியதும் மக்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கும், ஏக்கத்தற்கும் அளவில்லை. தலைவிரிகோலமாய்அவர்கள் தவமடத்திற்கு ஓடோடி வந்து அதனை அன்பு முற்றுகையிட்டனர். அவர்கள் சிந்திய கண்ணீர்த் துளிகள் தவமடத்தின் வாசற்படிகளைநனைத்தன. இச்செய்தி சுல்தானின் செவியில் பட்டதும்,அவரும் தவமடம் வந்து காஜா அவர்களை சந்தித்து அடிகளீர்! தாங்கள் குத்புசாஹிப் அவர்களை தங்களுடன் அஜ்மீருக்கு அழைத்துச் செல்லாதீர்கள். குத்பு சாஹிப் அவர்கள் டில்லி மாநகரம் தவம் செய்துபெற்ற நற்பேறு. அவர்களின் காலடி மண்ணே டில்லிமாநகர மக்கள் தங்கள் தலை மீது கொள்ளும் பூவாரம். அவர்களை எங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள். எங்கள் மீது இரங்குங்கள், இரங்குங்கள்! என்று நீர்மல்கும் கண்களுடன் வேண்டி நின்றார்.
அது கண்டு காஜாஅவர்களின் மனமும் இரங்கியது. தம் அருகே அமர்ந்திருந்தகுத்புதீன் (ரஹ்) அவர்களை நோக்கி பாபா குத்பு! நான் இங்கு குழுமியிருக்கும் ஆயிரமாயிரம்மக்களின் உள்ளங்களையும் புண்படுத்த விரும்பவில்லை. நீர் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு அறிவுரை, ஆன்மீக போதம் வழங்கி வாரும். இந்நகரை நான் உம்முடைய பாதுகாவலில் விட்டுச் செல்கிறேன்என்று அருள்வாய் மலர்ந்து விட்டு, அஜ்மீர் புறப்பட்டனர். அப்பொழுது மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் துக்கமும் போட்டியிட்டுக்கொண்டு மோதின. குத்பு அவர்கள்தம்முடனே இருக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சி! காஜா அவர்கள் தம்மைவிட்டுப் பிரியப் போகின்றார்களோ என்று துக்கம்! மேற்கூறிய நிகழ்வுகளை கவனிக்கும் பொழுதுஒருவரின் துன்பத்திலும், துயரத்திலும் பங்கு கொள்வதும், அவற்றை நீக்க ஆவன செய்வதும் ஒருவகை வணக்கமாவதோடு ஹக்கின் திருப்பொருத்தத்தையும் தேடித் தரவல்லதுஎன்பதை நாம் பாடமாகக் கொள்வோமாக.