படைப்புகள்! - பகுப்பாகும்
கவிஞானி G.S.T மஹ்பூபுசுப்ஹானி
மெய்ஞ்ஞானம் இறைவனுக்கு மிகவும்பிடித்தமானது தான். அவனது நெருக்கத்தைப் பெற்றுத்தருவதும் அதுதான்.
சராசரியான மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத சத்தியங்களை; இறை ரகசியங்களைக்காட்டித் தருவதும் அதுதான்.
தன்னால் தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களுக்கே அதன் சாத்தியங்களை இறைவன்சாஸ்வதமாக்குகிறான்.
அத்தகைய பெருவரம் பெற்றவர்கள் அரிதானவர்களாகவே அமைகிறார்கள்.
மனிதர்கள் அனைவருக்கும் மெய்ஞ்ஞானத்தை மறையவன் வழங்குவதில்லை.
அந்த நெருப்பைத் தாங்கும் தகுதியை அத்தனை மனங்களுக்கும் அவன் தந்துவிடுவதில்லை.
உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் மெய்ஞ்ஞானிகளாக - மஜ்தூபுகளாக இருந்தால், இந்த,உலகமும், வாழ்வியல் இயக்கமும் எப்படி இருக்கும்என்பதை எண்ணிப் பார்த்தால் இறைவனின் உள்நோக்கம் நம் உணர்வு நரம்புகளுக்குள் ஊடுருவுவதைஉணரலாம்.
ஒன்றானவன் இறைவன் என்றாலும், அவனது ஆற்றல் ஒன்று மட்டுமல்ல. அவன்தான் பேராற்றலின்,திவலைகளைத் தன் படைப்புகள் அனைத்திற்கும் பகிர்ந்தளித்திருக்கிறான்.
மெய்ஞ்ஞானத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும், அஞ்ஞானத்திலும்கூட அவனது பேராற்றலின் பிரதிபலிப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது.
உலக வாழ்க்கையைப் பல்வேறு தளங்களில் பங்கீடு செய்து கொள்வதற்கான வழிவகைகளை அவன் வகுத்துத் தந்திருக்கிறான். அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அவன் ஏற்படுத்திவைத்திருக்கிறான்.
பல்வேறு துறைகளை; பல்வேறு கலைகளை;பல்வேறு நிலைகளை வாழ்க்கையில் சுவைகூட்டுவதற்காக அவன் பகுத்திருக்கிறான்.
ஒற்றையடிப் பாதையிலேயே சதாகாலமும் பயணித்துக் கொண்டே இருந்தால்...ஒரே உணவையே நாள்தோறும் உண்ணும் நிலை அமைந்தால்... ஒரே செயலையே வாழ்நாளெல்லாம் செய்துகொண்டே இருந்தால் சலிப்புக்குள்ளும், விரக்திக்குள்ளும் மனம் விழுந்துவிடும்.
எத்தகைய உயர்ந்த செயலையும் ஒரு அளவுக்குமேல் நீட்டி நிலைக்க மனித மனத்தால்முடிவதில்லை.
அதனால்தான் விழிப்பிற்காகவும், உறக்கத்திற்காகவும் இரவையும் பகலையும் இறைவன் தந்திருக்கிறான். நாக்கு தன் உற்சாகத்தை இழக்கக்கூடாது என்பதற்காகஇனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, எரிப்பு, கசப்பு முதலானஅறுசுவை அறியும் உணர்வு நரம்புகளை அதற்குள் அமைத்திருக்கிறான்.
ஒவ்வொரு துறையிலும் பல்வேறு கிளைகளை அமைத்து வாழ்வியல் சோர்வுகளைத்தூர்த்திருக்கிறான்.
மனிதக் கண்கள் களைப்படையக் கூடாது என்பதற்காக பல்வேறு காட்சிகளை விரித்திருக்கிறான்.
பூக்களில்தான் எத்தனை வகைகள்; எத்தனை நிறங்கள்; எத்தனைமணங்கள்!
தாவர வகைகளின் தராதரங்கள்தான் எத்தனை; எத்தனை! அவற்றின்மருத்துவ குணங்கள்தான் எத்தனை; எத்தனை!
ஊர்வன; பறப்பன; நடப்பன முதலானவற்றில்தான் எத்தனை;எத்தனை வடிவ வேறுபாடு! செயல் வேறுபாடு! தன்மை வேறுபாடு!
ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் சலித்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒருவரைப் போல் மற்றவரைப் படைக்காமல் புறத்திலும் அகத்திலும் வேறுபடுத்தி; வேறுபடுத்தி படைத்திருக்கிறான்.
இவை அனைத்திலும் அறிவையும், ஞானத்தையும் அமைத்திருக்கிறான். பாமரர்,படித்தவர்; அறிவீனர், அறிஞர்;மடையர், மேதை; கவடர் அசடர்; நல்லவர், கெட்டவர்; விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி எல்லோராலும் இந்த உலகத்தை அவன் இயக்குகிறான்.
உலகச் சக்கரத்தின் ஒவ்வொருகம்பியாக ஒவ்வொருவரையும் அவன் இணைத்திருக்கிறான். பைத்தியங்களுக்குக்கூட அதில் இடம் தந்திருக்கிறான்.
வீணாக எதையுமே அவன் படைக்கவில்லை.
ஒருவருக்கு ஒருவரைப் படிப்பினையாக்கி பாடம்பெற அறிவுறுத்துகிறான்.
தடையில்லாத நடையை உலகச் சக்கரம் பெறவேண்டும் என்பதற்காகவே அணுக்களில்கூடஅவன் வேறுபாடு காட்டியிருக்கிறான்.
எந்தவொரு மனிதரும் மற்ற எந்தவொரு மனிதருக்கும் சமமாகவோ நிகராகவோ ஆவதில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனித் தன்மைகளை அவன்தந்திருக்கிறான்.
அதனால்தான் ஓர் எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு கருத்துக்களைஉருவாக்குகிறது.
ஒரே செயல் ஒவ்வொரு மனிதனிடத்திலும் வெவ்வேறு முகங்களைக் காட்டுகிறது.
ஒரு கரு ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு உருவங்களோடு வெளிவருகின்றன.
என்றாலும், சிறந்த மனிதர்களை அடையாளம் காட்டுவதற்காக நமது நெஞ்சுக்கு நேராகநெறிநீதிகளை அவன் நீட்டுகிறான்.
ஆசையோடு அதனை வாங்கி அப்படியே ஏற்று நடப்பவர்களை மனித மாணிக்கங்களாகஒளிவீசச் செய்கிறான்.
இறையருள் குவியும் அந்தத் தளத்தில் நின்று நிலைப்பவர்களின் நெஞ்சுகளுக்குள்நல்லறிவையும், ஞானத்தையும்நிரப்பி மனிதத் தகுதியை மகான்மியத் தகுதியாய் ஆக்கிவிடுகிறான்.
இப்படிப்பட்டவர்களையே தன் படைப்பின் வரிசையில் முன்னிலைப் படுத்துகிறான்.
என்றாலும், அத்தனை வரிசைகளையும் படிகளாக்கி அமைக்கப்பட்ட மேடையில் மெய்ஞ்ஞானிகளையேஅமரச் செய்து கவுரவப் படுத்துகிறான்.