ஹதீஸ் பக்கம்
மாநபிகள் மணிமொழிகள்
எச்சரிக்கை
கேட்பவரை விரட்டாதே. உன் விருந்தினரை, நீ கண்ணியப்படுத்து. அவர்களை நன்கு கண்காணித்துக்கொள். உன்னை அணுகிய இறை சோதனை மீது பொறுமையாக இரு. நல்ல (ஹலாலான)தை செலவு செய். உடன் இருப்பவனுக்கும் கொடு. உன் நண்பனை உற்சாகப்படுத்து. அவனுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடு. உன் தவறை நினைத்து வருந்து. உனக்கு கெடுதி செய்தவனுக்கும் நன்மையை நாடு. உள்ளதைக் (உன் ரிஜ்க்கை)க் கொண்டு போதுமாக்கிக்கொள்.உன்னை அனைத்துச் சோதனைகளிலிருந்தும், எல்லாப் பாக்கியங்களிலிருந்தும் எச்சரிக்கை செய்கிறேன்.
உங்களின் உடைகளை அசுத்தத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும். ஏனெனில் “சக்ராத்துல் மெளத்து“கடினமாக இருக்கும்.ஹராமானதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்; அது கப்ரில்வேதனையாக இருக்கும். உணவு உண்டால், தண்ணீர் குடித்தால், வாகனத்தில் ஏறினால் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறுங்கள்.
கடனைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதனால் சுதந்திர புருடனாக, மன அமைதியாக வாழ்வீர்கள். கடன் இரவில் கவலை; பகலில் கேவலம்.
உப்பில் ஒரு சிறிய கல்லை நாவில்வைத்து சுவைத்தபின், உணவை உண்ண ஆரம்பம் செய். உணவை முடிக்கும் போது நாவில் ஒரு சிறிது உப்புக்கல்லைச் சுவைத்து முடிக்கவும். இதில் மரணத்தைத்தவிர எழுபது வியாதிகளுக்கு நிவாரணம் உண்டு.
ஒருவன் பொய் அதிகம் பேசினால், அதை அவன் முகத்தில் அடிக்கப்படும். (மலக்குகள் அடித்து விடுவார்கள்) அவனின் உள்ளம் கறுத்து ஈமானை இழந்து விடும்.
என் உம்மத்தில் ஏழு(7) நபர்களுக்கு சுவனம் வாஜிபாகும்.
1. அதிகமாக நற்செயல்கள் புரியும் வாலிபன்.
2. இரகசியமாகத் தருமம் செய்பவன்.
3. தடுக்கப்பட்ட (ஹராமான) வைகளை விட்டவன்.
4. லுஹாத் தொழுகையை நிரந்தரமாக தொழுபவன்.
5. பொருளை இழப்பது அவனுக்கு இலகுவாகும், ஜமாஅத்தைவிடுவது கடினமாகும்.
6. இறையச்சத்தால் கண்ணீரை ஓட்டியவன்.
7.உலமாக்களை(ஆரிஃபீன்களை)க் கண்ணியப்படுத்துபவன்.ஏனெனில், மூமினை ஒருவன் பிரியப்பட்டால், அல்லாஹ் அவனை கண்ணியப்படுத்துவான்.
தொகுத்தவர்:கறீம் கான் பாகவி