அண்ணால் நபி அவர்களின் அற்புத வரலாறு
சிதைக்கப்பட்ட சடலங்களின் கோரக்காட்சியை கண்டார்கள் அண்ணலார்
அத்தியாயம் : 90 - இப்னு மீரான் ஹக்கிய்யுல் காதிரிய் -
சிதைக்கப்பட்ட சடலங்களின்
கோரக் காட்சியைக் கண்டார்கள் அண்ணலார்
அவரும் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைத் தேடிஅங்குமிங்கும் ஓடி இறுதியில் மிக கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தார். அவர்களின் புனித உடல் கண்டபடி வெட்டிசிதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
தூரத்தில்மரம் போல நின்று கொண்டிருந்த ஹாரித் (ரலி)அவர்களைக் கண்டுவிட்டார்கள். சட்டென அவர்களை அணுகிப் பார்த்தபோது அங்கே ஹம்ஸா(ரலி) அவர்களின் புனித உடல் அலங்கோலப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தார்கள். அவர்களின் நெஞ்சும் விம்மி விட்டது. கண்கள் சிவந்து போனது. அதில் கண்ணீரும் ததும்பிக் கொண்டிருந்தது.
உடனே ஹாரித் (ரலி) அவர்கள் அப்படியே ஹள்ரத் அலீ(ரலி) அவர்களை கட்டிக் கொண்டார்கள். ஓவென்று அழுதே விட்டார்கள். “பாருங்கள் இந்தப் பாவிகள் இவர்களின் உடலை இப்படிச் சிதைத்து விட்டார்கள். இதனை எப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்வது என்று நான் இங்கேநின்றுவிட்டேன்” என்று அழுது கொண்டே கூறினார்கள். ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள்தங்களையும் ஒருவாறு தேற்றிக் கொண்டு ஹாரித் (ரலி) அவர்களைத் தட்டிக் கொடுத்து “சரி வாருங்கள் அண்ணலாரிடம் போவோம்” என்றுஅழைத்து வந்தார்கள்.
ஹள்ரத் அலீ(ரலி) அவர்கள் கண்ட காட்சியை ஒருவாறு அண்ணலார் அவர்களிடம் கூறிமுடித்தார்கள். ஹாரித் (ரலி) அவர்களுக்கோவாயைத் திறக்கவே முடியவில்லை.
இக்கொடூரச்செயலைக் கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடி கேட்ட நாகம் போல்பொங்கி எழுந்தார்கள். அவர்களின் நாடிநரம்புகள் முறுக்கேறிவிட்டன. கண்கள்சிவந்து போயின.
“இப்போது எனக்கு ஏற்பட்ட கோபத்தைப் போல் எப்போதும்ஏற்பட்டதில்லை. அடுத்து வரும் போரில்இறைவன் எமக்கு வெற்றியைத் தந்தால் இறந்து கிடக்கும் எதிரிகளின் முப்பது சடலங்களைநான் இதுபோல் சின்னாபின்னமாக்குவேன்” என்று ஆவேசமாகக் கூறினார்கள்.
அண்ண லாரின் சிறிய தந்தை, அண்ணலாரின் இரும்புக் கரம், இஸ்லாத்தின் தூண், இப்படி வீழ்த்தப்பட்டதோடு,சிதைக்கவும் பட்டிருந்தால் அவர்கள் உள்ளம் எப்படிப் பொறுக்கும்?சற்று நேரத்தில் இறைவசனம் இறக்கப்பட்டது. அதில் “விசுவாசிகளே! உங்களைத் துன்புறுத்திய எவரையும் நீங்கள் பதிலுக்குத்துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே நீங்கள் அவரைத்துன்புறுத்துங்கள் (அதற்கு அதிகமாகவன்று) தவிர உங்களைத் துன்புறுத்தியதை நீங்கள்பொறுத்துக் கொண்டாலோ அது சகித்துக் கொள்வோருக்கு மிக நன்றே”
உடனே அண்ணலார்சாந்தியடைந்து விட்டார்கள். மேலும்ஆவேசத்தில் கூறியவற்றை அப்படியே கைவிட்டமை ஒருபுறமிருக்க, ஒவ்வொரு யுத்த முடிவின் போதும் சடலங்களைமுடமாக்கும் செய்கையை முற்றிலுமாகத் தடுத்து வந்தார்கள். இன்னும், அவர்கள் தம்தோழர்களைப் பார்த்து, “எந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும்எதிரிகளின் முகங்களை மதித்து நடந்து கொள்ளவேண்டும்.
உடலின் புனிதமான பாகமாக முகம்விளங்குகிறது” என்று கூறி வந்தார்கள். “உங்களில் எவரும் போர்செய்யும் போது முகத்தைத் தாக்குவதைதவிர்த்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறுவார்கள்.
தம்தோழர்களுடன் அண்ணலார் வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் காணச் சென்றார்கள். ஹள்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் சடலத்தின்அருகிலயே அண்ணலாரின் இன்னொரு உறவினரின் உடலும் சிதைந்து கிடந்தது. அவற்றைப் பார்த்துவிட்டுத்திரும்பிய அண்ணலார் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் முற்றிலும் மாற்றமானஒரு காட்சி தென்பட்டது.
ஆம்! ஹன்ஸலா (ரலி)அவர்களின் புனித உடல் அப்படியே வாடாமல் வதங்காமல் சிதைக்கப்படாமல் புதுமலர் போல்கிடந்தது. தலையில் ஈரம் தென்பட்டது. கொளுத்தும் பாலை வெயிலில் அவரின் உடலின் கீழ்ஈரம் இருந்தது. ஹன்ஸலா (ரலி) அவர்களின் அழகிலும் அமைதியிலும் சுவனத்தின் அடையாளம் இருந்தது. இக்காட்சியே, வீரமரணம் எய்திய தமது உறவினரின் இழப்பினால் வருந்தியிருந்தோருக்கு போரில்இறந்துபட்டோரின் நிலையை உணர்த்தி ஆறுதல் அளிப்பதாகவும் இருந்தது. அடுத்து, கைதமா, தாபித் இப்னு அத்தஹ்தாஹா ஆகியோரின் உடல்கள்சிறிது அப்பால் கிடந்தன.
தனதுஉறக்கத்தின்போது வீரமரணம் எய்திவிட்ட மகன் தோன்றி, தந்தையேவிரைவில் வந்து தன்னைச் சேர்ந்து கொள்ளுமாறு கூறக் கேட்டுவந்தான். இந்த கைதமா(ரலி). அனாதைக்கு ஒரு ஈச்சமரத்தைஅன்பளிப்புச் செய்தவர் தாபித் (ரலி) . தாபித் (ரலி) அவர்களின் உடலைக் கண்ட அண்ணலார், “தாபித்துக்குசுவனத்தில் வளமான தாழ்ந்து நிறைந்த குலைகளைக் கொண்ட ஈச்ச மரங்கள் எவ்வளவுபெரியதொரு தொகை இருக்கின்றது” என்று கூறினார்கள்.