பயன்படுத்தாதவர்கள்
எங்கள்பகுதியில் வீட்டு மனை அடி 7 ரூபாய்க்குத்தான் விற்றது. அப்போது கையில் பணமும் இருந்தது. ஆனால் வாங்கிப்போடாமல் விட்டுவிட்டேன். இப்போது சதுர அடி 700 ரூபாய்க்குப் போகிறது என வருத்தப்படுவோரைப் பார்த்திருப்பீர்கள்.
என்னோடு பணிபுரிந்தவனெல்லாம் இன்று பதவி உயர்வு பெற்றுவிட்டான். என்ன...! இங்கு பணிபுரியும் போதே அஞ்சல் வழியில் படித்து தரத்தை உயர்த்திக் கொண்டான். எனக்கும் அப்போது படித்துக் கொள்ள நேரமும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் தவறவிட்டு விட்டேன்.... இப்படிப் புலம்புவோரும் உண்டு.
மறைந்த என் பெற்றோர் என்னுடன்தான் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன். வயதான காலத்தில் நன்கு கவனித்திருந்தால் எவ்வளவு சந்தோப் பட்டிருப்பார்கள்? இவ்வாறு மனம் நொந்து தன்னிரக்கப் படுவோரையும் அறிந்திருப்பீர்கள். இவையயல்லாம் நன்கு வாய்ப்புக் கிடைத்தும் நழுவ விட்டவர்களின் புலம்பல்கள். ஆம்! வாழ்வில், சில வாய்ப்புகள் - மீண்டும் கிடைக்காத அரிய சந்தர்ப்பங்களைத் தவறவிட்டு விட்டால் நஷ்டம் நமக்குத்தான்.
போனால் கிடைக்காது! பொழுது விழுந்தால் சிக்காது! என நடைமேடை வியாபாரிகள் கூவிய வண்ணம் பொருள்களை விற்பார்கள். உண்மைதான். எந்தவொன்றும் அதற்குரிய காலத்தில் செய்யாவிட்டால் பின்னால் ஆதங்கத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிடும். மேலே நாம் கண்டவையயல்லாம் உலகத் தொடர்பான வருத்தங்கள். ஆனால்....ஒரே முறை கிடைத்த உலக வாழ்வில், தன்னை உருவாக்கிக்கொள்ள அல்லாஹ் அளித்த வாய்ப்பை, தவறவிட்டு விட்டால், அது நிரந்தரக் கவலையாகப் போய்விடும்.
குறிப்பாக, அரிய பொருளாக - ஆன்மீகச் சுடராக, அருமைத் துணையாக, அறிவு விளக்காக நமக்குக் கிடைத்திருக்கும் குருநாதர், காலத்தின் உத்தமர், சையிதுனா கலீல் அவ்ன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்களைக் கரம் பற்றிய நாம், அவர்களுக்குஎம்மை அர்ப்பணித்து ஆன்மிக சீலர்களாக உருவாகும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. அது நிரந்தரப் புலம்பலாக மாறிவிடும். அல்லாஹ் நம்மை அதிலிருந்து பாதுகாப்பானாக!