விழாச் சொற்பொழிவுகள் - 3
தலைமை கலீபா எச்.எம். ஹபீபுல்லாஹ் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.....
நமது உயிரினும் மேலான ஷைகு நாயகமவர்களின் உதயதின வாழ்த்துக்களைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டவனாக என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்....
சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் உதயதின விழாவில் கலந்து கொண்ட பாக்கியத்தோடும், நாம் அனைவரும் அவர்களின் திருக்கரம் பற்றிய முரீதீன்கள் என்ற பெருமிதத் தோடும் நாம் இங்கு கூடியிருக்கின்றோம். அந்தளவுக்கு நம்மை மேன்மை மிக்கவர்களாக வைத்திருக்கின்றார்கள்.
இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, பிரபஞ்சத்தின் படைப்புகள் அனைத்தும் பயன் படும்படியாக காலந்தோறும் நபிமார்களை - தூதர்களை அனுப்பி வைத்தான். அவ்வாறு வந்த தூதர்களும், இறைவன் தங்களுக்கு அளித்த பணிகளைச் செவ்வனே செய்து முடித்தார்கள். நிறைவாக, தூதர்களில் முத்திரை நபியாக நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். அவர்கள், முன்வந்த நபிமார் களைப்போல், ஒரு குடும்பத்திற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ நபியாக மட்டுமின்றி, உலகம் முழுமைக்கும் -உலகம் அழியும் வரைக்கும் நிறைவுபெற்ற மார்க்கத்தைத் தந்த நபியாகத் திகழ்கின்றார்கள். இத்தகைய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்அவர்களின் சிறப்பை, நமது ஷைகு நாயகமவர்கள் பலமுறை - பல்வேறு வகைகளில் மறைமுகமாகவும் - நேரடியாகவும் நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எவ்வாறெல்லாம் போதித்துள்ளார்கள்? எவ்வளவு பெருமைக்குரியவர்களாக இருக்கின்றார்கள்? என்பதனை நமது ஷைகு நாயகம் அவர்கள் சொல்லித்தான் நாம் முழுமையாக விளங்கிக் கொண்டிருக்கிறோம்.
இங்கு எத்தனையோ படித்த ஆலிம்கள் இருக்கிறார்கள். எவ்வளவோ கிதாபுகளை ஓதியிருக்கின்றார்கள். எவ்வளவோ ஹதீதுகளை அறிந்திருக் கிறார்கள். ஆனால்,அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பெரும்பயனாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மையான தாற்பரியத்தை அறியக்கூடிய வாய்ப்பு நமக்குத் தான் கிடைத்திருக்கிறது. அதை நாம் அடைவதற்கு, நமது ஷைகு நாயகமவர்கள் தாம் காரணம். இந்தப் பெருமையயல்லாம் அவர்களுக்குத் தான் போய்ச் சேரும்.
நமக்கு அருள் வேண்டும் - அருளாசி வேண்டும் - இன்பம் வேண்டும் - பேரின்பம் வேண்டும் - உலக வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் வேண்டும் என்று இதுபோன்ற விழாக்களை நடத்தி, அதன் பொருட்டால் பயனடைந்து வருகின்றோம். நமது ஷைகு நாயகம் அவர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ரங்க - வெளிரங்க வாரிசாக விளங்குகின்றார்கள். மேலும், நமது ஷைகுநாயகமவர்கள், தங்களது தந்தை ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள், ஏகத்துவத்தை நாம் விளங்குவதற்கு தங்கள் வாழ்வையே நமக்காக அர்ப்பணித்துள்ளார்கள். இதற்காக நாம் அவர்களுக்கு என்ன செய்தாலும் அதற்கு ஈடாகாது.
நமது ஷைகு நாயகமவர்களுடன் - அவர்களின் காலத்தில் வாழும் பாக்கியத்தை மட்டும் நாம் பெற்றிருக்கவில்லை. அவர்களின் கருணை, அவர்களின் கனிவு, ஆதரவு, அரவணைப்பு அனைத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். நம்முடன் வாழும் மனைவி, மக்கள், தாய் தந்தையர், நண்பர்கள், உற்றார், உறவினர் ஆகிய யாரும் தரமுடியாத மெய்யான அன்பை - அரவணைப்பை நமக்கு அருளிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற வழிவகைகளைச் சொல்லிக் கொடுத்து, அதன்படி வாழ நம்மைக் கடமைப்படுத்தி, அதன் மூலம் நாம் பிரயோசனங்களை அடைந்து கொள்ளும்படிச் செய்கின்றார்கள் என்றால் அதற்கு ஈடு இணை உண்டா?
பொதுவாகவே, மனிதன் இறைவனுடைய இயல்பைப் பெற்றிருக்கின்றான். அதனால்தான் இறைவன், மனிதன் எனது பிரதிநிதி என்பதாகச் சுட்டிக் காட்டுகின்றான். ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனின் இயல்பு இருக்கின்றது. அதைப்போலவே, ஷைத்தானின் - நஃப்ஸின் ஊடுருவலும் இருக்கின்றது. ஊடுருவல் என்று சொன்னாலே, அது எதிர்மறையான பொருள் தான் தருகின்றது. நேர்மறையான - நேர்மையான செயல் அங்கே காணப்படாது. இவ்வாறு, இறையியல்பும் எதிர்மறையும் கொண்ட மனிதன், தனக்குள் உள்ள இறைவனின் இயல்பை வெளிக்காட்ட வேண்டும் என்று தான் நமது ஷைகு நாயகம் அவர்கள் வழிகாட்டுகின்றார்கள்.
பொதுவாகவே, யாரும் இறைவனின் இயல்போடு இருக்கத்தான் விரும்புகிறோம். யாரும் திட்டமிட்டுத் தவறுகள் செய்வதில்லை. 11 மணிக்கு இவரைக் கெடுக்க வேண்டும், 1 மணிக்கு இவருக்கு இன்ன தீங்கு செய்ய வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அதைப்போல், நமக்குத் தீமை செய்தவருக்கும், வெளிப்படையாகப் பழிவாங்கும் நோக்கிலும் நாம் செயல்படுவதில்லை. ஆக, ஓரளவுக்கு இறைவனின் குணநலன்களை நாம் பெற்றுத் தான் இருக்கிறோம். இருந்தாலும், அந்த இயல்பை மேன்மேலும் நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தாம் நமது ஷைகு நாயகமவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த நிலையை நாம் அடைய நமக்கு ஷைகுநாயகமவர்களின் உதவியும், ஆதரவும் தேவைப்படுகின்றது. ஏனெனில் ஹக்கின் பரிபூரண நிலையை பரிபூரணமாக உணர்ந்தவர்கள் நமது ஷைகு நாயகமவர்கள்தாம். அவர்களின் உதவியைக்கொண்டே நாம் அந்த உன்னத நிலையை அடைய முடியும். ஆக நாம் மனிதனாக வாழ்வதற்கு நமது ஷைகு நாயகமவர்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதன் சக மனிதர்களிடம் அன்பாகவும், மனிதநேயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் இறைவனின் இயல்பாக இருக்கின்றது. அதைத்தான் நமது ஷைகு நாயகமவர்கள் நமக்குப் போதிக்கின்றார்கள். அதுமட்டு மல்ல, அவர்களும் அவ்வாறு செயல் பட்டுதான் நமக்கு வழிகாட்டுகின்றார்கள். முன்வந்த நபிமார்கள், ரசூல்மார்கள்,வலிமார்கள் எல்லாரும் இறைவனின் இயல்பைத் தங்களிடம் வெளிக்காட்டித் தான் வழிகாட்டியுள்ளார்கள். மேலும், மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளைப் போராடி வென்று சாதனைகளாக மாற்றவும் கற்றுத் தருகிறார்கள். மனிதனுக்கு கஷ்டங்கள் ஏற்படும்போது, அதைத் தைரியமாக எதிர்கொண்டு, எதிர்நீச்சல்போட்டு, எவ்வாறு போராட வேண்டும் என்பதை தங்களின் அமுத மொழிகளாலும், அழகு செயல்களாலும் நமக்குக் காட்டித் தருகிறார்கள். இப்படித்தான் வாழ வேண்டும், இந்த மாதிரி சோதனைகள் வரும்போதும்,இவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கஷ்டத்திலிருந்து இன்பத்தைப் பெறும் சூத்திரத்தையும், சூட்சுமத்தையும் சொல்லித் தருகிறார்கள்.
அவர்கள் நமக்குக் காட்டித் தரும் இந்த உயரிய வழிமுறைக்கு ஈடு இணையாக நாம் எதையுமே அவர்களுக்குச் செய்துவிட முடியாது. நெருப்பு என்றால் சுடும் என்பது உண்மை,அது நெருப்பின் தத்துவம். அதுதான் நிதர்சனம். அதைப்போல், உலக வாழ்க்கை என்றால், மனிதன் சோதனைகளையும் சங்கடங்களையும் சந்தித்தே தீர வேண்டும் என்பது சத்தியம். பிரச்சனைகளைச் சந்தித்தேயாக வேண்டும், அதில் வென்றுதான் பேரின்பம் ஈட்ட வேண்டும், இதுதான் இயல்பு. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வரலாற்றை நாம் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், அறிந்திருக்கிறோம். வரலாற்றின் வரிகள் தோறும் எத்தனை சோதனை வார்ப்புகள்! அவர்கள் படாத கஷ்டங்களையா நாம் அனுபவித்துவிடப் போகிறோம்? மேலும், நமது ஷைகு நாயகமவர்களின் வாழ்வை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக, இதைவிடப் பெரிய உதாரணங்கள் நமக்குத் தேவையில்லை. இவற்றையயல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது தான், நமது ஷைகுபிரான் அவர்கள், நமக்காக - நமது நேர்வழிக்காக தங்கள் புனித வாழ்வையே எந்த அளவுக்குத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் - எந்த அளவுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். நமது ஷைகு நாயகவர்கள் உயர்ந்த ஞானத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உயிர் போன்று பாதுகாக்கப்பட வேண்டிய வியம். ஒரு வீட்டில் ஞானவான் இருந்தால், அந்த வீட்டிற்குப் பெருமை. ஓர் ஊரிலே ஞானி இருந்தால், அந்த ஊருக்குப் பெருமை. ஒரு நாட்டிலே ஞானி இருந்தால், அந்த நாட்டுக்குப் பெருமை. இந்த உலகில் ஞானி இருந்தால், உலகம் உய்வு பெறும். உலக மக்கள் ஞானியின் உபதேசங்களைக் கேட்டு உயர்வு பெறுவார்கள். உலகம் பரிசுத்தமாகும். ஏன்? அந்த ஞானியின் பொருட்டால், விலங்குகள் கூட பரிசுத்தமடைகின்றன. பிரபஞ்சம் முழுக்கப் பிரகாசமும் மகிழ்ச்சியும் நிறைகின்றன.
நபி இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நெருப்புக் குண்டத்திலிருந்து - அந்தச் சோதனைக் கண்டத்திலிருந்து எப்படித் தப்பித்தார்கள்? எப்படி பாதுகாக்கப்பட்டார்கள்?என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் அசையாத இறைநம்பிக்கை மூலம்தான், அவர்கள் தங்களுக் குண்டான சோதனையைச் சாதனைச் சரித்திரமாக மாற்றினார்கள். இதைத்தான் நமது ஷைகுபிரான் அவர்களும் நம் வாழ்வில் செய்யச் சொல்கின்றார்கள். அதற்கு நமக்கு பொறுமையும் பணிவும் அவசியமாகின்றது.
இறைவன் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் படைத்ததும், இப்லீஸ் உள்பட அனைத்து மலக்குமார்களையும் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தா செய்யச் சொன்னான். ஆனால், ஷைத்தான் அதை மீறினான். இறைக்கட்டளையை ஏற்க மறுத்தான் - பணிய மறுத்தான். அதேபோல், ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு இறைவன் குறிப்பிட்ட பழத்தை உண்ண வேண்டாம் என்று கட்டளையிட்டான். ஆனால், அவர்களும் அவர்களது துணைவி ஹவ்வா அலைஹஸ்ஸலாம அவர்களும் அதை மீறினார்கள்.
பணிவு
இங்கே நாம் ஒரு வியத்தைக் கவனிக்க வேண்டும். ஷைத்தான் இறைக்கட்டளையை மீறினான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இறைக் கட்டளையை மீறினார்கள். பின் ஏன் ஷைத்தான் சபிக்கப்பட்டான்? அதில் தான் வியம் இருக்கின்றது. ஏன் என் உத்தரவை ஏற்கவில்லை என இறைவன் கேட்டபோது ஷைத்தான், நான் நெருப்பில் படைக்கப்பட்டவன். அவர்கள் மண்ணில் படைக்கப்பட்டவர்கள். நான் தான் உயர்ந்தவன். நான் எதற்கு அவர்களுக்குப் பணிய வேண்டும்? எனக் கேட்டான். அவனது பேச்சில் ஆணவம் தெறித்தது. ஆனால், இறைவன், ஏன் கட்டளையை மீறினீர்கள்? என்று ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் யா அல்லாஹ்! படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து, ரட்சித்துக் காப்பவன் நீ. அனைத்தையும் அறிந்தவன் நீயே. யானோ ஒன்றும் அறியாதவனாக இருக்கிறேன். தெரியாமல் செய்த என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்வாயாக! என்று கெஞ்சி மனமுருகி இறைஞ்சினார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேச்சில் பணிவு நிறைந்திருந்தது. ஷைத்தானைச் சபித்த இறைவன் அவர்களைச் மன்னித்தான்.
இறைவன் தன் அடியார் ஒருவரிடம், எனக்காக என்ன தருவீர்? என்று கேட்டானாம். அதற்கு அந்த அடியார் இறைவா, உனக்காக நான் என்ன தரமுடியும்? நீயோ தேவை யற்றவனாக இருக்கின்றாயே என்று கேட்டாராம். உடனே இறைவன், என்னிடம் பணிவெனும் பண்பு இல்லை. அந்தப் பணிவை நீர் என்னிடம் காட்ட வேண்டும் என்று சொன்னானாம். ஆக, இறைவனுக்குப் பணிய வேண்டும். அதில் தான் நமக்கு மகிழ்ச்சி இருக்கின்றது.
இத்தகைய உயர்வுகளை நமக்கு அருளிக் கொண்டிருக்கும் நமது சங்கைமிகு ஷைகு நாயகமவர்களுக்காக நாம் நம்மைத் தியாகம் செய்பவர்களாக இருக்க வேண்டும். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் மகனையே இறைவனுக்காகப் பலி கொடுக்கச் சென்றார்களே, அதைப் போன்றதொரு தியாகம் - பெரியார் அப்துல் முத்தலிப் அவர்கள், தங்கள் மகனார் ஹள்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பலியயடுக்கத் துணிந்தார்களே, அதைப் போன்றதொரு தியாகத்தை நாம் காட்ட வேண்டும். எப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிரினும் மேலாகப் பிரியம் கொள்ள வேண்டுமோ, அதைப்போல, நமது ஷைகு நாயகம் அவர்கள் மீதும் உயிரினும் மேலாகப் பிரியம் கொண்டு, அவர்களுக்காக நம்மைப் பரிபூரணமாக அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நிலத்தில் புல் - பூண்டுகள் வளர வேண்டுமானால், நாம் எதுவும் மெனக்கெடத் தேவையில்லை. மழை
பெய்யப் பெய்ய அவை தாமாக வளர்ந்துவிடும். அதே நிலத்தில் மாமரம் விளைவிக்க வேண்டுமானால் அதைத் தினமும் பராமரிக்க வேண்டும். மற்ற விலங்கினங்களிலிருந்து பாதுகாத்துப் பேண வேண்டும். அம்மரம் ஆளாகும் வரை கண்காணிக்க வேண்டும். அதே நிலத்தில், சந்தன மரம் விளைவிக்க வேண்டுமானால், மேலும் அதிகமதிகமான நமது பங்களிப்பு இருக்க வேண்டும். பாதுகாப்புப் படலத்தைப் பெருக்க¼ண்டும். அதைப்போல, நமது ஷைகு நாயகமவர்களிடமிருந்து, நமக்கு கிடைக்கும் பலாபலன்களை முழுமையாகப் பெற்றக் கொள்ள வேண்டுமானல், நாம் நமது தியாகத்çயும் - பணிவையும் காட்ட வேண்டும்.
அவர்கள் நமக்கு வழங்க வேண்டியவற்றை எல்லாம் அருளி, தங்கள் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். நாம்தாம் அதற்குப் பகரமாக - நமது தியாகத்தையும் பணிவையும் காட்ட வேண்டிய கடமையிலும் கட்டாயத்திலும் இருக்கிறோம்.
மகானிடம் மனிதரொருவர் சென்று, நாமும் கால்களில் தான் நடக்கின்றோம், விலங்கினங்களும் கால்களில் தன் நடக்கின்றன. பின் விலங்கினங்களை மட்டும் ஏன் கால்நடை என்று அழைக்கின்றோம்? என்று கேட்டாராம். அதற்கு அந்த மகான், அந்தக் கால்நடைகளுக்கு இல்லாத ஆற்றல் நமக்கு இருக்கின்றது. அது சிந்திக்கும் ஆற்றல். நீ கால்நடைகளிலிருந்து உன்னை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தான் சிந்திக்க வேண்டும். அதுவும் உன்னைப் படைத்த இறைவனைச் சிந்தித்து உணர வேண்டும். இல்லையேல், நீயும் கால்நடை தான் - நடைப்பிணம் தான் என்று கூறினாராம்.
மேலும், உலகப் பிரசித்தி பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியானார்டோ டாவின்ஸி ஓவியம் வரைவது போல் சிற்பம் செதுக்குவதிலும் சிறந்தவர். அவர் எப்போதும் எதையாவது செதுக்கிக் கொண்டே இருப்பாராம். ஒருமுறை நிகழ்ச்சியயான்றில் கலந்து கொண்ட ஓவியருக்கு. சிறுகல் ஒன்று கண்ணில் பட்டது. உடனே அதை எடுத்து, தம்மிடம் இருந்த சிறு உளியால் செதுக்க ஆரம்பித்துவிட்டாராம். அவர் செதுக்கச் செதுக்க அந்தச் சிறுகல் சிறிது நேரத்தில், சிறப்பான சிற்பமாக உருவானது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த அவரது நண்பர், எவ்வளவு அழகாக - சிறுகல்லை சிற்பமாக மாற்றி விட்டீர்களே? என்று புகழ்ந்தாராம். அதற்கு அந்த ஓவியர், நான் எங்கே மாற்றினேன்? அந்தச் சிற்பம் அந்தக் கல்லுக்குள் ஒளிந்திருந்தது. நான் அந்தச் சிற்பத்தை மறைத்துக் கொண்டிருந்த தேவையற்ற பாகங்களைத் தான் களைந்தேன் என்று கூறினாராம் அதைப்போல நாமும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற பொய், பொறாமை, கர்வம், ஆணவம். அறியாமை தீயவற்றைக் களைந்து, நமது ஷைகு நாயகமவர்களின் அருளால் இறைவனின் இயல்பில் இன்பம்பெறப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.
உரைகள் தொகுப்பு: A.N.M.அன்ஸாரி ஹக்கிய்யுல் காதிரிய் M.A. திருச்சி.