நாட்டு நடப்பு
அபூ பாஹிரா
நிறம் மாறும் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்
கறையான் வீடு கட்ட கருநாகம் குடியேறியதாம் எனப் பழமொழியொன்று உண்டு. சிறிது சிறிதாக மண்ணைச் சேர்த்து சேமித்து - ஒருங்கு கூட்டி - இரவு பகலாக உழைத்து கறையான் கூடு கட்டி வைத்திருக்குமாம். அதில் எந்த வித முன்னறிவுப்புமின்றி கருநாகம் வந்து ஆக்கிரமித்துக் கொள்ளுமாம்.

தமிழகத்தில் 40ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ஓர் வஹ்ஹாபி இயக்கம் தான். அதன் கருடப்பார்வையில் சிக்கினால் அரவமும் அரவமில்லாமல் அழிந்துவிடும். சுன்னத் வல் ஜமாஅத் பெரியோர்களால் உருவாக்கப்பட்ட பல மதுரஸாக்கள் வெளியே தெரியாமல் அவர்களின் ஆளுகைக்குள் கொண்டுவரப் பட்டுவிட்டன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பாக்கியாத்துக்குள் இது எப்படி நுழையப் பார்த்தது என்பதை ஒரு மூத்த பாக்கவி இப்படிக் கூறினார். மாமேதை ஷைகுஆதம் ஹள்ரத் அவர்கள் இருந்த காலத்திலே வடநாட்டிலிருந்து வந்த சிலர் அங்கு நுழைந்து உள்ளூர்ப் பிரமுகர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு, தரைமீது பாய்விரித்து ஜமாஅத்தில் சாப்பிடுவது போல சாப்பிடும் பழக்கத்தை மதுரஸாவில் ஏற்படுத்த வேண்டும் என ஆரம்பித்து பல வியங்களிலும் மூக்கை நுழைத்த போது, இவர்களுக்கு இடம் கொடுத்தால் எங்கெல்லாம் இவர்கள் கைவைப்பார்கள் எனப் புரிந்து கொண்ட மாணவர்கள் இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென அவர்களையும் அவர்களுக்கு ஆதரவாகயிருந்த புல்லுருவி ஆசிரியர்களையும் ஓட ஓட விரட்டினார்கள்.
விரட்டப்பட்டவர்கள் தங்களுக்கென ஒரு மதுரஸாவை ஏற்படுத்திக் கொண்டார்கள். தனியாகப் போனாலும் தமிழகத்தில் அனேக மதுரஸாக்களையும தங்கள் அகீதாப்படி மாற்ற முனைந்தார்கள்.
எது எப்படியோ, இதில் நாம் கவலைப்பட வேண்டியது என்ன வென்றால் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்காரர்களால் - அவர் களின் வக்ஃபால் - அவர்களின் உழைப்பால் - தியாகத்தால் உருவான மதுரஸாக்களை வஹ்ஹாபிகளான இந்தக் கருநாகங்கள் புகுந்து தங்களுக்குரியதாக மாற்றிக் கொள்வது பற்றித்தான்.
சொல்லப் போனால், இந்த மதுரஸாக்களை உருவாக்கிய முன்னோர்கள் தங்கள் மதுரஸாவில் இவர்கள் இருப்பதைக் கண்டால் எட்டி உதைத்து வெளியே தள்ளுவார்கள். என்ன செய்வது? அவர்கள் மறுமை வாழ்வு வாழ்பவர்களாயிற்றே.
பாக்கியாத் மதுரஸாவுக்குள் புகுந்த வைரஸ், வளர்ந்து வாலிபமாகி மதுரஸாவின் பூர்வீகக் கொள்கையை முற்றுமாக அழிக்க நெருங்கிவிட்டது. பல்லாயிரக்கணக்கான ஆலிம்களை உருவாக்கிய தமிழகத்தின் தாய் மதுரஸா தனது பாரம்பரியக் கொள்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு பசுத்தோல் போர்த்தியபுலிகளாகிய முனாஃபிக்குகளின் குரல்களை ஒலிக்கப் போகிறது. பாக்கவி என்றால் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் என இருந்த நம்பகத்தன்மை ஒழிந்து அங்கு ஓதி வெளிவரும் ஆலிம்கள் மீது ஒரு சந்தேகப் பார்வை விழப் போகின்றது.
150 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தை சுன்னத் வல் ஜமாஅத்தார் எப்படி மீட்டெடுக்கக் போகிறார்களோ? அல்லாஹ்தான் அறிவான்.