சென்ற இதழ் தொடர்ச்சி......
மறையோனின் முத்தங்கள்
கவிஞானி G.S.T மஹ்பூபு சுப்ஹானி 9840313283
தற்போது இருக்கும் இடத்திலிருந்து பல மாத பயணத் தூரத்தில் பகுதாது இருக்கிறது என்பதை ஆட்டிடையர் மூலம் அறிந்து கொண்ட பாதிரிப் பெண் அவருடன் தங்கிவிட விரும்பினார். இடையரின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.
இருவருக்கும் கரையோரக் குடிசை வாழ்வு இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது. குழந்தைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். தன் கணவரான ஆட்டிடைய ருக்கு ஆடு மேய்ப்பதிலும் ஒத்தாசையாக இருக்கும் பாதிரிப் பெண் வழக்கம் போல் ஆற்றுக்கு வந்து துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக ஆற்றில் விழுந்து விட்டார். மீண்டும் ஆறு அவரை அடித்துச் செல்கிறது. மயக்க நிலையடைந்த அவரை யாரோ காப்பாற்றியதாக உணர் கிறார்.
அவ்வளவுதான்! கண்விழித்த பாதிரி ஆண் பாதிரியாராக மாறியிருந்தார். அதிலும் கலீபாவின் முன் சதுரங்கம் விளையாடிய வேலையில் கவுதுல் அஃலம் அவர்களை ஏறிட்டுப் பார்த்த நிலையில் நகர்த்துவதற்காக எடுக்கப்பட்ட சதுரங்கக் காய் தன் கையில் இருக்கும் நிலையில் பாதிரியார் இருந்தார். ஒரு கணப் பொழுதில் நடந்த நீண்ட நிகழ்ச்சிகள் அவரை நிலைகுலையச் செய்தன. இவையயல்லாம் கனவா? என யோசித்தார். இல்லை, கனவின் காட்சிகளிலும் நேரம் கடந்து செல்லும் அல்லவா!
கவுதுல் அஃலம் அவர்களையே குழப்ப நிலையில் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாதிரியார் தெளிவு பெறுவதற்காக அந்த அரண்மனையின் கதவொன்றைத் திறந்தார். அங்கே நம்ப முடியாத, ஆனால் நம்பித்தான் ஆகவேண்டிய அற்புத ஆச்சரியக் காட்சி அவரைத் திணறடித்தது.
தன் கணவராக இருந்த ஆட்டிடையரும், தான் பெற்றெடுத்த மூன்று குழந்தைகளும், தான் வசித்த வீடும், தான் பரிபாலித்த ஆட்டு மந்தையும், அருகே ஓடும் ஆறும் அங்கே இருப்பதைக் கண்டார். திகைத்துத் திக்குமுக்காடிய பாதிரியார் மிஃராஜின் தத்துவத்தை இறைவனால் எதையும் செய்ய முடியும் என்ற சத்தியத்தை செய்முறை விளக்கமாக்கிக் காண்பித்த ஹள்ரத் கவுதுல் அஃளம் மஹ்பூப் சுப்ஹானீ முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் கரம்பற்றி உடனேயே முஸ்லிமானார். நேர்வழி பெற்றார்.
மார்க்க மேதைகள் எவராலும் புரிய வைக்க முடியாத மிஃராஜின் உள்ளமையை அளக்க முடியாத அற்புதத்தால் உணர்த்திக் காட்டிய கவுதுல் அஃலம் அவர்களுக்கு நன்றி தெரிவித்த கலீபா அல்முஸ்தஃபீ பெரிதும் மகிழ்வடைந்தார். தலைமைப் பாதிரியார் இஸ்லாத்தில் இணைந்த இனிப்பான செய்தியறிந்த மற்ற பாதிரிகளும், பல்லாயிரக் கணக்கான கிருத்துவர்களும் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டு வெளிச்சத்தை விவேகத்தால் வாங்கிக் கொண்டனர்.
ஹள்ரத் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் மெய்ஞ்ஞானத்தின் மீது பொறாமை கொண்டவர்களும் இருந்தனர். அதனால் அவர்களிலிருந்து வெளியாகும் கராமத்துக்களைக் காழ்ப்புணர்வோடு கண்டனர்.
“எனது செயல்களுடன் அவர்களும் போட்டி போடுகிறார்கள். எனக்குத் தந்தவற்றை அவர்களுக்கும் கொடுக்காததற்காக இறைவனைக் கண்டிக்கிறார்கள்” என்று மனப்பண்பில் பக்குவப்படாத அத்தகையோரின் இதயங்களைத் திறந்து காட்டினார்கள். அப்படிப் பட்டவர்களில் ஒருவரான அப்துஸ்ஸமது இப்னு ஹுமாம் செல்வந்தராகவும்,உலகத்தின் ஆசாபாசங்களின் அடிமையாகவும் , கர்வக் கனத்தை எப்போதும் சுமந்தவராகவும் இருந்தார். கவுதுல் அஃலம் அவர்களின் அற்புதங்களை மாயாஜால சித்துக்கள் என்பதாகவும் சொல்லித் திரிந்தார். உலகத்து மனிதர்களில் தன்னையே பெரிதாகக் கற்பனை செய்து வைத்திருப்போரின் எண்ணங்கள் தாழ்வு மனப்பான்மையில் இருந்தே உருவாகின்றன.
தான் அறியாத அத்தகைய தாழ்வு மனநிலையின் மகசூலான கர்வத்தைத் தனதாக்கி வைத்திருந்த அப்துஸ் ஸமது, கவுதுல் அஃலம் அவர்களின் ஜூமுஆ பேச்சை இன்றைய தினம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் அப்துஸ் ஸமதின் கால்களைப் பள்ளி வாசலுக்குள் அழைத்துச் சென்றது.
கவுதுல்அஃளம் அவர்களின் ஞானவுரை கேட்க பெருந்திரளான மக்கள் நிறைந்திருந்தனர். நகர முடியாமல் நகர்ந்து வந்து மிம்பருக்குக் கீழே முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.
மெய்ஞ்ஞானச் சுடர்வீசி வந்த குத்புல் அக்தாப் அவர்கள் குத்பா மேடையில் ஏறினார்கள். சொற்பொழிவு ஆரம்பமானது. அது அனைவரின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அக நிலங்களில் இறையச்ச விதையை உழுது விதைத்தது. உடும்பைப் போல் உலகத்தைப் பிடித்திருந்த அப்துஸ் ஸமதை மட்டும் எரிச்சலூட்டியது. தேனை விரும்பாத வனுக்கு அதன் சுவை எப்படித் தெரியும்? வேண்டா வெறுப்பாக அங்கே அமர்ந்திருந்த அப்துஸ் ஸமதின் வயிறு கலங்கியது. அங்கேயே மலம் கழிந்துவிடும் நிலைக்கு அவர் ஆட்பட்டார்.அங்கிருந்தும் எளிதாக வெளியேறிவிடவும் அவரால் முடியாது. அந்த அளவுக்கு மக்கள் பெருந்திரளாக அடர்ந்திருந்தனர். இந்த இக்கட்டான நிலையில் தன்னைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த அப்துஸ் ஸமது அவமானப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தவித்த போது, மிம்பரில் இருந்து இறங்கி வந்த கவுதுல் அஃலம் அவர்கள் தங்கள் அங்கியால் அவரை மறைத்த வண்ணம் உபதேசத்தைத் தொடர்ந்தார்கள்.
யாரும் இல்லாத அழகிய புல்வெயில் மலம் கழித்த அப்துஸ் ஸமது அருகில் ஓடிய சிற்றாறில் சுத்தம் செய்தபின் ஒழுவும் செய்து கொண்டார். இருந்த இடத்தில் இருக்கும் அப்துஸ் ஸமதுக்கு நடந்து முடிந்த நிகழ்வில் நல்ல படிப்பினை கிடைக்கிறது. கவுதுல் அஃலம் அவர்கள் மீது அவர் கொண்ட காழ்ப்பின் சுவடும் மறைகிறது: அவர்கள் மீதான அச்சம் பன்மடங்கு மேலோங்குகிறது. ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றிய அப்துஸ்ஸமது வீடுவந்து சேர்ந்தார். அவரது சாவிக்கொத்து காணாமல் போயிருந்தது. மீண்டும பள்ளிவாசலுக்கு வந்து எங்கும் தேடினார். கிடைக்கவில்லை.
வேலையின் நிமித்தமாக மறுநாள் சனிக்கிழமையன்று பகுதாதில் இருந்து வெளியூருக்குப் புறப்பட்ட அப்துஸ்ஸமது பயணப்பட்டுக் கொண்டிருந்த போது அழகான அடர்ந்த புல்வெளியையும் அருகே சலசலத்து ஓடும் சிற்றாற்றையும் கண்டு அவற்றின் வசீகரத்தால் அவ்விடத்தில் நின்றார். கடந்த வெள்ளிக்கிழமையன்று தான் மலங் கழித்த புல்வெளி இதுதான். சுத்தம்செய்த சிற்றாறு இதுதான் என்று உணர்ந்த அவர் ஆற்றில் ஒழுச் செயது திரும்பும் போது தனது சாவிக் கொத்து அங்கே கிடப்பதைக் கண்டெடுத்தார்.சுப்ஹானல்லாஹ்!
அப்துஸ்ஸமது மெய்சிலிர்த்துப் போனார். அவரது மனக்கண் திறந்த உணர்வுகள் அவரை என்னென்னவோ செய்தன. பிரயாண நோக்கம் நிறைவேறிய அவர் பகுதாதுக்குத் திரும்பி வந்த உடனேயே ஹள்ரத் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் சமுகம் வந்து மன்னிப்பைப் பெற்று அவர்களின் சீடர்களில் ஒருவராகவும் ஆகிப்போனார்.
ஆன்மிகப் பேரரசர் குத்புல் அக்தாப் அவர்கள் மீது ஆனந்தப்பட்ட அல்லாஹு தஆலா அவர்களிலிருந்து வெளியாக்கும் அற்புதங்களை அனுதினமும் காணும் நல்வாய்ப்பை அவனருளால் பெற்றுக் கொண்டார்.
ஹிஜ்ரி 470 (கி.பி1077) முதல் ஹிஜ்ரி 561 (கி.பி1166) வரை தொண்ணூற்றி யயாரு வருடங்கள் இவ்வுலக வாழ்வில் இருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரலி ) அவர்களில் இருந்தும் வெளியான அற்புதங்கள் எண்ணற்றவை. அளப்பெரும ஆற்றல் மிகுந்தவை.
என் இறைவனின் அனுமதி இல்லாமல் நான் உண்பதோ, பருகுவதோ உறங்குவதோ கிடையாது. அவனுக்காகவே முற்றிலுமாக என்னை நான் அர்ப்பணித்து விட்டேன் என தங்களின் அகமியத்தை அவர்கள் உலகுக்கு உணர்த்தினார்கள். அதனால்தான் அல்லாஹ்வின் மகிழ்ச்சியின் அத்தாட்சிகளாக அவர்களி லிருந்து வெளியாகும் அற்புதங்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாகத் திகழ்ந்தன. அவர்களின் பாதங்களின் ஸ்பரிசத்தைத் தாங்கும் தலைகளில்தாம் மெய்ஞ்ஞான ஊற்றுக்களை அல்லாஹ் அமைத்து விடுகிறான். அத்தகைய வர்களையே தனது நேச எல்லைக்குள் வைத்து அழகு பார்க்கிறான்.
தன் நேசர்களின் மூலம் கராமத் என்னும் கதவுகளைத் திறந்து அளந்து பார்க்க முடியாத தனது பேராற்றலின் முகங்களை மென்மையாகக் காட்டு கிறான். அவை,மெய்ஞ்ஞானத் திவலைகளை மக்களின் மீது தெளிக்கின்றன. அதன் காரணமாக மெய்யுணர்ச்சி பெற்று இறையாற்றலை உணர்ந்து உயிர்ப்போரும் அரிதாகவே இருக்கிறார்கள்.
காலத்தின் கணக்கெல்லாம் இறைவனின் பேராற்றலைக் கட்டுப்படுத்து வதில்லை. அவை, பாமர மக்களுக்கான பாதைகளே என்பதை மேற்கண்ட அற்புத நிகழ்வுகள் அழுத்தமாக நிரூபிக்கின்றன. தான் விரும்பியவர்களின் கைப்பிடித்து மெய்ஞ்ஞானப் பூங்காவிற்குள் அழைத்துச் செல்லும் ஆண்டவனே அனைத்து அற்புதங்களுக்கும் உரியவன்.அவனை நேசிக்கும் நெஞ்சங்களைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்பவன். அத்தகைய நேசத்தளங்களில் இருந்தே தன் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து அன்பு முத்தங்களை அள்ளியள்ளிச் சொரிபவன்: ஆனந்தத்தின் ஆனந்தமானவன்!