• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Nov 2011   »  வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..


வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..  


தொடர்.... தொடர் எண்-18

 

‘துஆ’ எனும் சொல்லிற்கு இருவிதமான பொருட்கள் உள்ளன வணக்கத்தைப் பொதிந்தில்லாத சாதாரண அழைப்பு, விளிப்பு, கூப்பிடுதல் என்னும் வகைப் பொருள் ஒன்று.

      இபாதத்து எனும்  வணக்கத்தைத் தன்னுள்ளடக்கிக் கொண்ட பிரார்த்தனை யான அர்த்தத்துடன் கூடிய பொருள் மற்றொன்று.

      முந்திய வகை பற்றி இறைவன் தனது பரிசுத்தத் திருமறையில் ( உத்வு இலாஸபீலி றப்பிக்க பில் ஹிக்மத்தி வல் மவ்இளத்தில் ஹஸனத்தி )

      “(நபியே) நீங்கள் உங்களது இரட்சகனுடைய பாதையின் பால் ஹிக்மத்தை (விவேகம்) கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழையுங்கள்) என்று கூறுகின்றான்.   

                       ( 16: 125)

      இவ்வசனத்தில் ‘உத்உ’  என்னும் துஆப் பதம், வணக்கத்தைப் பொதிந்ததாயில்லாத அர்த்தத்தில் ‘அழையுங்கள்’ என வழங்கப்பட்டுள்ளது.

      பிந்தியது பற்றி, வஸீலாவை ஆட்சேபிக்கும் பொருட்டு நிராகரிப்போர் அத்தாட்சியாக எடுத்துக் காண்பிக்கும் ஆயத்துக்களில் வணக்கத்தைப் பொதிந்துள்ள கருத்தில் பிரயோகிக்கப் பெற்றிருக்கும் துஆக்களைப் போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தை வணங்க வேண்டாமென்பதே. இப்பொருளையே வேறு ஆயத்துக்களும் விளக்கிக் காண்பிக்கின்றன.

      “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்க (இபாதத்துச் செய்ய ) வேண்டாம் “  (11 : 2; 11 : 26 )  என்றும்.

      எனவே, அன்பியா அவுலியாக்களை அழைத்துக் கூப்பிடுதல் கூடாது என்பதற்கு ஆதாரங்களாக எதிரிகள் கூறும் ஆயத்துகளிலுள்ள ‘துஆ’ வானது , அல்லாஹ்வைத் தவிரவுள்ளவை தெய்வத் தன்மைக்கு உரித்தானவை, வணக்கத்திற்கு பாத்திரமானவை என்று கருதியுள்ள அவிசுவாசிகள் வி­யத்தில் தான் பொருந்துமேயல்லாது ஹகீகத்தில் எல்லாம் அல்லாஹ் ஒருவனையன்றி வேறு எவருமில்லை என்று விசுவாசம் (ஈமான்) கொண்டுள்ள முஸ்லிம்கள் அன்பியா, அவுலியாக்களை விளித்து அழைக்கும் வி­யத்திற்கு முற்றிலும் பொருந்தாது என்பது யாருக்கும் தெரிந்த வெளிப்படையான வி­யமாகும்.

      உங்களில் சிலர் சிலரை அழைப்பதே போல உங்களுக்கிடையில் ரஸூலை அழைப்பதை நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள் “ என்னும் (24 : 63) குறிப்புடன் கூடிய திருமறை வசனமொன்றுண்டு.

      தப்ஸீர் காஜின் - தப்ஸீர் ரூஹுல்பயான் - ஸாவி முதலியவற்றில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இதன் தாற்பரியம் யாதெனில் உங்களுள் சிலர் சிலரை கண்ணியக் குறைவாகவும் சாதாரணமாகவும் அழைப்பதைப் போல் நபி பெருமானார், றஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை அழைக்காமல் கண்ணியத்துடனும் மரியாதையுடனும்        யா றஸூலல்லாஹ் ! யா ஹபீபல்லாஹ் ! யா நபிய்யல்லாஹ்!  போன்ற அழகிய கண்ணியமான வார்த்தைகளைக் கொண்டு அழைக்க வேண்டுமேன்பதே

.

      சில சந்தர்ப்பங்களில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்தல் இபாதத்திற்கு அவசியமானதாயும் ஆகிவிடுகிறது.

      (அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு )

      “அருமை நபியவர்களே!  உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக” என அவர்களை அழைத்தல் அத்தஹிய்யாத் தில் அவசியமான காரியமாகும். அத்தஹிய்யாத்து இவ்வழைப்பின்றி பூர்த்தியாகாது, அத்தஹிய்யாத்தின்றி தொழுகை பூர்த்தியாகாது.  இதை கவனித்து நோட்டமிட வேண்டும்.

      ஆகவே, முஸ்லிம்கள்  கூப்பிட்டழைக்கும் விளிப்பு, அழைத்தல் சிலவேளை ஆகுமான காரியமாயும் சில வேளை கட்டாயமான காரியமாயும் அமைந்துள்ளது என்பது மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு நன்கு தெரிய வருகிறது.

     

அல்லாஹ்வை அழைப்பதற்கு துஆ என்றும், மற்றவர்களை அழைப்பதற்கு  ‘நிதா’ என்றும் சொல்லப்படும். இந்தத் தாரதம்மியத்தை அறியாதபடி ‘யாறஸூலல்லாஹ் - யா வலிய்யல்லாஹ் - யா முஹிய்யத்தீன் - யா ஷைகு’ போன்ற  பதங்களால் அழைத்தல் ஆகாது என்பதாகத் தெரியாத் தன்மை கொண்டு வஹ்ஹாபிகளான சிலர் கூறுகின்றார்கள் என்பதாக ஹள்ரத்  ஷாஹ் முஹிய்யுத்தீன் ஸாஹிபு வேலூரீ (ரஹ்) அவர்கள் பஸ்லுல் கிதாபில் இமாம்களை ஆதாரமாகக் கொண்டு அறிவிக்கின்றார்கள். மேலும் இத்தகைய விபரத்தை அல்லாமா முப்தீ மஹ்தீ மஹ்மூது ஸாஹிப் மதறாஸி  அவர்களும் பத்ஹுல்  ஹக்கில் கூறியுள்ளார்கள் . எனவே வஸீலாவை முன்னிட்டு அன்பியா, அவுலியா, காமிலீன்களை அழைத்துக் கூப்பிடுதல் ஒருக்காலும் இறை வணக்கமாய் மாறிவிடாது. ஷிர்க்கும் அல்ல.

      அஸ்ஹாபுஸ் ஸுப்பாவிலுள்ள றபீஆ இபுனு கஃபுல் அன்ஸாரி (றலி) அவர்கள் றிவாயத்துச் செய்கின்றார்கள் ;- “நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நானிருந்தேன், வுளுச் செய்வதற்குத் தண்ணீர் , மிஸ்வாக்கு, சீப்பு வகையறாக்களை எடுத்துச் சென்று கொடுத்தேன். அச்சமயத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோக்கி இம்மை. மறுமைக்குரிய நலவான காரியங்களில் உனக்குத் தேவையானவற்றை என்னிடத்தில் கேள்” என்று  சொன்னார்கள்.  நான் தங்களுடன் சொர்க்கத்திலாகி இருப்பதை ஆசிக்கின்றேன்“  என்று கூறினேன். “இத்தோடு இன்னும் வேறென்ன தேவை?” என்று மீண்டும்  அவர்கள் வினவினார்கள். “இதேயல்லாது வேறொன்றும் தேவையில்லை” என்று உரைத்தேன்.

      மேலே குறிப்பிட்ட ஹதீது ஸஹீஹூ முஸ்லிம், இபுனு மாஜா, முஃஜம் கபீர், தப்ரானி - அ´ஃஅத்துல் லமஆத் ஆகிய கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது.

      இந்த ஹதீதில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், உனக்குத்  தேவையானதை என்னிடம் கேள். ஸுவால் செய்! என்று கூறியது இம்மை, மறுமைப் பேறுகளை அளிப்பதைக் குறிக்கின்றது என்பதாக ஹதீதின் ­ரஹில் வருகிறது.  “இம்மையும் மறுமையும் உங்களால் கிடைத்த சன்மானத்தில் நின்றுமே உண்டானவை; மேலும். லவ்ஹு கலம் உடைய கல்வி உங்களின் ஞானங்களிலிருந்தே உண்டானவை.

      ( பஇன்ன மின் ஜுதிகத் துன்யா வளர்ரத்தஹா - வமின் உலூமிக்க இல்முல் லவ்ஹி வல் கலமி ) என கஸீதத்துல் புர்தாவில் இமாம் பூஸரி (றஹ்) அவர்கள் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள். “ ஆண்டவனுடைய உத்திரவு கொண்டு ஸர்வரே ஆலம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இம்மை, மறுமையின் அருட்கொடை (நிஉமத்து) களை அளிக்கின்றார்கள் “ என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களின் விசுவாசமாகும்.

      (அன காஸிமுன் வல்லாஹு யுஃத்தீ ) “கொடுக்கின்றவன் அல்லாஹ், பங்கு வைப்பவன் நான்“ என ஸஹீஹ் புகாரியில் காணப்படும் ஹதீதை. இமாம் இபுனு ஹஜர் மக்கீர் (றஹ்)  அவர்கள், ­ரஹு ஹம்ஸிய்யா, 192 - ஆவது பக்கத்தில் எடுத்துரைத்து, “ ஆண்டவன் தனக்குச் சொந்தமாயுள்ள  உணவளித்தல் உள்பட அறிவு, ஞானம், வழிபாடு முதலிய எல்லாவிதமான பொக்கி­ங்களின்  சாவிகளையும் தனக்குப் பிரதிநிதியும், (ஹபீபு) தோழருமான நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  வசம் கொடுத்திருக்கின்றான். அவர்கள் பங்கு வைத்துக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் அவர்கள் மூலமாகவே சகலமும் அளிக்கப்படுகின்றன” என்பதாக கூறுகின்றார்கள்.         

(தொடரும்)