ஞானத்துளிகள்
தொகுத்தவர்: - செல்வி G.R.J திவ்யா பிரபு I.F.S, சென்னை
உலகக் கடமைகளை ஒருவன் எவ்வளவு காலம் செய்து கொண்டிருக்க வேண்டும்?
* பிஞ்சு தோன்றும்பொழுது பூ தானாக உதிர்ந்து போகிறது. பிறகு உலகக் கிருத்தியம் எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை. அதைச் செய்வதற்கு எண்ணமும் அப்பொழுது வருவதில்லை.
* இல்லற வாழ்வு வாழ்பவர்களுக்கும் இறையருள் கிட்டுமல்லவா?
* அனைவர்க்கும் ஆண்டவனுடைய அருள் நிச்சயமாகவே கிட்டும். ஆனால் ஒவ்வொருவரும் குரு காட்டியுள்ள நன்னெறியைக் கடைப்பிடிக்கவேண்டும்.
* ஆத்ம சாதனத்தின் பெயரால் சாதகன் ஒருவன் தன் மனைவி மக்களின் கடமைகளைக் கவனிக்காது விட்டு விடலாகாது. அப்படிச் செய்வது வெட்க கரமான காரியம். தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு தக்க முறையில் ஆதரவு அளிப்பதும் ஆத்ம சாதனமாகும்.
சிஷ்யர்: உலகில் நாங்கள் எப்படி வாழ வேண்டும்?
* பரமஹம்ஸர் ; உங்களுக்கு அமைந்துள்ள கடைமைகளையயல்லாம் முறையாகச் செய்யுங்கள். அதற்கிடையில் மனதை இறை மீது நாட்டிவையுங்கள். உற்றார் உறவினர்க்கு வேண்டியவாறு பணிவிடை செய்யுங்கள். அன்புடன் அவர்களைப் பரிபாலியுங்கள். ஆனால் உண்மையில் அவர்கள் உங்களுக்குச் சொந்தம் அல்ல என்பதை உள்ளத்தினுள் உறுதியாகக் கொண்டிருங்கள்.
குடும்பத்துக்கு ஒருவன் எவ்வளவு காலம் தன் கடமையைச் செய்ய வேண்டும்?
* குடும்பத்திலுள்ளோர் ஆதரவற்றவர்களாய் இருக்கும் பொழுது குடும்பஸ்தன் ஒருவன் அவர்களைப் பராமரித்து வரவேண்டும். ஆனால் தன் மைந்தனுக்கு வயது வந்து தனக்குத் தானே பொருள் தேடிக்கொள்ள வல்லவனாகும் பொழுது தந்தை அவனுக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்றும் இல்லை. குஞ்சு தனக்குத்தானே இரைதேடிக் கொள்ள வல்லதாகும் பொழுது அதைத் தன்னிடத்திலிருந்து தாய்க் கோழி விரட்டியோட்டி விடுகிறது. குடும்ப அல்லல் என்னும் படுகுழியிலேயே பலர் மூழ்கிப் போகின்றனர். சாதனங்கள் புரிந்து மனதை இறையிடத்து வைத்திருக்கும் வெகு சிலரே குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கெட்டுப் போகாதிருக்கின்றனர்.
அதிகம் செல்வம் சம்பாதிக்க நாம் முயற்சி எடுத்துக் கொள்ளலாமா?
* குடும்பத்திலிருப்போரெல்லாம் இறைப்பற்று உடையவர்களாக இருப்பார்களாகில் அவர்களை கவனிக்கும் பொருட்டு அதிகம் செல்வம் தேடுதற்கு அனுமதி உண்டு; வருவாயை அதிகப்படுத்தலாம். ஆனால் அதற்கு நேர்மையான முறையைக் கையாள வேண்டும். பணம் சேகரிப்பது வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல; ஆண்டவனுக்கு அரும் பணியாற்றுவதே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். இறைச் சேவைக்காக பயன்படுத்தும் செல்வத்தில் தீங்கு இல்லை.
* சந்நியாசி ஒருவனுக்கு இத்தகைய வியங்களைப் பற்றிய ஞாபகம் வருவதில்லை. ஆனால் குடும்பஸ்தன் ஒருவனுக்கோ வியங்களைப் பற்றிய ஞாபகம்தான் வந்து கொண்டிருக்கிறது. ஆதனால் குடும்பி ஒருவன் தன்னை இறைவனுடைய தாசனாகக் கருதிக் கொள்ளவேண்டும்.உலகத்தவன் ஒருவன் தனது உலகக் கிருத்தியங்களுக்கிடையில் இறைவனைப் பற்றிக் கருதுவது மிகக் கடினம்.
* பணக்காரன் வீட்டில் இருக்கும் வேலைக்காரி வீடு, வாசல், பணக்காரனுடைய குழந்தை ஆகிய அனைத்தும் தனக்குரியவைகள் எனக் கருதிப் பணியாற்றி வருகிறாள். அதற்கிடையில் தன் சொந்த வீடு எட்ட எங்கேயோ ஒரு கிராமத்தில் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறாள். அதே விதத்தில் உலகில் உன்னைச்சார்ந்துள்ள அனைவருடன் சொந்தம் பாராட்டு. உண்மையில் இறைவன் ஒருவன்தான் உனக்குச் சொந்தம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
* தந்தையே மைந்தனாக வடிவெடுத்துப் பிறக்கிறான். ஒருவனுக்கு நல்ல மைந்தன் வாய்ப்பானாகில் தந்தையினிடத்து அதற்கேற்ற நல்லியல்பு அமைந்திருக்கிறது என்பதை அது வெளியாக்குகிறது.
* துறவி ஒருவன் சர்வகாலமும் இறைவனைச் சிந்திப்பதில் வியப் பொன்றுமில்லை. ஆனால் குடும்பஸ்தன் ஒருவன் தனது குடும்ப பாரத்துக்கிடையில் இறையைக் கருத்தில் வைக்க முயலுவானாகில் அது பெரிதும் பாராட்டத்தக்கது.
* சான்றோர் ஒருவர் ஒரு வீட்டுக்கு எழுந்தருளும் பொழுது அவ்வீட்டார் வந்திருப்பவரை முறையாக உபசரித்து விருந்தோம்பவேண்டும். வந்தவரைக் கவனியாது விட்டுவிட்டால் அவ்வீட்டார்க்கு அது தீமையாய் முடியும்.
* நீ இப்பொழுது இருக்கிறபடி குடும்பஸ்தனாகவே இரு. ஆனால் குடும்பஸ்தனாயிருப்பதற்கிடையில் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை நீ தெரிந்திருக்க வேண்டும். உலகப்பற்று உன்னைக் கெடுத்துவிடும்; ஆனால் இறைப்பற்றே உன்னை மேல் நிலைக்கு எடுக்கும். பற்றற்றிருந்து இறைவனுக்காக வென்று பணிவிடை செய்.
* முதுகில் பிளவை வந்திருக்கும் ஒருவன் மற்ற அலுவல்களையயல்லாம் செய்வதற்கிடையில் அப்பிளவையின்மீது சிறிது கருத்தைச் செலுத்திக் கொண்டேயிருப்பான். அதே விதத்தில் நீ குடும்பக் காரியங்களைச் செய்து கொண்டிப்பதற்கிடையில் இறைவனைப் பற்றிய எண்ணம் உறுதியாக இருக்கட்டும்.
* குடும்பஸ்தன் ஒருவனுக்கு போகம், யோகம் ஆகிய இரண்டும் இருக்கவேண்டும். அதாவது அவன் பொருளையும் அருளையும் தேட வேண்டும். பொருளில்லாது அவன் அருளைத் தேடுவானாகில் அவனுடைய முகமே உலர்ந்தது போலத் தென்படும் .மிகைப்பட்ட பொருளை அவன் நாடுவானாகில் அவன் அதில் மூழ்கிப்போவான்.
* குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கும் கட்டுப்பாடு மிக அவசியமானது. முயன்றால் நெறியான வாழ்க்கை வாழ்தலில் அவர்களும் வெற்றி பெறுவார்கள்.
(தொடரும்)