• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Nov 2011   »  நல்ல பெண்மணி


நல்ல பெண்மணி

நெடுந்தொடர் ... 

(நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

 

ஆணும், பெண்ணும் தனித்திருப்பதால்  ஏற்படூம் அபாயத்தைத் தமிழர்கள்  அந்தக் காலத்திலேயே நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கு ‘ஆசாரக் கோவை’ யிலுள்ள  இந்தப் பாடல் ஆதாரமாகும்.

      “ஈன்றாள், மகள், தன் உடன் பிறந்தாளாயினும்

        சான்றார் தமியார் ஐம்புலனும் தாங்கற் கெளிதாகலால்.”!

      இதன் பொருள், “தம் தாய், மகள், சகோதரி ஆகியவர்களுடன் கூடத் தனித்திருக்க மாட்டார்கள் சான்றோர்கள், தம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணி”  என்பதாகும்.

      ஆஸ்திரிய நாட்டு மனவியல் நிபுணர் ஒருவர், “எவ்விதத் தடுப்பு முறைத் தடங்கலுமின்றி, ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஐந்து முறை உரையாடினால், அவர்கள் ஒழுக்கக் கேட்டில் விழுந்து விட முடியும்”  என்று கூறியிருக்கிறார். இதையயல்லாம் அறியாமல் சில பெண்கள் அந்நிய ஆண்களைத் தம்  பிரயாணத்திற்குத் துணையாக அழைத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

        ஒரு சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,, “ஒரு பெண், ஓர் ஆணோடு தனித்திருக்கலாகாது. தன்னை மணக்கத்  தடை செய்யப்பட்டவரில் ஒருவர் தன்னோடு  இருந்தால் அன்றி”  என்று கூறினர்.

      அப்பொழுது  ஒருவர் எழுந்து நின்று , “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மெய்யாகவே என் மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்படவிருக்கிறாள். ஆனால் , நான் இன்ன இன்ன போருக்குச் செல்ல வேண்டும் என என் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது!” என்று கூறினார். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “செல்லும்!  உம் மனைவியோடு ஹஜ்ஜுச் செய்யும்!” என்று  கூறினர்.

      ‘எவர், எவருடன் நாங்கள் பிரயாணம் செய்யலாம்?’  என்று நீங்கள் கேட்கலாம். உங்களின் தந்தை, உங்களின் சகோதரர்கள், உங்களின் மகன். திருமணம் செய்யக் கூடாத  உறவில் உள்ள   உங்கள்  உறவினர்கள், இவர்களுடன் நீங்கள் பிரயாணம் செய்யலாம். அது குறைந்த தொலையாயிருந்தாலும் சரி, அதிகத் தொலையாயிருந்தாலும் சரி.

      சில பெண்கள் எவர் துணையுமின்றி தனியாகப் பிரயாணம் செய்கின்றனர். அவர்கள் அண்ணல் நபி (ஸல்)  அவர்களின்  இந்த அறிவுரையை மனதிற் கொள்ள வேண்டும்.“அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் விசுவாசங் கொண்டிக்கும் ஒரு பெண், தன்னோடு, தன்னை மணக்கத் தடை செய்யப்பட்டவரில் (எவரையும் அழைத்துச் செல்லாது) எவர் துணையுமின்றி ஓர்  இரவு பகல் பயணம், தொலைவு பிரயாணம் செய்வது ஆகுமானதல்ல.”  குறைந்த  தொலைவு  துணையின்றிப் பிரயாணம் செய்தாலும் அதிகத் தொலைவு பிரயாணம் செய்யக் கூடாது என்பதை நீங்கள் இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

      உங்கள் வீட்டில் நீங்கள் மட்டும் தனித்திருக்கும் போது, அந்நிய ஆண்கள் எவராவது உங்கள் கணவரைப் பார்க்க வந்தால், உங்கள் கணவர் வீடு திரும்பும் நேரத்தைக் குறிப்பிட்டு அப்பொழுது வரும்படி மரியாதையாகக் கூறி அனுப்பி வைத்து விடுங்கள் ! அவர்களுக்கு எதிரே நிற்காதீர்கள்! அவர்களுடன் இனிய குரலில் உரையாடாதீர்கள்! கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறிவிட்டுப் பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்!  அவர்களுடன் இனிய குரலில் பேசுவதன் தீமையை அறிந்து, அல்லாஹ். அண்ணல் நபி (ஸல்)  அவர்களின் மனைவிமார்களுக்கு இப்படி எச்சரிக்கை செய்கிறான்:

      “நபியின் மனைவிகளே!  நீங்கள் பெண்களில் இதரப் பெண்களைப் போன்றவர்கள் அல்லர், (எனவே) அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களா யிருப்பின்  (அந்நியர்களுடன் பேசும் போது)  நளினமாக ( இனிமையுடன் ) பேசாதீர்கள் ! ஏனெனில் எவனுடைய இதயத்தில் (பாவ) நோய் இருக்குமோ அவன் (தவறான) விருப்பம் கொள்ளக் கூடும்”   (33 : 32)     

   

      இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியருக்குச் செய்யப்பட்ட எச்சரிக்கை எனில் உங்கள் நிலை என்ன?

      அல்லாஹ் இன்னோர் இடத்தில் இவ்விதம் கூறுகிறான்:  “நீங்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குப் பயந்து, ‘தக்வா’ வுடன் நடந்து கொள்ள விரும்புவீர்களாயின், நேரிலுள்ள ஆண்களின் மனதில் குழப்பமோ இச்சையோ ஏற்படும்  விதம் உரையாடாதீர்கள் !”

      அந்நிய ஆண்களுக்குப் பெண்கள் முந்திக் கொண்டு ‘ஸலாம்’ கூறக்கூடாது.

      தொழுகையில் இமாம் ஏதாவது தவறுதலாக ஓதிவிட்டாலோ, செய்து விட்டாலோ அவரின் தவறை எடுத்துக் காட்டுவதற்காக ‘சுப்ஹானல்லாஹ்’  என ஆண்கள் கூற வேண்டும். ஆனால்  பெண்கள் அவ்விதம் கூறித் தம் குரலை வெளிக் காட்டாமல்  தம் கைகளை மெல்லத் தட்ட வேண்டும்.

      அந்நிய ஆண்களின் எச்சில்பட்ட உணவைப் பெண்கள் உண்ணக் கூடாது. அதேபோல் அந்நியப் பெண்களின் எச்சில்பட்ட உணவை ஆண்கள் உண்ணக் கூடாது. அந்நிய ஆணின் அல்லது பெண்ணின் எச்சில்பட்டது என்பதைத் தெரியாமல் ஓர் உணவை உண்டுவிட்டால் அதில் தவறில்லை.    

(இன்னும் வருவாள்)