மறைப்பவன்
- ஆலிம் புலவர்
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று சத்தார் என்பதாகும். சத்தார் என்றால் மறைப்பவன் என்று பொருள். அதாவது அடியார்களின் குற்றம், குறை, பாபங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொள்பவன் என்பது கருத்து. மனிதர்களில் குற்றங்களிலிருந்து தப்புவோர் மிகக்குறைவு.
ஓரிடத்தில் நூறுபேர் கூடியிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர்களில் நேற்று தவறிழைத்தோர், இன்று பிழைசெய்தோர், ஒரு வாரத்திற்கு முன் பாபம் செய்தோர், ஓராண்டுக்குமுன் தீமை செய்தோர் என பலரும் கலந்து இருக்கலாம். அவர்கள் செய்த குற்றங்கள் யாருக்காவது தெரிந்ததா? தெரியுமா? தெரியாது!
அல்லாஹ் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறான்.
ஏன் மறைத்துள்ளான்? அது அவனது ரஹ்மத் எனும் கருணை - இரக்கம்.
அதனை வெளிப்படுத்தித் தெரியச் செய்துவிட்டால் செய்தவரின் மதிப்பு - மரியாதை - கண்ணியம் சிதைந்துவிடும். ஆனால் அல்லாஹ்வோ கண்ணியமானவன். கண்ணியத்தை விரும்புகிறவன் ஒருவேளை, செய்த பாபம் வெளியே தெரிந்துவிட்டால் நாம் செய்த தவறு எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே! இனிமேல் எப்படி இருந்தால் என்ன? என, மரியாதைக்கு அஞ்சாமல் மேலும் மேலும் பிழைசெய்யச் சித்தமாகி விடுவான்.
பாபங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தால், ஒருநேரத்தில் அவன் திருந்தும்போது நல்ல பிள்ளைபோல - நல்ல மனிதர்களோடு சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.அதன்பின் நல்வாழ்வு வாழ இடமுண்டு. அல்லாஹ் மறைத்து வைக்கும் நுட்பம் இதுவாகவும் இருக்கலாம்.
இறைவன் பாபத்தை மட்டும் மறைப்பதில்லை. நன்மையையும் மறைத்து வைப்பவன்தான். இக்லாஸாக- அல்லாஹ் ரஸூலின் பொருத்தத்திற்காக - நன்மை செய்பவர்களின் நற்செயல்களை, அவர்கள்விருப்பம் போலவே அல்லாஹ் மறைத்து வைக்கிறான். இடது கை அறியாமல் வலது கையால் தர்மம் செய்பவர்களின் பெயர்களை அல்லாஹ் விளம்பரப் படுத்துவதில்லை.
பொதுவாக, மனிதன்தவறு செய்யும்போது பிறர் பார்க்கக் கூடாதே என ஒளிகின்றான். அதே சமயம் நற்செயல்கள் செய்யும்போது பிறர் பார்வையில் படாதா என ஏங்குகிறான். இந்த நிலைக்கு மாறுபட்டு அல்லாஹ்விற்காக வாழ்பவர்களை அல்லாஹ் தனது அன்புத் திரையால் போர்த்தி மறைத்துக் கொள்கிறான்.
சத்தார் என்ற அவனது திருநாமம் இம்மையோடு நிறைவடைய, மறுமையில் கஹ்ஹார் - ஜப்பார் - அடக்கி ஆள்பவன் ஆக வெளிப்படுவான்.
அப்போது மறைந்தவை, மறைத்தவை எல்லாம் வெளிப்படுத்தப் பட்டுவிடும். அந்த நாளை அனைவரும் அஞ்ச வேண்டும்.
பொதுவாக, மனிதன்தவறு செய்யும்போது பிறர் பார்க்கக் கூடாதே என ஒளிகின்றான். அதே சமயம் நற்செயல்கள் செய்யும்போது பிறர் பார்வையில் படாதா என ஏங்குகிறான்.
இந்த நிலைக்கு மாறுபட்டு அல்லாஹ்விற்காக வாழ்பவர்களை அல்லாஹ் தனது அன்புத் திரையால் போர்த்தி மறைத்துக் கொள்கிறான்.
சத்தார் என்ற அவனது திருநாமம் இம்மையோடு நிறைவடைய, மறுமையில் கஹ்ஹார் - ஜப்பார் - அடக்கி ஆள்பவன் ஆக வெளிப்படுவான்.
அப்போது மறைந்தவை, மறைத்தவை எல்லாம் வெளிப்படுத்தப் பட்டுவிடும். அந்த நாளை அனைவரும் அஞ்ச வேண்டும்.