\அற்புத வரலாறு
அற்புத வரலாறு
அத்தியாயம் : 83
ஈடு இணையற்ற ஸஹாபாக்களின் வீர மரணம்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அண்மித்துவிட்ட இந்தப் பாவி உபை இப்னு கல்ப் என்பவன் யார் தெரியுமா? அவன் பத்ருச் சண்டையில் முஸ்லிம்களிடம் பிடிபட்டு கைதியாகி பின்னர் ஈட்டுத் தொகை கொடுத்து விடுதலையானவன். இப்படி விடுதலை யாகிப் போகும்போது அந்தப் பாவி, நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, நல்ல கொழுத்த குதிரையயான்று என்னிட மிருக்கிறது. அதன் மீது இருந்து, உம்மை நான் கொல்லுவேன்‘’ என்று சபதமிட்டுச் சென்றவன். இப்போது அப்பாவியின் சபதத்திற்குப் பதிலாக அருமை நாயகம் அவர்கள், இல்லை! அல்லாஹ்வின் நாட்ட மிருந்தால் நீ தான் என்னுடைய கையினால் கொல்லப்படுவாய்’’என்று சொல்லியனுப்பினார்கள்.
அண்ணலாருக்கு அருகில் வந்த அவனைத் தாக்குவதற்கு பல தோழர்கள் வாளுடன் பாய்ந்தார்கள், அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ தோழர்களே! நீங்கள் சற்று விலகிக்கொண்டு அவனை என்னிடம் வர விடுங்கள்” என்று சொல்லிவிட்டு ஹாரிஸ் இப்னு ஸம்ஆ (ரலி) என்பவரிடமிருந்து ஈட்டியை வாங்கி, முன்சென்று உபையைக் குறிவைத்து எய்தினார்கள். அந்த ஈட்டியானது அவனது விலாப்பகுதியில் பாய்ந்தது. உடனே அவனது விலா எலும்பு முறிந்துபோனது. அவன் ஏறிவந்த கொழுத்த குதிரையை திருப்பிக் கொண்டு குறை´களிடம் ஓடினான்.
அவனைக் கண்ட குறை´யர்,என்ன இந்த சப்தம் போடுகிறாய்? விலா எலும்புதானே முறிந்துள்ளது. உயிரா போய்விட்டது? என்று கேட்டார்கள். ’’இந்த வலியை நான் சொல்லிக் காட்ட முடியாது. நான் அனுபவிக்கும் வேதனையை உங்கள் அனைவர் மீதும் இறக்கிவைத்தால் அதனால் நீங்கள் அனைவருமே மாண்டு போவீர்கள். ஐயோ! என் உயிர் துடிக்குதே! அன்றே முஹம்மது சொன்னார். அல்லாஹ் நாடினால் நான்தான் உன்னைக் கொல்லுவேன் என்று. அது நடக்கப் போகிறது. சத்தியமாகச் சொல் கிறேன். அவரது எச்சில் என்மீது பட்டாலே போதும், நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று புலம்பித் தீர்த்தான். போர்முடிந்து மக்கா செல்லும் வழியிலேயே இந்தப் பாவி துடிதுடித்துச் செத்தான்.
யுத்த களத்திற்கு அண்ணல் நபிகளாரின் அருமை மகளார் பாத்தி முத்து ஜஹ்ரா (ரலி) அவர்கள் ஓடி வந்தார்கள். தம் அருமைத் தந்தையார் முகத்தில் காயம் பட்டிருப்பதைக் கண்டு துடிதுடித்துப் போனார்கள், அண்ணலார் முகத்தில் குத்தியிருந்த கவசத் துகள்களை அபூ உபைதா (ரலி) என்ற தோழர் தம் பற்களால் கடித்து வெளியே எடுத்தார்கள். அதனால் அந்தத் தோழரின் இரண்டு பற்கள் உடைந்து விட்டன. ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் தம் கேடயத்தில் தண்ணீர் கொண்டுவர அதை வாங்கி அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் தம் அருமைத் தந்தையார் முகத்தில் வடியும் இரத்தத்தைக் கழுவினார்கள். அப்போதும் இரத்தம் நிற்காமல் வெகுநேரம் கழிந்தே நின்றது.
குறை´க்குலப் பெண்கள் பலர் யுத்த களத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களின் சரீரங்களை அலங்கோலப் படுத்தி மகிழ்ந்தார்கள். பிரேதங்களின் காதுகளையும் மூக்கு களையும் அறுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஆடினார்கள். அபூஸுப்யா னுடைய மனைவி கொடும்பாவி ஹிந்தா என்பவள் மாவீரர் ஹள்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களில் மார்பைக் கிழித்து ஈரலைப் பிடுங்கி தன் வாயால் கடித்துத் துப்பினாள். அப்பப்பா என்ன கொடுமை! என்ன கொடுமை! ஹள்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் சகோதரி ஸபியா (ரலி) போர்க்களத்திற்கு வந்தார்கள், அவர்களை அவரது சகோதரரின் பிரேதத்தைப் பார்த்து விடாதபடி தடுக்கச் சொன்னார்கள் அருமை நபிகளார்.
ஆனால் அந்த மாவீரரின் தமக்கையும் வீராங்கனை அல்லவா? என்னைத் தடுக்க வேண்டாம்! நான் ஒன்றும் கோழையல்ல! என்று கூறிச் சென்று தமது அருமை சகோதரரின் உடலைப் பார்த்தார். அது அலங்கோலமாகக் கா ட்சியளித்தது. எப்படி இருந்திருக்கும் அந்தப் பெண்மணியின் மனசு? கண்களில் நீர் சொட்டச் சொட்ட இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ’’என்று கூறினார். பிறகு தாம் கொண்டு வந்திருந்த இரண்டு துணிகளைக் கொடுத்து அவர்களை கஃபனிடச் சொன்னார்கள்.
ஹள்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலுக்குப் பக்கத்தில் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களது உடலும் அலங்கோலமாகக் கிடந்தது. அதனால் அவ்விரு துணிகளைக் கொண்டு அவ்விருவரையும் போர்த்தி நல்லடக்கம் செய்தார்கள். ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவுய்ப் (ரலி) அவர்கள் உடலில் இருபதிற்கும் அதிமான வெட்டுக் காயங்களுடன் நடக்க முடியாதபடி வெட்டுண்டு கீழே கிடந்தார். இப்படித்தான் சஹாபாக்கள் ஹீதானார்கள்.
அன்றைய முஸ்லிம்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸலலம் அவர்கள் மீது எவ்வளவு அன்பு, பக்தி, பாசம் கொண்டிருந்தார்கள் என்பதும் அவர்களுக்காக தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணிப்பதில் எத்துணை ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதும் இந்தச் சம்பவங்களைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியம். இப்போது நாம் நமது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு, பக்தி, பாசம் இதற்கு ஈடாகுமா? நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பாருங்கள்!
(தொடரும்)
உரைத் தொகுப்பு : ஆஸிகுல் கலீல் B.com திருச்சி.